For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிரை பறிக்கும் கல்குவாரி… மண்டை ஓட்டுடன் மக்கள் நூதன போராட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மல்லனம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அழகாபுரி, பூசாரிபட்டி, மல்லனம்பட்டி ஆகிய ஊர்களில் முறைகேடாக இயங்கும் கல்குவாரியினால் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி ஏராளமானோர் மண்டை ஓடுகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் மண்டை ஓடுகளுடன் கல்குவாரியை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மல்லனம்பட்டி ஊராட்சியில் 3 கல்குவாரிகளும், கற்களை உடைக்கும் கிரசர்களும் இயங்குகிறது. பட்டா நிலங்களை விலைக்கு வாங்கி கல்குவாரிகளை இயக்கிவருகிறார்கள். இப்பகுதியில் விவசாயம் செழித்த பகுதியாகும். மேலும் நிலக்கோட்டை பூ சந்தைக்கு 50 சதவீதம் பூக்களை இப்பகுதியில் விளைவித்து ஏற்றுமதி செய்து வந்தனர்.

Illegal quarries :People agitate with human skulls

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கல்குவாரிக்கான உரிமத்தை பெற்று சிறிய அளவில் கற்களை உடைத்து 1 குவாரி இயங்கியுள்ளது. அதன்பின்னர் படிப்படியாக 3 குவாரிகளுக்கு உரிமம் பெற்று கல்குவாரிகளை அமைத்துள்ளனர்.

மேலும் கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் கற்களை கிரசர் கொண்டு உடைத்து ஜல்லிக்கற்களாகவும், தூசிகளாகவும் விற்பனை செய்கின்றனர். கல்குவாரிகள் வெடிவைப்பதற்கு என்று உரிய நேரமும், கல்குவாரிகளில் வைக்க கூடிய வெடிப்பொருட்களுக்கு அளவும் உள்ளது. மேலும் கல்குவாரிகள் பூமிக்கடியில் சில குறிப்பிட்ட தூரம் வரை தோண்டவேண்டும் என்றும் கனரக இயந்திரங்களைக்கொண்டு வெடிகள் வெடிக்கக்கூடாது என பல நிபந்தனைகள் உள்ளது.

Illegal quarries :People agitate with human skulls

இதனைப்பொருட்படுத்தாமல் கடந்த 1 வருட காலமாக அளவுக்கதிகமான சத்தத்துடன் வெடிகளை வைத்து பாறைகளை உடைத்து வருகின்றனர். இதனால் கல்கள் பறந்து அப்பகுதியில் உள்ளவர்கள் மேல் பட்டு பலர் காயம்பட்டும், சிலர் இறந்தும் உள்ளனர். இதன் சம்பந்தமாக அப்பகுதி மக்கள் புகார் கூறினால் இறந்தவர்கள் விபத்து வழக்காக நிலக்கோட்டை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து கல்குவாரி இயங்குவதால் அப்பகுதியில் விவசாய நிலங்கள் பயன்படுத்தமுடியாமலும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீருக்கான போர்வெல்கள் பாதிப்படைகின்றது. இவற்றைத்தவிர கல்குவாரியின் அருகாமையில் இரண்டு குளங்கள் உள்ளது.

Illegal quarries :People agitate with human skulls

அந்த குளங்களில் தண்ணீர் தேங்கினால் கல்குவாரிக்கு இடையூறு எற்படும் எனக்கருதி இரண்டு குளங்களையும் தண்ணீர் தேங்கவிடாமல் இரவோடு இரவாக உடைத்துள்ளனர். இதனைக்கண்டித்து அந்தப்பகுதியைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக மண்டை ஓட்டு, எலும்புடன் குவாரியை முற்றுகையிட்டனர்.

இதன் சம்பந்தமாக உலகநம்பி என்பவர் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திடம் கல்குவாரிக்கு பலவித நிபந்தனைக்குற்பட்டு கல்குவாரி இயங்கவேண்டும். ஆனால் மல்லனம்பட்டி பகுதியில் 3 குவாரிகளும் கனிமவளத்துறையின் விதிமுறைகளை மீறி இரவு, பகலாக வெடிகள் வெடிப்பதும், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வெடிகள் வெடிப்பதால் கற்கள் சிதறி இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Illegal quarries :People agitate with human skulls

பலர் கண், தலை போன்றவை காயம்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக தரிசுநிலங்களாகவும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் நீர்தேங்கவிடாமல் தடுத்தும், அப்பாவி உயிர்களை பலிவாங்கிய கல்குவாரிகளை மூடவேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

போதுமணி என்பவர் கூறுகையில், மல்லனம்பட்டி ஊராட்சிப்பகுதியில் ரோஜாப்பூ, அரளிப்பூ, கோழிக்கொண்டை ஊசிப்பூ, மல்லிகைப்பூ, செம்பருத்தி, கனகாம்பரம் போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறோம். கல்குவாரியினால் ஏற்படும் தூசிகள் பட்டு அறுவடை செய்யும் நிலையில் பூக்கள் நிறம்மாறி விடுகிறது. இதனால் விற்பனை செய்யமுடியாமல் போகிறது.

மேலும் விவசாயத்திற்கு வேண்டிய தண்ணீரை போர்வெல் மூலம் எடுக்கிறோம். தொடர்ந்து நவீன இயந்திரங்களைக்கொண்டு கல்குவாரிகளின் பாறைகள் உடைப்பதால் போர்வெல்களில் தண்ணீர் வரவில்லை. எனவே கல்குவாரியை மூடவேண்டும். இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

இதே போல ராமசாமி என்பவர் கூறுகையில், நான் அதிகாலையில் தோட்டத்தில் பூக்களைப்பறித்து நிலக்கோட்டை சந்தைக்கு அனுப்புவது வழக்கம். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மல்லிகைப்பூவை பறித்துக் கொண்டிருந்தபோது கல்குவாரியில் வைத்த வெடி என்னுடைய கண்ணிலும், தலையிலும் பட்டு இடது கண் பார்வை இழந்துள்ளேன். என்னைப்போன்று பலர் பாதிப்படைந்துள்ளனர் என்றார்.

கல்குவாரிகளை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடிய கல்குவாரிகளை மூடவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

English summary
A group of people agitated with human skulls near Dindigul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X