For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் முயற்சியை முறியடிப்போம்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் முயற்சியை முறியடிப்போம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் முயற்சியை திமுக முறியடிக்கும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து விடவேண்டும் என நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆதிக்கவெறிக்கு, வலிமையான எதிர்ப்புக் குரலை தி.மு.கழகம் பதிவுசெய்து, அத்தகைய முயற்சிகளை முறியடித்து வருகிறது. தாய்மொழி மீது அக்கறை கொண்ட மற்ற இயக்கங்களும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வருகின்றன.

மாநிலத்தின் ஆட்சியில் அமர்ந்துள்ள குதிரை பேர பினாமி அரசு மட்டும் முனைப்பான எதிர்ப்பைக் காட்டாமல், முனை மழுங்கிய கத்தியாகி பா.ஜ.க. அரசுக்கு அடிமைச் சேவகம் செய்து, அதன்மூலம் பலவிதமான பலன்களைக் கண்டு வருகிறது. நீட் தேர்வு, நவோதயா பள்ளிகள் என மாநிலத்தின் கல்வி உரிமையை மொத்தமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்று, அதன் தொடர்ச்சியாக சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதே பா.ஜ.க. அரசின் கொள்கை, செயல்திட்டமாக உள்ளது.

அடுத்த ஆண்டில் மும்மொழி கொள்கை

அடுத்த ஆண்டில் மும்மொழி கொள்கை

சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது, இந்தி மொழி வளர்ச்சிக்கு பிற இந்திய மொழிகளைவிட அதிக நிதியை செலவிடுவது என இந்தித் திணிப்புக்காக தொடர்ந்து பல்வேறு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மறைமுக ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காக்க வேண்டிய அரணாக விளங்க வேண்டிய மாநில அரசு, தமிழக பள்ளிகளில் வரும் 2018-19 கல்வியாண்டில் மும்மொழி பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக ஏடுகளில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சித் தரக்கூடியனவாக உள்ளன.

மும்மொழி பாடத்திட்டம்

மும்மொழி பாடத்திட்டம்

மத்திய பா.ஜ.க. அரசு ‘காலால்' இடும் உத்தரவுகளை, ‘தலையில் சுமந்து' நிறைவேற்றி வரும் குதிரை பேர எடப்பாடி அரசிடம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் வழங்கியுள்ள மும்மொழி பாடத்திட்ட ஆலோசனைகளை, மாநில பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்கள், தாய்மொழி மீது ஆதிக்க சக்திகள் படையெடுத்துள்ள ஆபத்தினை அறிவித்துள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் தந்து, இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பாகவே தொலைநோக்குப் பார்வையுடன், பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, இந்தி மொழி ஆதிக்கத்திற்கு தடைப்போட்டார்.

மத்திய அரசுக்கு வால் பிடி வேலை

மத்திய அரசுக்கு வால் பிடி வேலை

அப்படிப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை, கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு ‘குதிரை பேர' ஆட்சியை நடத்தி வரும் ஆட்சியாளர்கள், மொழிப் போருக்கான களத்தில் ஏந்திய வாளைக் கீழே போட்டுவிட்டு, மத்திய அரசுக்கு வால்பிடித்து நிற்கும் நிலையில், மீண்டும் இங்கே இந்தியின் ஆதிக்கத்துக்கு வழி வகுக்கும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கும் முயற்சிக்கு அவர்கள் வரவேற்பு அளிக்கின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ‘நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம்' என கபடநாடகம் ஆடிவிட்டு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளி, மாணவி அனிதாவின் உயிர்பறிப்புக்குத் துணைப்போன ‘குதிரை பேர' எடப்பாடி அரசு, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் மத்திய அரசு வெட்டியுள்ள குழியில் அனைவரையும் வீழ்த்தத் தயாராகி வருகிறது.

தமிழ் மொழி உரிமைகள்

தமிழ் மொழி உரிமைகள்

திமுகவை பொறுத்தவரையில், அது எந்த மொழிக்கும் எதிரான இயக்கம் அல்ல. ஆனால், தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக் கொடுக்காத இயக்கம். பிற மொழிகளின் அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் எதிரான இயக்கம். தமிழ்நாட்டில் இந்தி பிரசார சபா அமைப்பின் கீழ் ஏராளமான கிளைகள் உள்ளன. அதன்மூலமும், பிற தனியார் அமைப்புகள் மூலமும் இந்தி மொழி கற்பிக்க எந்தத் தடையும் இல்லை. இதனைமீறி, அரசு பள்ளிகள் மூலம் இந்தியைத் திணிக்க நினைக்கும் மத்திய அரசின் கெடுபிடிகளையும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தெம்பின்றி, தாய்மொழியை அடகு வைத்து, இந்தி ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மாநில அரசின் அடிமைத்தனத்தையும் தி.மு.கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK working president MK Stalin said that his party will defeat the central and Tamil Nadu government move to impose Hindi on government school students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X