For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி, புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லாத ஜெ. பொங்கலுக்கு வாழ்த்தினார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி:

"உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் இந்த இனிய பொங்கல் நன்னாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலமிட்டு, கொத்து மஞ்சள் குலைகள் கட்டி, தித்திக்கும் கரும்பு, காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு புதுப்பானையில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கி வரும் பொது "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்சிக் குரல் எழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.

Jayalalitha extends Pongal greetings

" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை உழவுத் தொழில் செய்து வாழ்கின்றவரே சுய சார்போடு வாழ்கின்ற பெருமை உடையவர்கள் என்னும் பொருள் பட உழவுத் தொழிலின் மேன்மையினை உலகத் தோருக்கு உணர்த்தியுள்ளார்.

அத்தகைய சிறப்பு மிக்க உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைப் பொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்திற்கு அச்சாரமாக திகழ்கின்ற கால்நடைகளுக்கு தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாளாகும்.

அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று மனமார வாழ்த்தி, என் அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா அக்டோபர் 18ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் இருக்கு எந்த விழாவிற்கும் வெளியே வரவேயில்லை.

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் கூட வாழ்த்து அறிக்கை வெளியிடவில்லை. இந்த நிலையில் திடீரென பொங்கல் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் முதல்வர் வாழ்த்து தெரிவிக்காமல் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் புத்தாண்டு வாழ்த்து கூறவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்த்து கூறியுள்ளதால் ஓ.பி.எஸ்சும் வாழ்த்து கூறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Former Chief Minister J. Jayalalithaa on Wednesday greeted people on the Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X