For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் செயல்களால் வாசன் போன்ற அமைச்சர்களே கவலை-கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

karunanidhi
சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவருக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த வாசன் போன்ற அமைச்சர்களே கவலை தெரிவித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கை:

மமதா- ஜெயலலிதா அரசியல்

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சவையில் தி.மு.கழகம் அங்கம் வகித்த காரணத்தால்தான் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுடன் சேராமல் அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்டதாகச் சொல்லிக் கொள்கிறார்களே?

கருணாநிதி: அதுதான் காரணமா? மேற்கு வங்காளத்தில் ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதாக வெளிப்படையாகவே செய்தி வந்திருக்கிறதே? ஓகோ, அது மம்தா அரசியல்! இங்கே ஜெயலலிதா அரசியல் போலும்!.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்

கேள்வி: டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவரை அறிவித்த இரண்டு நாட்களிலேயே மாற்றி விட்டார்களே?

கருணாநிதி: அந்தக் கட்சியில் இதுபோல நடப்பது இது ஒன்றும் புதுமை அல்ல. இதற்கு முன்பு அ.தி.மு.க. இரண்டு முறை வேட்பாளர்களை அறிவித்து விட்டு பின்னர் திரும்பப் பெற்றிருக்கிறது. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின் போது, ஆதி ராஜாராமை முதலில் அறிவித்து விட்டு, பிறகு என். தளவாய் சுந்தரம் என்பவரையும், அதன் பிறகு 2013ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் முதலில் சரவணப் பெருமாள் என்பவரை வேட்பாளராக அறிவித்து விட்டு, பின்னர் கே. தங்கமுத்துதான் வேட்பாளர் என்று மாற்றினார்கள்.

ஆதி ராஜாராமை முதலில் வேட்பாளராக அறிவித்த போது, மூத்த வழக்கறிஞர் திரு. விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் ஆதி ராஜாராம்தான் முதல் குற்றவாளி என்றும், அவர் "ஜாமீன்" பெற்று வெளியிலே இருப்பவர் என்றும் பின்னர் தெரிந்து, அது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்த காரணத்தால் வேட்பாளர் ஆதி ராஜாராமை மாற்றி விட்டு தளவாய் சுந்தரம் என்பவரை வேட்பாளராக்கினார்கள்.

2013ஆம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளராக முதலில் சரவணப் பெருமாளை, அ.தி.மு.க. அறிவித்த போதும், அவர் 3,578 கிலோ வெள்ளியைக் கடத்தியதற்காக அவர் மீது சுங்க வரிச் சட்டம் மற்றும் அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் என்பது தெரிந்து, அவரை வேட்பாளராக அறிவித்ததைத் திரும்பப் பெற்றுக் கொண்டு கே.தங்கமுத்துவை வேட்பாளராக அறிவித்தார்கள்.

எப்படிப்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எல்லாம் அங்கே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம்

கேள்வி: ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக நான்கு நாடுகள் தீர்மானம் கொண்டுவரப் போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

கருணாநிதி: ஆமாம், ஐ.நா. மனித உரிமை சபையில், இலங்கைக்கு எதிராக, சுதந்திரமான சர்வதேச போர்க் குற்ற விசாரணை வேண்டு மென்று கோரிக்கை வைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் தீர்மானங்களைக் கொண்டுவர உள்ளன.

ஐ.நா. மனித உரிமை சபையின் கூட்டம் வரும் மார்ச் திங்களில் ஜெனீவா நகரிலே நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, இந்தியாவின் உதவியால் அந்தக் கடுமை குறைக் கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டு மென்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வில்லை. அதனால்தான் காமன்வெல்த் மாநாட்டிற்காக இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கை அரசுக்கு மூன்று மாத கெடு விதித்தார். அதற்குள் சுதந்திரமான விசார ணையை இலங்கை அரசு நடத்த வேண்டு மென்றும், இல்லாவிட்டால் சர்வதேச விசார ணைக்கு வலியுறுத்துவேன் என்றும் இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார்.

இந்தக் கெடுவையும் இலங்கை அரசு மதிப்பதாகத் தெரியவில்லை. எனவே ஐ.நா. மனித உரிமை சபையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கேட்டு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. தீர்மானம் கொண்டுவரப்படும் நான்கு நாடுகளோடு இந்தியாவும் சேரவேண்டும் என்பது தான் தமிழர்களின் விண்ணப்பம், கோரிக்கை. இன்னும் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட வேண்டுமானால், இந்தியாவே தனியானதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை சம்பந்தமாக சுதந்திரமான நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு வேண்டுமென்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. இந்தியா இப்படிப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு வருமானால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்காயங்களுக்கு ஓரளவுக்காவது மருந்து தடவுவதாக அமையும். மத்திய அரசு எந்த மாதிரியான அணுகுமுறையைக் கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வாசன் கவலை

கச்சத்தீவு விவகாரம்: கச்சத்தீவு அருகில், மீன் பிடிக்க, தமிழக மீனவருக்கு உரிமை இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் சார்பில், மத்திய அரசில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்படுகின்றனர். உதாரணமாகக் கூற வேண்டுமானால், வாசன், 'கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, கூறியிருக்கிறார்.

'கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது' என, தெரிவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில், கச்சத்தீவில், தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான வழக்கு நடைபெறுவதும், அதில் மத்திய அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்வதும், தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு காரியம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதாக, மத்திய அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கலாம். அதற்கு மாறாக, தமிழர்களின் மனதை நோகடிப்பதற்காகவே,

இப்படியொரு மனுவை, மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது, தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.

இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi yesterday slammed the CPM on DMK- Congress alliance statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X