For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெப்சி நிறுவனத்தை தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதா? சீறும் ராமகிருஷ்ணன்

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்கி பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பெப்சி நிறுவனம் தண்ணீர் எடுக்கும் பிரச்சனை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெப்சி நிறுவனத்திற்கு குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்கி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 G. Ramakrishnan's statement regarding allowed MNCs Pepsi

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தாமிரபரணியில் இருந்து கோகோ கோலா நிறுவனத்துக்கு குடிநீர் மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலைக்காக நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், பெப்சி குளிர்பான தொழிற்சாலைக்கு நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியுள்ளதையும் சேர்த்து ஒரு நாளைக்கு 24 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் நடைபெறாத நிலை ஏற்படும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என தடை பெறப்பட்டது.

இந்நிலையில்தான் இந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் பொய்த்துப்போனதால் தமிழகத்திலுள்ள ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே, மாநில அரசு தமிழ்நாடு முழுவதையும் வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளது.

தாமிரபரணி ஆறு ஏற்கெனவே வறண்டு கிடக்கிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் கிடையாது. கால்நடைகளுக்கு தண்ணீர் கிடையாது. குடிதண்ணீருக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை தான் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பன்னாட்டு கம்பெனியான பெப்சி நிறுவனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே இருந்த தடையை நீக்கி அனுமதி அளித்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே வறண்டு கிடக்கிற அந்த ஆற்றில் நிலத்தடி நீர் மிகவும் கீழே செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ள நிலையிலும், மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு ஆட்பட்டுள்ள நிலையிலும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது.

சமீபத்தில், சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க விதித்திருந்த தடையை நீக்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. குடிதண்ணீருக்காவும், விவசாயத்திற்காகவும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிற நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்கி பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறது.

English summary
G. Ramakrishnan's statement regarding the Madurai HC bench has allowed MNCs Pepsi, Coke to take water from Tamirabarani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X