"செத்தும் கொடுத்திட்ட சீதக்காதியே" ஹிதேந்திரா!...இறந்த மகனுக்கு தந்தை பிறந்தநாள் மடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சாலை விபத்தில் உயிரிழந்து உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவன் ஹிதேந்திரனின் 24வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தை அசோகன் முகநூலில் நெகிழ்ச்சி மடல் எழுதியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு சென்னை மகாபலிபுரம் அருகே திருக்கழுக்குன்றத்தில் பதினோறாம் வகுப்பு மாணவன் ஹிதேந்திரன் சாலை விபத்தில் சிக்கினார். தனது தந்தையின் இருசக்கர எடுத்துக் கொண்டு நண்பனை சந்தித்து திரும்பியவனுக்கு எமன் ஒரு மீன்பாடி வண்டி ரூபத்தில் வந்தது. எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தில் தலையில் ஹிதேந்திரனுக்கு அடிபட்டது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டவன் நினைவிழந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டான். ஹிதேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் கை விரித்ததோடு, மூளை செயல் இழந்து விட்டது. இதயம் மட்டுமே துடிக்கிறது கிட்டதட்ட மரணம் உறுதி என்று கூறிவிட்டனர். ஆனால் அந்த சமயத்தில் ஹிதேந்திரனின் பெற்றோர் எடுத்த முடிவு இன்று பலரின் வாழ்வில் ஒளியேற்ற காரணமாக அமைந்தது.

உடல் உறுப்பு தானம்

ஹிதேந்திரனின் அப்பா அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலியும் மருத்துவர்கள் என்பதால் நிலைமையை புரிந்து கொண்டு ஹிதேந்திரனின் இதயத்தை தானம் செய்ய முன்வந்தனர். அகற்றப்பட்ட ஹிதேந்திரனின் இதயம் 20 நிமிடங்களில் அண்ணாநகரில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு பொருத்தப்பட்டது.

சிறுமிக்கு இதயம்

புயல் வேகத்தில் செயல்பட்டு மருத்துவத்துறையும், காவல்துறையும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து இந்த காரியத்தை வெற்றியாக்கினார்கள். எனினும் தங்களது செல்ல மகனின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த பெற்றோரின் மன உறுதி அனைவராலும் பாராட்டப்பட்டது.

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு

ஹிதேந்திரனின் மரணத்தால் உடைந்து போன அவனது குடும்பத்தினர் ஹிதேந்திரன் அறக்கட்டளைத் தொடங்கி உடல்உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹிதேந்திரனின் 24வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு

ஹிதேந்திரனின் தந்தை அசோகன் முகநூலில் பதிவிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு இதோ:

மகனே நீ பிறந்து 24 ஆண்டு ஆனதடா!!!!
சொத்தாய் உனைநினைத்தோம், சொந்தம் பிறர்கானாய்.

"செத்தும் கொடுத்திட்ட சீதக்காதி நீயானாய்,"
வித்தாய் நீ விழுந்தாய் விளைவினை உலகறியும்.

நீவளர்ந்து மரமாகி நிழல்தருவாய் என்றிருந்தோம்.
நீர்வடியும் விழிகளுக்குள் நீ மரமாய் வளர்கின்றாய் !

"தீவிழுந்து கருகியதோர் வான்நிலவாய் ஆனாலும்,
பூவிழுந்து தேன்குடமாய் பூவுலகில் நிலைக்கின்றாய் !"

"இறந்தாலும் வாழ்ந்திடலாம்" எனச்சொன்ன அறிவியலில், எடுத்துகாட்டு நீயென்ற நிம்மதியில் வாழுகின்றோம் .
நிர்க்கதியாய் வாடுகின்றோம்.
என்றும் உன்நினைவில் மம்மி, டாடி, லச்சு, மோகன் ........

என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அசோகனின் மடல் அனைவரையும் கண்ணீர் மழையில் நனைக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai doctor couple who donated their son Hithendran's heart cleebrating his 24th birhtday with an emotional missing quotes
Please Wait while comments are loading...