For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர் பிரச்சனை குறித்து இந்தியா வரும் சிறிசேனாவிடம் பேச வேண்டும்: மோடிக்கு கருணாநிதி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார்.

அதேபோல், இலங்கை மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் மோடி வலியுறுத்த வேண்டும் எனவும் தனது கடிதத்தில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Karunanidhi writes to Modi

மேலும், இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களின் தொடர் இன்னல்கள் குறித்து என்னுடைய இந்தக் கடிதத்தை இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறீசேனா தங்களைடெல்லியில் சந்திக்கவிருக்கும் வேளையில் அனுப்பியிருக்கின்றேன்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே சிறீசேனா இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தாங்கள் நீண்ட நெடுங்காலமாக அனுபவித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே இலங்கைத் தமிழர்கள் சிறீசேனாவுக்கு விரும்பி வாக்களித்தார்கள். தேர்தலின் போது சிறீசேனா, அவருடைய கூட்டணிக் கட்சிக்காரர்களும் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையிலேயே நம்பினார்கள்.

தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரும், சிங்களர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழர்களைச் சோர்வடையச் செய்திருக்கின்றன. தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், செய்யப்பட்ட அறிவிப்புகளும் பல; ஆனால் இதுவரை நடைமுறைக்கு வந்தது ஒரு சிலவே; அல்லது எதுவும் நடைமுறைக்கே வரவில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சில நாட்களிலே சாதித்துக் காட்டப்படக் கூடியவை கூட இதுவரையில் நடைபெறவில்லை; ஒரு காலக் கட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டியவைகளுக்கான அடையாளங்களும் தோன்றவில்லை.

தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளும், நிலங்களும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. தமிழர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கென்றே நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகள் அகற்றப்படவில்லை. தமிழர்களின் சுதந்திரமான வாழ்க்கை முறைகளை சிதைத்திடும் வண்ணம் ஏற்கனவே இருந்து வரும் இலங்கை அரசின் கண்காணிப்பு திரும்பப் பெறப்படவில்லை.

இவற்றையெல்லாம் விட, மிகமோசமான காரியம் ஒன்று தற்போது நடந்திருக்கின்றது. இலங்கை அதிபர் சிறீசேனா 2.2.2015 அன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிக்கையில், "பாரம்பரியமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவம் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) பொது அமைதியினை நிலைநாட்டிப் பேணுவதற்கான கடமைகளை மேற்கொள்ளும்" என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிபரின் இத்தகைய அறிவிக்கை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

நிர்வாகத்திற்கு அடிப்படைத் தேவைகளான நிலம் மற்றும் காவல் துறை தொடர்பான அதிகாரங்களை வழங்காத 13வது சட்டத் திருத்தம் தமிழர்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைத்திடும் மருந்தாகிவிடாது என சர்வ தேசத் தமிழ்ச் சமூகம் கருதுகிறது. ஏற்கனவே உறுதி அளித்தவாறு 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வர இலங்கையின் புதிய அரசு முயற்சி மேற்கொண்டாலும், அது உண்மையான, முறையான, அனைத்து அதிகாரங்களையும் வழங்குவது எனும் நீண்ட பயணத்தில், எடுத்து வைக்கும் முதல் அடியாக மட்டும் இருக்குமே தவிர வேறல்ல.

நிரந்தரமான அரசியல் தீர்வையே இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்துகோரி வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள், உலகெங்கிலும்வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக, ஐ.நா. மேற்பார்வையில் "பொது வாக்கெடுப்பு" நடத்த வேண்டுமென்றே தொடர்ந்து சொல்லி வருகிறோம். இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள், மற்றும் இனப் படுகொலை குறித்து உலக நாடுகள் தெளிவாக அறியும். சர்வ தேசக் குழு ஒன்றை அமைத்து, இலங்கையில் நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை செய்ய இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இலங்கை அரசால் முறியடிக்கப் பட்டுள்ளன. தற்போது இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வ தேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசு; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் "தீர்மான" வடிவில் எடுத்துச் செல்வது பற்றி ஆழ்ந்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வ தேச விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் இந்திய மத்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வர வேண்டுமென்று எனது தலைமையில் அமைந்துள்ள "டெசோ" அமைப்பு ஏற்கனவே பல முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கையில் ராஜபக்சே அரசு நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தறிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் நியமித்த குழு தன்னுடைய அறிக்கையை அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் சமர்ப்பிக்க விருப்பதாக அறிகிறேன். அப்படி அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது அது ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதற்கு இந்திய அரசு ஆதரவு அளித்திட வேண்டுமென்று தமிழ் சமூகம் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கை கடற்படையினராலும், சிங்கள மீனவர்களாலும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்கள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து தாங்கள் அறிவீர்கள். தாங்கள் இலங்கை அதிபரோடு மேற்கொள்ளவிருக்கும் விவாதங்களின் மூலம் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றினை ஏற்படுத்தினால் நான் தங்களுக்குப் பெரிதும் நன்றியுடையவன் ஆவேன்.

கடந்த அறுபதாண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கு இப்போதாவது நீதி கிடைத்திட வேண்டுமென்று இலங்கையிலும் மற்றும் உலக நாடுகளிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் குறித்த நவீன வரலாறு முழுதும் குருதியாலும், துன்பத்தாலும், ஏமாற்றத்தாலும் நிறைந்திருக்கின்றது. கண்ணீர் நிறைந்த இந்த வரலாற்றுப் பாதையை மாற்ற வேண்டிய தருணம் இது, விருப்பு வெறுப்பின்றி இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலையை ஆய்ந்து அறிந்து , அவர்களுடைய நீண்ட கால வேட்கையை நிறைவு செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டுமென்று தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இலங்கை அதிபரோடு தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் நல்ல விளைவுகளைத் தரும் முடிவுகள் வெளிவரும் என்று தமிழகத்தில் வாழும் நாங்களும், சர்வதேச தமிழர்களும் பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has written a letter to PM Modi, regarding Tamilnadu fishermen issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X