For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சித்திரை திருவிழா: மதுரை குலுங்க... குலுங்க... பவனி வரும் மீனாட்சி சொக்க நாதர்

மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை சித்திரை திருவிழா: ஏப் 27ல் மீனாட்சி திருக்கல்யாணம்-வீடியோ

    மதுரை: மதுரை குலுங்க குலுங்க சித்திரை திருவிழா களைகட்டியுள்ளது. கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி அம்மனும் சொக்கநாதரும் வலம் வந்ததை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    திருவிழாக்களின் நகரம், தூங்க நகரமான மதுரையில் தினம் தினம் திருவிழாதான். தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொருட்காட்சி, திருக்கல்யாணம், தேரோட்டம் காண குவிவார்கள் மக்கள்.

    புதன்கிழமை அட்சய திருதியை நாளில் கொடியேற்றத்துடன் விழா உற்சாகமாக தொடங்கியது. அன்று முதலே திருவிழா கோலம்தான். முதலாம் நாள் அம்மை அப்பன் கற்பகவிருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். இரண்டாம் நாள், பூத வாகனம் மற்றும் அன்ன வாகனத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தினம் தினம் நகர்வலம் அம்மை அப்பனைக் காண மல்லிகை மணக்க பெண்கள் குடும்பத்தோடு கூடுவார்கள்.

    ஆணும் பெண்ணும் சமமே

    ஆணும் பெண்ணும் சமமே

    சித்திரை மாதத்தில் மீனாட்சி ஆட்சி தொடங்கி விடும். முதன்முதலாக ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சமஉரிமை கொடுக்கப்பட்டது மதுரை நகரில் தான். இங்கு மாசி மாதம் மீனாட்சியம்மனுக்கும், ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடத்தி, தலா ஆறு மாதம் ஆட்சி நடத்துவர். அதனால் தான், மாசித் திருவிழாவின் போது, சுவாமி வலம் வரும் வீதிகளுக்கு, 'மாசி வீதி' என்ற பெயர் வந்தது.

    நான்கு மாதம் மீனாட்சி ஆட்சி

    நான்கு மாதம் மீனாட்சி ஆட்சி

    முன்பெல்லாம் மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் அம்பாளின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார். திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான், மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது. நான்கு மாதங்கள் மட்டுமே அம்பாள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறாள்.

    மதுரை அரசாளும் மீனாட்சி

    மதுரை அரசாளும் மீனாட்சி

    சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் மதுரை நகரின் அரசிக்கு பட்டாபிஷேகம். வைர கிரீடம் சூட்டி கையில் செங்கோலுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார் மீனாட்சி அம்மன். அன்றைய இரவு வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் பட்டத்தரசியைக் காண விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி, வடக்கு மாசி கூட்டம் ஜெ.... ஜெ... என குவிந்திருக்கும்.

    மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாணம்

    மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாணம்

    ஒன்பதாம் நாள் அம்மனின் திக்விஜயம். இந்திர விமானத்தில் ஊர்வலம் வரும் அம்மன் அஷ்ட திக்பாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சி சுவராஸ்யமானது. சித்திரை திருவிழாவின் உச்சமாக மீனாட்சி அம்மனுக்கு சுந்தரரேஸ்வரருடன் திருக்கல்யாணம். இந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி நடக்கிறது. புத்தம் புது புடவை கட்டி கழுத்து நிறைய நகை போட்டு தங்கள் வீட்டு திருமணத்திற்கு கிளம்புவது போல பெண்கள் புறப்படுவார்கள்.

    பூப்பல்லக்கில் பவனி

    பூப்பல்லக்கில் பவனி

    திருக்கல்யாணம் முடிந்த உடன் புது தாலி சரடு மாற்றிக்கொள்வார்கள். ஏராளமான பெண்கள் சுமங்கலிகளுக்கு புது மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்து மகிழ்வார்கள். இறைவனின் ஆசி பெற்று, மணக்க மணக்க விருந்தும் சாப்பிட்டு விட்டு மொய் எழுதுவார்கள். திருக்கல்யாணத்தன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மை அப்பனை காண்பதற்காகவே மாலை முதலே வீதிகளில் கூட்டம் குவியும். முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாகப் பவனி வர, விநாயகர், முருகனைத் தொடர்ந்து மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித, பன்னீர்ப் பூக்கள் வாசம் வர மணக்க தம்பதி சமேதரராய்ப் மீனாட்சி சொக்கநாதர் பூப்பல்லகில் எழுந்தருளுவார்கள்.

    சித்திரை தேரோட்டம்

    சித்திரை தேரோட்டம்

    மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் அதிகாலையில் மக்கள் கூட்டம் அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதைக் காண மதுரை சுற்றுவட்டார கிராம மக்கள் வீதிகளில் குவிந்திருப்பார்கள். அதிர்வேட்டு சட்டம், செண்டை மேளச் சத்தத்துடன், நாதஸ்வரம் மேளதாளம் முழங்க ஆடி அசைந்து வரும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரினை பக்தி பரவசத்துடன் இழுத்துச் செல்வார்கள். தம்பதி சமேதரராக தேரில் வலம் வரும் காட்சியை பார்த்து விட்டு நீர் மோர், பானகம், பொங்கல், புளியோதரை என அன்னதானம் சாப்பிட்டு திருப்தியாக வீடு திரும்புவார்கள்.

    English summary
    Chithirai Festival is one of the biggest celebrations in Madurai. On April 27 Celestial wedding of God and Goddess. on april 28 Procession of temple chariots Car Festival.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X