வாய்ப்பே இல்லை.. சசிகலா ஏற்கெனவே நீக்கப்பட்டவர்.. அவர் சொல்வதெல்லாம் பொய்.. கே சி வீரமணி
வாணியம்பாடி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. சசிகலா அதிமுகவினருடன் பேசுவதாக கூறும் ஆடியோ முழுமையாக பொய்யானவை என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி. வீரமணி கலந்து கொண்டார்.
அங்கு அலுவலகத்தை திறந்து வைத்து தொகுதி முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் மீண்டும் கட்சியில் சேர தலைமை தான் முடிவு செய்யும்.

சசிகலா
அதிமுக தொண்டர் களுடன் பேசுவதாக சசிகலாவின் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. அது முழுவதும் பொய்யான செய்தி. எந்த பகுதியிலும் உண்மையான செய்தி அல்ல. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் இணைவதற்கு வாய்ப்பு இல்லை.

சிவி சண்முகம்
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. பலமுறை இது போன்று கொலை முயற்சிகளை பிரச்சனைகளை அவர் சந்தித்துள்ளார். அவர் பனங்காட்டு நரி, அவர் இந்த சலசலப்புகள் எல்லாம் அஞ்சிட மாட்டார். அவர் கடந்து வந்த காலங்களை பாதைகளைப் பார்க்கும்பொழுது பல எதிர்ப்புகளை தாண்டிதான் அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் முதல்வர்
கடந்த கொரோனா காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு அவர் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் கொரோனா 10 ஆயிரத்தை தாண்டவில்லை.

35 ஆயிரம்
பொதுமக்களும் ஊரடங்கு காலத்தில் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். ஆனால் தற்போது இரண்டாம் அலையில் ஊரடங்கு ஒரு சொள்ளளவு தவிர நடைமுறையில் ஊரடங்காக தெரியவில்லை. மக்கள் இயல்பாக சுற்றி வருகின்றார்கள். அதனால் இரண்டாவது அலையில் தமிழகத்தில் கொரோனா 35 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

இரண்டாவது அலை
கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா முதல் அலைக்கு விதித்த விதிமுறை கட்டுப்பாடுகள் இரண்டாவது அலைக்கு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வித்தியாசம் அதிகமாக உள்ளது. அதனால் இரண்டாவது அலையில் தாக்கம் அதிகமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications