For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து- 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் சரணடைய வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி!!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து செய்துள்ளது. அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் தயாநிதி மாறன் சரணடையவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் (700 இணைப்புகள்) வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்ட புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள தலைமையகத்தில் ஆஜராகுமாறு தயாநிதி மாறனுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.

Maran in Trouble: Expecting cancellation of bail!

இதையடுத்து, தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரை ஆறு வார காலத்துக்கு கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டது.

அப்போது, விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைக்காவிட்டால் மீண்டும் சிபிஐ முறையிடலாம் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, தயாநிதி மாறனிடம் கடந்த ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து தயாநிதி மாறனைக் கைது செய்து காவலில் வைத்து விசாரிக்கும் வாய்ப்பை சிபிஐ பரிசீலித்து வருகிறது. அதற்கு ஏதுவாக, தயாநிதி மாறனுக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர்கள், தயாநிதி மாறன் 300-க்கும் மேற்பட்ட இணைப்புகளை வைத்திருக்கவில்லை என்றும், ஒரே ஒரு இணைப்பை மட்டுமே அவர் வைத்திருந்தாகவும் கூறினர். இதுதவிர, சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக இணைப்புகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் நூற்றுக்கணக்கான இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்திய தயாநிதி மாறனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் பல உண்மைகள் தெரியவரும் என்றும், எனவே, மனுதாரரின் இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுத் தரப்பு வலியுறுத்தியது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் தயாநிதி மாறன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐ.யிடம் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தயாநிதியின் முன் ஜாமீன் ரத்தான உத்தரவு நகல் இன்று மாலைக்குள் சி.பி.ஐ.க்கு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த வழக்கில் தயாநிதி மாறன் கைது செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.

English summary
The Madras High Court will decide the fate of former Union Minister Dayanidhi Maran in illegal Telephone exchange case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X