For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரக்காணம் படுகொலை: ஜெ.வின் வீண் பழியால் நான் சிலுவையில் அறையப்பட்டேன்... ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மரக்கோணம் சம்பவத்தில் அப்பாவி தொண்டர்களின் படுகொலையை மூடிமறைக்க முயன்றதற்காக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு மூலம் அப்பாவி இளைஞர்களின் படுகொலைக்கு நீதி கிடைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மரக்காணம் படுகொலை...

மரக்காணம் படுகொலை...

மாமல்லபுரத்தில் 25.04.2013 அன்று நடைபெற்ற சித்திரைப் பெருநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய வன்முறை மற்றும் கலவரத்தில் செல்வராஜ், விவேக் ஆகிய இருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் செல்வராஜ் படுகொலை வழக்கை விசாரித்த திண்டிவனம் குற்றவியல் விரைவு நீதிமன்றம், இதில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதன்மூலம் அப்பாவி இளைஞர்கள் படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கிறது.

போலீசார் நினைத்திருந்தால்...

போலீசார் நினைத்திருந்தால்...

மரக்காணம் கலவரத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கம் முதலே கூறி வருகிறேன். மாமல்லபுரம் சித்திரைப் பெருவிழாவை மிகப்பெரிய அளவில் நடத்திக் காட்ட வேண்டும் என்பது மட்டுமே எங்களின் ஒற்றை இலக்காக இருந்தது. மாநாட்டிற்காக வந்தவர்கள் மீது மரக்காணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக தகவல் கிடைத்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். மாநாட்டிற்கு வந்த செல்வராஜ், விவேக் ஆகிய இருவர் மிகக்கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர், மாநாட்டிற்காக வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அருகிலுள்ள தோட்டங்களுக்குள் விரட்டியடித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர் என்ற செய்தி கேட்டவுடன் இதயத்தில் இடி தாக்கியதைப் போல உணர்ந்தேன். காவல்துறையினர் நினைத்திருந்தால் இந்த வன்முறையை தடுத்து, மாநாட்டுக்கு வந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பியிருக்கலாம். ஆனால், காவல்துறை அதிகாரிகள் சாதிய நோக்கில் வன்முறை & கலவரத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

செய்யாத குற்றத்திற்காக...

செய்யாத குற்றத்திற்காக...

இன்னொரு புறம் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஊடகங்களும் செய்யாத குற்றத்திற்காக என்னை சிலுவையில் அறைந்தனர். அப்பாவித் தொண்டர்கள் இருவரை படுகொலை செய்த குற்றவாளிகளும், அவர்களை தூண்டிவிட்ட ரத்தவெறி பிடித்தவர்களும் உத்தமர்களைப் போல சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்க, தொண்டர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தச் சென்ற என்னையும், எங்கள் கட்சி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளையும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. என் மீதான கைவிடப்பட்ட வழக்குகளையெல்லாம் தோண்டி எடுத்து என்னை நிரந்தரமாக சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்க ஜெயலலிதா முயன்றார். விலங்குகள் வசிப்பதற்கு கூட தகுதியற்ற சிறை அறையில் என்னை அடைத்து கொடுமை படுத்தியதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவசர இதய அறுவை சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்தேன். அப்பாவி தொண்டர்கள் இருவரின் உயிர்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கி கொடுமைப்படுத்திய கருப்பு அத்தியாயத்தை 2013 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அரசு எழுதியது. பிற அரசியல் கட்சிகளும், தமிழக ஊடகங்களும் உண்மை நிலையை உணராமல் அதற்கு துணை நின்றனர்.

நிம்மதி...

நிம்மதி...

ஆனால், உண்மையை அதிக நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது என்ற தத்துவத்தின்படி, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் உண்மை உலகிற்கு உணர்த்தப்பட்டுவிட்டது. செல்வராஜ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள கழிக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், செந்தில்குமார், பாரிநாதன், ராஜா, ரகு, சேகர் ஆகிய 6 பேரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆவர். இந்த கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட விவேக் என்ற இளைஞரை படுகொலை செய்தவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதன்மூலம் பா.ம.க மீது சுமத்தப்பட்ட அவதூறுகளும், வீண்பழியும் விலகியிருப்பது நிம்மதியளிக்கிறது.

சிந்தித்துப் பாருங்கள்...

சிந்தித்துப் பாருங்கள்...

அதேநேரத்தில், மனசாட்சியை அடகு வைத்துவிட்டு பா.ம.க.வை தூற்றிய அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் மனசாட்சியை மீட்டு தங்களின் செயல்பாடு சரிதானா? என சிந்தித்து பார்க்க வேண்டும். மரக்காணம் கலவரம் தொடர்பாக கடந்த 29.04.2013 அன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ஜெயலலிதா பா.ம.க. மீது அவதூறு புகார்களை கூறினார். கொலையாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்ட ஜெயலலிதா, செல்வராஜும், விவேக்கும் படுகொலை செய்யப்படவில்லை; அவர்கள் வாகனத்தின் மேலிருந்து விழுந்து இறந்தனர் என்று கூறி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார். ஆனால், செல்வராஜ் கொடூரமான முறையில் தலையில் வெட்டப்பட்டு தான் படுகொலை செய்யப்பட்டார் என்று திண்டிவனம் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பா.ம.க மீது அவதூறு பரப்பியதற்காகவும், அப்பாவி தொண்டர்களின் படுகொலையை மூடிமறைக்க முயன்றதற்காகவும் முதலமைச்சர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவதூறு சுமத்தாதீர்கள்...

அவதூறு சுமத்தாதீர்கள்...

அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், ‘‘பா.ம.க. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல. பா.ம.க.வின் செயல்பாடுகள் பற்றி அறிவார்ந்த, அர்த்தமுள்ள விமர்சனங்களை முன்வையுங்கள்... ஏற்றுக்கொள்கிறோம். மாறாக, பா.ம.க.வின் செயல்பாடுகள் அனைத்தையும் காமாலை கண் கொண்டு பார்த்து அவதூறு பழி சுமத்த வேண்டாம்'' என்பது தான்.

இழப்பீடு தேவை...

இழப்பீடு தேவை...

செல்வராஜ் கொலை வழக்கை போலவே, விவேக் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இருவரின் குடும்பங்களுக்கும் அரசின் சார்பில் இதுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில் அவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The PMK founder Ramadoss has demanded the chief minister jayalalithaa should apologize on Marakkanam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X