எய்ம்ஸ் மருத்துவமனையை ஈரோட்டில் அமைக்கக்கோரி 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.. கொ.தே.ம.கட்சி அறிவிப்பு
எய்ம்ஸ் மருத்துவமனையை ஈரோட்டில் அமைக்கக்கோரி வரும் 5ஆம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது.
ஈரோடு: எய்ம்ஸ் மருத்துவமனையை ஈரோட்டில் அமைக்கக்கோரி வரும் 5ஆம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலளார் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
ஈரோடு மாவட்டம் சாய மற்றும் தோல் கழிவுகளால் மாசுபட்டு புற்றுநோய், தோல்வியாதி மற்றும் மலட்டுத்தன்மை உள்ளிட்ட ஏராளமான நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நோயை குணப்படுத்த உலக தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்தால் மட்டுமே வருங்காலங்களில் குழந்தைகள், பெண்கள் என அனைத்துத்தரப்பினரும் நோயின்றி நலமுடன் வாழ முடியும். பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடிநீர் மற்றும் சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதால் எளிதில் நோய் பரவும் சூழல் உருவாகியிருக்கிறது. இப்படி நோயினால் பாதிக்கப்படும் மக்களை பாதிப்பிலிருந்து மீட்பதற்கு சிறந்த மருத்துவ வசதி தேவைப்படுகிறது.
இதனால் தான் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பாதிப்பு அதிகமாக இருக்கும் இடத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை அமைப்பது தான் சரியாக இருக்கும். கல்விக்கூடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதியும், மற்ற மாவட்டத்தை, மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர் மற்றும் சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் அனைத்து வசதிகளையும் கொண்ட எந்தவொரு மருத்துவமனையும் கிடையாது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதன் மூலமாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் கொங்கு மண்டலத்திற்கு அவசியமான, அத்தியாவசியமான திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படாமல் புறக்கணிக்கப்படுவது ஏற்புடையதல்ல. எனவே ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது என்று அறிவித்து, உடனடியாக பணிகளை தொடங்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்ற 5 -ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் தலைமை தாங்குகிறார். எனவே கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications