விஷன் 2023: சென்னை உள்பட பல நகரங்களில் ரூ.825 கோடியில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள்
சென்னை: சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் செவ்வாய்க்கிழமை அவர் வாசித்த அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம், குடிசைப் பகுதி மாற்று வாரியம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் நவல்பட்டில், திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலை இணையும் பகுதியில் அமைந்துள்ள 68.82 ஏக்கர் பரப்பில் ரூ.20.53 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய 1,360 மனைகள் ஏற்படுத்தப்படும். அதில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக 690 மனைகளும், மத்திய வருவாய் பிரிவினருக்காக 475 மனைகளும், உயர் வருவாய் பிரிவினருக்காக 195 மனைகளும் உருவாக்கப்படும்.

10000 அடுக்குமாடி குடியிருப்புகள்
தொலைநோக்குத் திட்டம்-2023-ஐ நிறைவேற்றும் முகத்தான், மத்திய மற்றும் மாநில அரசுகளின் குடிசைப் பகுதிகள் அற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். அதில், மத்திய அரசின் பங்கு 50 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமாகவும், பயனாளிகளின் பங்கு 10 சதவீதமாகவும் இருக்கும்.

அடிப்படை வசதிகள்
கடந்த ஆண்டு ஒவ்வொரு குடியிருப்பின் கட்டடப் பரப்பு 397 சதுர அடியாக அறிவிக்கப்பட்டது. இப்போது இந்தப் பரப்பு 400 சதுர அடியாக அதிகரிக்கப்படும். மேலும், மின் விசிறிகள், மின் விளக்குகள் பொருத்திக் கொடுக்கப்படும். அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

புதிதாக 6 புராதன நகரங்கள்
மாநிலத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பேணி பாதுகாக்க இதுவரை 64 நகரங்கள் புராதன நகரங்கள் என அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒவ்வொரு நகரத்துக்கும் தலா ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை கடந்த 2012-13-ஆம் நிதியாண்டில் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டது.

உள்கட்டமைப்பு வசதி
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 64 நகரங்களில் 60 நகரங்களுக்கு ரூ.16.82 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், திருவட்டாறு, சுசீந்திரம், கொடுமுடி ஆகிய நகரங்களில் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக தலா ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.

கழுகுமலை, திருமுருகன் பூண்டி
மேலும், திருமுருகன்பூண்டி, கழுகுமலை, சுவாமிமலை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருப்புனவாசல், திருபுவனம் ஆகிய 6 நகரங்கள் புராதன நகரங்களாக அறிவிக்கப்படுகிறது. அவற்றுக்கு உள்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.