For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் வந்தாச்சு.. சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்- சட்டசபையில் ஜெ. அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிப்ரவரி 24ம் தேதி முதல் சென்னையில் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான பஸ் பாஸ் வழங்கப்படும் என்றும், அதற்கான விண்ணப்பங்களை பேருந்து பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம், அரசு போக்குவரத்துக்கழக இணையதளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா இன்று வாசித்த அறிக்கை:

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது பற்றி அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

Free bus pass for senior citizen: Jayalalitha announced in Assembly

இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துநரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விழைவோர் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தினை இணைத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை போக்குவரத்து துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டம் 24.2.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்களிடையே உள்ள வரவேற்பைக் கண்டறிந்து மற்ற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

என்னுடைய இந்த அறிவிப்பின் மூலம் 2011ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக பல்வேறு நலத் திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை

2011ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா.

அதேபோல,ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைமையகங்களில், முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவும், புத்தக நிலையமும், தியான மண்டபமும், இனிமையான இயற்கை சூழலும் ஏற்படுத்தப்பட்டு, ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் மத்தியில் அன்பு, பாசம் மற்றும் அறிவு பரிமாற்றம் ஏற்படும்படியாக திட்டம் தீட்டப்படும்.

அங்கு ஒருவருக்கொருவர் ஆதரவு என்ற இனிமையான சூழல் ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு தொலை தொடர்பு மருத்துவ வசதியும் ஏற்படுத்தித் தரப்படும். அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக பணி செய்யும் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடன் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தும். அதற்குத் தேவையான நிலம், கட்டமைப்பு மற்றும் அதை நடத்த தேவையான நிதியும் தரப்படும். பெரிய தொழில் நிறுவனங்களின் உதவி பெற்று இத்திட்டத்தை தொடர்ந்து நடத்த வழிவகை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

ஆட்சி முடியப்போகும் இந்த தருணத்தில் இலவச பஸ் பாஸ் திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் அறிவித்துள்ளார்.

English summary
Free bus pass (Chennai city bus) will be issue for senior citizen: Jayalalitha announced in Assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X