For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்டெய்னர்களில் சிக்கிய ரூ.570 கோடி பணம்... சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருப்பூரில் 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த மனு மீது உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக, நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, கடந்த மே 13ம் தேதியன்று திருப்பூரில் 570 கோடி ரூபாய் ரொக்கத்தை கொண்டு சென்ற 3 கன்டெய்னர் லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.

Madras HC orders CBI probe on Rs 570 crore seizure

அது பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும், ஆந்திராவில் உள்ள கரன்சி மையத்துக்கு கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கும் டிகேஎஸ் இளங்கோவன் கடிதம் எழுதினார்.

கடந்த மே 13ம் தேதி திருப்பூர் அருகே திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற இடத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியரும், காவல் துறை அதிகாரிகளும் நடத்திய விசாரணையில் ரூ. 570 கோடி பணம் தொடர்பான எந்த ஆவணங்களும் லாரி ஓட்டுநர்களிடம் இல்லை. லாரிகளில் வந்த ஆந்திர மாநில பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுக்குரிய சீருடையில் இல்லை.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி பணம் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கரூவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பணம் பிடிபட்டு 18 மணி நேரத்துக்குப் பிறகே எஸ்பிஐ சில ஆவணங்களை வழங்கியது.

ரிசர்வ் வங்கி அனுமதியுடன் ரூ. 570 கோடி எடுத்துச் செல்லப்பட்டதாக எஸ்பிஐ கடிதம் அளித்துள்ளது. இந்த அளவு பெரும் தொகையை கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி வாய்மொழி உத்தரவு வழங்காது. எனவே, இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சாலை வழியாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பெரும் தொகையை எப்படி அனுப்ப முடியும்? வழக்கமாக இதுபோன்ற பெரும் தொகை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரயில் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.

பல மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரூ. 570 கோடி பணம் தங்களுடையது என எஸ்பிஐ ஏற்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி நீலகிரி மாவட்டத்தில் இருந்து 8 கண்டெய்னர் லாரிகளில் பணம் ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதில் 3 லாரிகள் மட்டும் திருப்பூர் அருகே பிடிபட்டுள்ளதாக அறிகிறோம்.

இந்தப் பணம் எஸ்பிஐக்கு சொந்தமானது என மத்திய அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார். ஆனாலும் ரூ. 570 கோடிக்கு உண்மையான உரிமையாளர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அண்மையில் கரூரில் அன்புநாதன் என்பவரின் வீட்டிலிருந்து பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் குறிபிட்டிருந்தார்.

இந்த கடிதத்தின் நகலை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, மத்திய வருவாய்த் துறை செயலாளர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய உள்துறை செயலாளர், சிபிஐ இயக்குநர், வருமான வரித்துறை தலைமை ஆணையர் ஆகியோருக்கு டி.கே.எஸ். இளங்கோவன் அனுப்பியுள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த வாரம் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், திருப்பூரில் கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடி பணம் ஸ்டேட் வங்கியின் உள்ளக வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைகளில் ஒன்று. இந்த பிரச்சினையில் சர்வதேச தலையீடு எதுவும் கிடையாது.

சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு இந்த வழக்கு ஒன்றும் பெரிய குற்றம் தொடர்பானதோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மீதானதோ இல்லை. அரசுக்கு இழப்பை ஏற்படுத்தக்கூடிய வழக்கோ அல்ல. சிபிஐ-யில் தற்போது குறைவான எண்ணிக்கையில்தான் அதிகாரிகளும் உள்ளனர். அப்படியிருந்தும் இண்டர்போலுடன் இணைந்து பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறோம். எனவே இதில் சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இன்று காலை தீர்ப்பளித்த நீதிபதிகள் , திருப்பூர் அருகே ரூ.570 கோடி சிக்கியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தவிட்டு தீர்ப்பளித்தனர். கைப்பற்ற பணம் ரூ. 570 கோடியும் கோவையில் பாரத ஸ்டேட் வங்கி வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Madras High Court today order CBI probe into the seizure of Rs 570 crore from three container trucks in Tirupur district in the run up to the May 16 assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X