For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முன்னுள்ள 6 வாய்ப்புகள்...

By Super
Google Oneindia Tamil News

தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை 66.65 கோடி ரூபாய் சொத்து குவிப்பு ஊழல் வழக்கிலிருந்து கர்நாடக உயர்நீதி மன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் வரும் 24 ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் முதல் விசாரணைக்கு வருகிறது. 2014 ம் ஆண்டு செப்டம்பர் 27 ம் நாள் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் நான்காண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா தீர்ப்பளித்தார்.

Jayalalithaa wealth case appeal: 6 choices before Supreme Court!

22 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் அக்டோபர் 17 ம் நாள் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி சி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் மே 11 ம் தேதி விடுதலை செய்தார். இந்த விடுதலையை எதிர்த்துதான் கர்நாடக அரசும், திமுக வும் மேல் முறையீடு செய்துள்ளன.

தற்போது எல்லோரது பார்வையும் உச்ச நீதிமன்றத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அனேகமாக ஜூலை 24 ம் தேதி, இம் மனுக்கள் விசாரணைக்கு வரவிருக்கின்றன.

சரி. உச்ச நீதி மன்றம் என்னவெல்லாம் செய்ய வாய்ப்பிருக்கிறது?

பின் வரும் ஆறு சாத்தியக் கூறுகள் உள்ளன..

1. உச்ச நீதிமன்றம் உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கலாம். அவ்வாறு விதித்தால் ஜெ வும் மற்றவர்களும் மீண்டும் சிறைக்குப் போக வேண்டிய வாய்ப்பு உருவாகும் - ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

2. உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு தடை போடாது, ஆனால் தண்டனைக்கு தடை போடும். இதனால் ஜெயலலிதா சிறைக்குப் போகமாட்டார், ஆனால் உடனடியாக அவரது எம்எல்ஏ மற்றும் முதலமைச்சர் பதவி பறி போய் விடும்.

3. உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுக்களை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளும், ஆனால் தீர்ப்புக்கு தடை விதிக்காது. மாறாக ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள், அதாவது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்கி விடும்.

4. உச்ச நீதி மன்றம் மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளும். ஜெ உள்ளிட்டோருக்கு வெறும் நோட்டீஸ் மட்டும் அனுப்ப படும். விசாரணை முடிய பல ஆண்டுகளாகும்.

5. உச்ச நீதி மன்றம் மீண்டும் இந்த மனுவை புதிய வழி காட்டு நெறிகளின்படி விசாரிக்கும் படி உத்திரவிட்டு கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு அனுப்பி வைக்கும்.

6. எடுத்த எடுப்பிலேயே இந்த மேல் முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம், ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிக, மிக குறைவு. இந்த ஆறு சாத்தியக் கூறுகள்தான் ஜெயலலிதா மேல் முறையீட்டு மனுவில் உச்ச நீதி மன்றத்தின் முன்னுள்ளவையாகும்.

இவற்றில் ஏதாவது ஒன்றுதான் நடக்கப் போகிறது. வழக்கமாக கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட்டு, உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப் பட்ட ஒருவருக்கு எதிரான மேல் முறையீட்டு மனு விசாரணையில் அவ்வளவு சுலபமாக உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது கிடையாது.

இந்த விவகாரத்தில் சட்டம் மெளனமாகவே இருக்கிறது. தடை கொடுக்கக் கூடாதென்று எந்த விதியும் இல்லை. ஆனால் வழக்கமாக தடை கொடுக்கப் படுவதில்லை. இருந்த போதிலும் அரிதினும் அரிதான தருணங்களில் உச்ச நீதிமன்றம், சட்டத்தில் சொல்லப் படாத விஷயங்களை, நீதியையும், தர்மத்தையும் நிலை நாட்ட சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.

ஜெயலலிதா வழக்கு வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, நீதிபதிகளுக்கும் பல விஷயங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று இந்தாண்டு ஏப்ரல் மாதம், அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதி மதன் பி லோகூர் கூறினார்.

அந்த பின் புலத்திலும், ஜெயலலிதாவுக்கு அக்டோபர் 17 ம் தேதி, எதிர்தரப்பைக் கூட கேட்காமல் வெறும் 30 நிமிடத்திலேயே உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியதையும் கவனத்தில் கொண்டு பார்த்தால் இந்த மேல் முறையீட்டு மனு விசாரணையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஜெயலலிதா வழக்கு அரிதினும் அரிதான வழக்கென்பது ஊரறிந்த உண்மைதான். அப்படியென்றால் அதில் ஒவ்வோர் கட்டத்திலும் வழங்கப்படும் தீர்ப்புகளும், வழக்கத்திற்கு மாறான, புதிய, புதிய சட்டப் பாதைகளை வகுக்கக் கூடிய தீர்ப்புகள்தான் என்பதும் புரிந்து கொள்ளக் கூடிய உண்மைகள்தான்.

இதில் மற்றோர் சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியுள்ளது. இதே போன்று 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம். அது. 2001 ம் ஆண்டில் ஜெயலலிதா எம் எல் ஏ வாக இல்லாமல், அஇஅதிமுக வெற்றிப் பெற்றதால் பதவியேற்றார். எம்எல்ஏ வாக போட்டியிட தகுதியில்லாத ஒருவர் எவ்வாறு முதலமைச்சராக இருக்கலாம் என்று திமுக உச்சநீதி மன்றம் சென்றது. டான்சி வழக்கிலும், பிளெசெண்ட்ஸ்டே வழக்கிலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா எம்எல்ஏ வாக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

2001 ம் ஆண்டு மே 14 ம் தேதி ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது உச்சநீதி மன்றம் கோடை விடுமுறையில் இருந்த நேரம். விடுமுறை முடிந்ததும் திமுக உச்ச நீதி மன்றம் சென்றது. ஜூலை 20 ம் தேதி, வெள்ளிக் கிழமை இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதி மன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு அதனை அனுப்பியது. இந்த மனுக்களின் மீது விசாரணையை செப்டம்பர் 6 ம் தேதி துவக்கிய உச்ச நீதிமன்றம், 21 ம் தேதி ஜெயலலிதா பதவியேற்றது செல்லாதென்று அறிவித்தது. பின்னர் டான்சி மற்றும் பிளெசெண்ட் ஸ்டே வழக்குகளில் வென்று ஜெயலலிதா மீண்டும் முதல்வாரானார், அது வேறு கதை.

ஆனால் தற்போதும் கிட்டத்தட்ட அதே மாதிரி சூழல்தான். மே 11 ம் தேதி ஜெயலலிதா வை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தபோது, உச்ச நீதிமன்றம் அடுத்த சில நாட்களில் கோடை விடுமுறைக்குச் சென்று விட்டது. 2001 ம் ஆண்டைப் போலவே இந்தாண்டு ஜூலையில் தான் திமுக மனு விசாரணைக்கு வருகிறது. 24 ம் தேதி விசாரணைக்கு வந்தால், 2001 ம் ஆண்டைப் போலவே அதுவும் ஒரு வெள்ளிக் கிழமைதான். ஆனால் 2001 ம் ஆண்டைப் போலவே 2015 ம் ஆண்டிலும் உச்ச நீதி மன்றம் ஜெயலலிதாவுக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்கப் போகிறதா? அல்லது தேங்கி கிடக்கும் பல்லாயிரக் கணக்கான மேல் முறையிட்டு மனுக்களுடன் இந்த மனுவும் ஊறப் போடப்பட்டு விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகப் போகிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

-சி.ஆர். நாராயணன்

English summary
According to the columnist, there are only 6 choices before the supreme court in Jayalalithaa wealth case appeal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X