For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலத்தை புகுத்துவதா?: கருணாநிதி கடும் கண்டனம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: குதிரையை வண்டிக்குப் பின்பக்கம் பூட்டுவதைப் போல, தமிழ் வழிக் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாமல், அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் கூட ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தத் துணிந்திருக்கும் அ.தி.மு.க. அரசு தமிழ் வழிக் கல்வியை ஆதரித்து ஊக்கப்படுத்தப் போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்து மௌன சாட்சிகளாக இருப்பதா? என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் பல ஆண்டுகளாக எடுத்துரைத்து; அதற்காகப் பாடுபட்டு வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், கழகத்தின் உயிர்க் கொள்கைகளிலே ஒன்றுதான் தாய்மொழிக் கல்வி. தாய்மொழித் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழனின் உடன் பிறந்த கடமை என்ற உணர்வும், எழுச்சியும் நம் ஒவ்வொரு வருக்கும் வர வேண்டும்.

"குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உகந்தது தாய்மொழி வழிக் கல்வியே. வேறெந்த மொழியையும் மாணவர்கள் மீது சுமத்துவது தாய்நாட்டுக்குச் செய்யும் பாவம்" என்று அண்ணல் காந்தி அடிகளே அறிவுறுத்தியிருக்கிறார். கழகம் ஆட்சியிலே இருக்கும் போதெல்லாம் தாய்மொழிக் கல்வியின் முதன்மைக்காகப் பாடுபட்ட போதிலும், அது முழுமையான வெற்றியை அடைய முடியாத அளவுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் தடுக்கப்பட்டே வந்தது. அந்த அளவுக்கு ஆங்கில மோகம் பெருகி, அதன் காரணமாக தாய்மொழிக் கல்வி வளர்ச்சி ஆழ வேரூன்றாமல் இருந்து மேலோங்காமல் பார்த்து வருகிறது.

தாய்மொழி

தாய்மொழி

சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளில் ஆங்கில ஆதிக்கத்துக்கு அடிபணியாமல், தத்தமது தாய்மொழியிலேயே கல்வியை வழங்கி வருகிறார்கள். தாய்மொழியிலேயே மேற்படிப்பினைத் தொடரும்போது, அவர்களால் படிப்பதை நன்றாகப் புரிந்து கொண்டு வேகமாக முன்னேற முடிகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்கள் மருத்துவ நூல்களை இனிமேல் ஆங்கிலத்திலே படிக்கத் தேவையில்லை; அந்த நூல்களை பஞ்சாபி மொழியிலே மொழி மாற்றம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. தாய்மொழியிலே படித்தால் மாணவர்களுக்குப் புரிந்து கொள்ளும் திறன் அதிகமாகி அறிவு தொடர்ந்து கூர்மையாகும் என்பதைப் பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்காக பஞ்சாப் அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில், பாபா பரீத் பல்கலைக் கழகத்தின் சுகாதார அறிவியல் துறை, மருத்துவ நூல்களை தங்களது சொந்த மொழியில் மொழி பெயர்க்கும் பணியில் இறங்கிவிட்டதாம். 60 டாக்டர்கள் மொழி பெயர்க்கும் பணியிலே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், அந்தப் பணி முடிவடைந்ததும் பஞ்சாப் மாநில மருத்துவ மாணவர்கள் மருத்துவ நூல்களையெல்லாம் அவர்களுடைய சொந்தத் தாய்மொழியிலேயே படிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப் மாநில அரசு எடுத்துள்ள முடிவு தமிழகத்திலேயும் எடுக்கப்பட வேண்டும். தி.மு. கழக அரசு பொறுப்பிலே இருந்த போது இப்படிப்பட்ட முடிவு வர வேண்டுமென்பதற் காகத்தான், அதற்கு முதற்கட்டமாக, கழக ஆட்சியில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தாய்மொழியில் கற்க - தமிழ் மொழி மூலமாகக் கற்க வகை செய்து, ஆணையிட்டு, அந்த ஆண்டிலேயே 1,378 மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். கழக ஆட்சிக்குப் பிறகு தமிழ் வழிக் கல்வியில் பொறியியல் கல்லூரியில் படிக்க மாணவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கப்படவில்லை. இதிலே மேலும் ஆர்வம் காட்டப்பட்டிருந்தால் பொறியியல் பட்டப்படிப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழ் வழிக் கல்வி தொடங்கப்பட்டிருப்பதோடு, தமிழ் வழிக் கல்வி மருத்துவம் போன்ற ஏனைய தொழில் படிப்புகளிலும் பரவியிருக்கும். கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் அதற்கும் ஏற்படுத்தப்பட்டது தடைக்கல்.

