கரை வேட்டி கட்ட வேண்டாம்... கட்சியினருக்கு கட்டளையிட்ட கமல்!

சென்னை: கரை வேட்டி கட்ட வேண்டாம், அனைத்து மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிர்ப்புகள், சவால்கள், விமர்சனங்களைக் கடந்து நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ல் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மக்கள் நீதி மய்யம் என்று மக்களுக்காக நீதி கேட்கும் கட்சியாக தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் கமல். மேலும் தனது கட்சிக்கான கொடியையும் கமல் மதுரையில் பறக்க விட்டார்.
கமல் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அவரது கொடியின் சின்னத்திற்கும், கட்சியின் பெயருக்கும் பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தனது பயணத்தை தொடர்கிறார் கமல்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று உயர்மட்டக்குழுவினருடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பொதுக்கூட்டம்
பிப்ரவரி 22ல் சிவகங்கை, திண்டுக்கலில் நடைபெற இருந்த நாளை நமதே சுற்றுப்பயணம் தடை பட்டிருந்த நிலையில் மீண்டும் கமலின் சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 4ல் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களுக்கு கமல் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுவாசல் மக்களை சந்திக்க திட்டம்
இதனைத் தொடர்ந்து நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் விவசாயிகள் மற்றும் கிராம மக்களையும் கமல் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதனிடையே கட்சியினருக்கு ஒரு வேண்டுகோளையும் கமல்ஹாசன் விடுத்துள்ளார்.

கறை வேட்டி வேண்டாம்
கட்சி உறுப்பினர்கள் கரை வேட்டி கட்ட வேண்டாம். அனைத்து மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்ற வேண்டும்.

திருச்சி கூட்டத்தை பிரம்மாண்டமாக்குங்கள்
எந்த இடத்திலும் காவல்துறையினரின் உத்தரவை மீறி பேனர் வைத்தல், விளம்பரம் செய்தல் கூடாது. மதுரையை விட திருச்சி பொதுக்கூட்டம் இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்றும் கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!