பொறியியல்

பொறியியல்

பொறியியல் பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக வினாத்தாள்கள் ஆங்கிலத்திலே மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையை தி.மு. கழக ஆட்சிக்காலத்திலேதான் 2010-2011ஆம் ஆண்டு முதல், ஆங்கிலம் அல்லது தமிழில் வினாத்தாள்கள் வழங்கவும், விடைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் முறையை அறிமுகப்படுத்தவும், பல்கலைக் கழகங்கள் அறிவுறுத்தப்பட்டன. மேலும் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாக எடுத்து அதிலே தேர்ச்சி பெற வேண்டுமென்று ஆணையிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படி தமிழ் வழிக் கல்வியை ஒவ்வொரு கட்டமாகக் கொண்டு சென்று வளர்த்தெடுக்கும் பணி தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

தமிழ்

தமிழ்

தி.மு. கழகம் ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும், 31-5-2006 அன்று தமிழ் மொழிக் கல்வி 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயம் என்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிப் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து கழக ஆட்சியில் விலக்களிக்கப்பட்டு அதன் காரணமாக ஆண்டுக்கு ஏறத்தாழ பத்து லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள்.

மாணவர்களின் நலன் கருதி, கழக ஆட்சிக் காலத்தில், 2008-2009ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் செலுத்த வேண்டிய சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்து, அதன் காரணமாக 21 கோடியே 40 இலட்ச ரூபாயினை அரசு ஏற்றுக் கொண்டது. ஆண்டுக்கு ஏறத்தாழ 50 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற்றார்கள்.

அரசு வேலை

அரசு வேலை

1970ஆம் ஆண்டிலேயே நவம்பர் திங்களில் கழக அமைச்சரவை கூடி ஒரு முடிவெடுத்தது. அதுதான், தமிழைப் பயிற்று மொழியாக எடுத்துப் படித்தவர்களுக்கே - தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட அரசின் வேலை வாய்ப்புகளில் முதல் இடம். அதில் மிச்சமிருந்தால் தான் ஆங்கிலத்தின் வழி படித்தவர்களுக்கு இடம். அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் நலனும் பாதிக்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த வழியிலே தான் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மருத்துவப் படிப்பையே தாய்மொழியில் படிக்கலாம் என்ற முடிவினை அரசு அறிவித்துள்ளது. "மாணவனின் தாய்மொழியே மிகச் சிறந்த பலன் அளிக்கக்கூடிய பயிற்று மொழி என்பதிலே உறுதியான எண்ணம் உடையவர்களில் நானும் ஒருவன்" என்று பண்டித நேரு அவர்களும் குறிப்பிட்டுள்ளார். பண்டித நேரு அவர்களின் 125வது ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் இந்த வேளையிலாவது நேருவின் கருத்தை ஆழச் சிந்தித்துப் பார்த்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஆங்கிலம்

ஆங்கிலம்

தாய்மொழி வழிக்கல்வியே எளிமையும், இனிமையும் உடையது. அறிவைச் செழுமையாகத் தீட்டக் கூடியது. சிந்தனை வளத்தைச் சேர்க்கக் கூடியது. இதற்குப் பிறகாவது தாய்மொழியில் படிக்கும் ஆர்வத்தை நம்முடைய குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்காக ஆங்கிலத்தை அறவே புறந்தள்ள வேண்டுமென்பது நம்முடைய கருத்து அல்ல. மொழிப் பாடமாகவே ஆங்கிலம் தொடரலாம். தற்போது ஆங்கிலக் கல்விக் கூடங்கள் பெருகிவிட்டன. தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. உலக நாடுகளில் ஆங்கிலத்தின் பயன்பாடு சிறிதுசிறிதாகக் குறைந்து வருகிறது.

எனினும், ஆங்கில மொழி அறிவும் வேண்டும் என்ற கருத்துக்கு நான் என்றைக்கும்மாறுபட்டவன் அல்லன். அதே நேரத்தில் தமிழ் வழிக் கல்விக்கு எதிரான எந்தக் கருத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.

அண்ணா

அண்ணா

1968ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் அன்று முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், "இன்னும் ஐந்தாண்டுக் காலத்திலே தமிழ் மொழிசெயல் வடிவில் பயிற்று மொழியாக ஆகும்" என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். ஐந்தாண்டுகள் என்பது ஐம்பதாண்டுகளாக ஆன போதும் அண்ணாவின் தீர்மானம் இன்னமும் நடைமுறைப்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளதே எனும் ஏக்கம்தான் எஞ்சி நிற்கிறது.

ஆட்சி மொழி

ஆட்சி மொழி

தாய் மொழிக் கல்வி என்பதைப் போலவே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்பதும் நம்முடைய உயிர்க் கொள்கைகளிலே ஒன்று தான். பேராசிரியர் அ. இராமசாமி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் 2006ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் நான் உரையாற்றும் போதே, "இந்தியாவிலே இருக்கின்ற மாநில ஆட்சி மொழிகள் அனைத்தையும், இந்திய ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும், மலையாள மொழியாகட்டும்; தெலுங்கு மொழியாகட்டும்; பஞ்சாபி மொழியாகட்டும், எல்லா மொழிகளும் ஆகட்டும், அவ்வளவு மொழிகளும் ஆவதற்கு இயலுமா, பல சிக்கல்கள் வருமே என்றெல்லாம் யாராவது வாதிப்பார்களேயானால், அவர்களுக்குச் சொல்கிறேன்; அவைகள் எல்லாம் ஆவதற்கு இன்னும் பருவம் அடையாமல் இருந்தால், பருவம் அடைந்த மொழி, திருமணத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கின்ற மொழி தமிழ் மொழி. மற்றவைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் எல்லா வளமும் நிறைந்த இலக்கண, இலக்கியப் பொருத்தமும் வாய்ந்த தமிழை ஆட்சி மொழி ஆக்குங்கள். மற்ற மொழிகளை ஆக்கக் கூடாது என்பது நம்முடைய வாதம் அல்ல. எந்தெந்த மொழிகள் மாநில ஆட்சி மொழிகளாக இருக்கின்றனவோ, அந்த மொழிகள் எல்லாவற்றையும் இந்தியாவின் பொது ஆட்சி மொழிகளாக ஆக்குங்கள். அப்போதுதான் இந்தியாவின் ஒற்றுமை ஏதோ கட்டி வைக்கப்பட்ட பொட்டலம் என்று இல்லாமல், அது உறுதிமிக்க ஒன்றாக இருக்க முடியும்" என்று தெரிவித்திருக்கிறேன். அதே அடிப்படையில், ஒவ்வொரு தேர்தலின்போதும் வெளியிடப்படும் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் "தமிழ் ஆட்சி மொழி" எனும் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

குதிரையை வண்டிக்குப் பின்பக்கம் பூட்டுவதைப் போல, தமிழ் வழிக் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாமல், அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் கூட ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தத் துணிந்திருக்கும் அ.தி.மு.க. அரசு தமிழ் வழிக் கல்வியை ஆதரித்து ஊக்கப்படுத்தப் போவதில்லை. இத்தகைய எதிர்மறை நடவடிக்கைகளை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழக மக்கள் மௌன சாட்சிகளாகப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ! .

இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi told that ADMK government won't encourage learning through mother tongue in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X