For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகன் மீது விழுந்து அவர் உயிரைக் காத்து தான் இறந்த கொத்தனார்.. சுற்றுச்சுவர் விபத்தில் உருக்கம்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் உப்பரப்பாளையம் என்ற இடத்தில் நடந்த குடோன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரு கொத்தனார் தனது மகன் மீது விழுந்து அவரது உயிரைக் காத்து தான் இறந்துள்ள உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

அலாமதி அருகேயுள்ள உப்பரபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 2 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கிடங்குகளின் அருகே புதிதாக மற்றொரு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணியில் ஆந்திரா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவரையொட்டி குடிசை வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இதில் குடும்பம், குடும்பமாக தொழிலாளர்கள் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சுற்றுச்சுவர் இடிந்து குடிசை வீடுகளில் விழுந்து அமுக்கியது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அனைவருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இதில் 19 வயதான ஆந்திராவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.

சம்பவம் குறித்து நாகராஜ் கூறுகையில், ஆந்திரா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் குடிசை வீட்டில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்து வந்தோம். என்னுடைய தந்தை பண்டியா கொத்தனார் வேலையும், நான் சித்தாள் வேலையும் செய்தோம். 2 வாரத்திற்கு முன்னர்தான் நான் சொந்த ஊரிலிருந்து வேலைக்கு திரும்பி வந்தேன்.

சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் தொழிலாளர்கள் சிலர் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வெளியே சென்றிருந்தனர். என்னையும் சேர்த்து 12 பேர் குடிசை வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தோம். நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் காற்று மற்றும் பலத்த மழை இடைவிடாமல் பெய்துகொண்டே இருந்தது.

குடிசையிலிருந்து மழை நீர் சொட்ட, சொட்ட ஒழுகி என்னுடைய முகத்தில் விழுந்தது. இதனால் என்னுடைய தூக்கம் கலையும் நிலை ஏற்பட்டது. உடனே நான் துண்டை எடுத்து முகத்தை நன்றாக துடைத்துவிட்டு, மழை நீர் விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் முகத்தில் துண்டை போட்டுவிட்டு தூங்கினேன்.

அடுத்த சில நிமிடத்திற்குள் திடீரென ஓலை குடிசை வீடுகள் அனைத்தும் பெயர்ந்து அப்படியே சரிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. உடனே சுதாரித்து வெளியே செல்வதற்குள் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து அமுக்கியது. இதைப் பார்த்த என்னுடைய தந்தை இடிபாடு என் மீது படாமல் இருப்பதற்காக முதுகால் தாங்கினார். இடிபாடுகளை நான் காலாலும், கையாலும் உதறி தள்ளிவிட்டு வெளியே வருவதற்கு முயற்சி செய்தேன். தொடர்ந்து போராடியும் இடிபாடுகளை என்னால் அகற்றிவிட்டு வெளியே வரமுடியவில்லை.

என்னுடைய தந்தையும் மயங்கிய நிலையில் என் மீது படுத்திருந்தார். உடனே என்னை காப்பாற்றும்படி கூப்பாடு போட்டு பார்த்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. என் மேல் தந்தை கிடந்ததால் இடிபாடுகள் எதுவும் என்மீது விழவில்லை. சிறிது நேரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்படியே மயங்கிவிட்டேன்.

மீண்டும் திடுக்கிட்டு எழுந்தபோது இடிபாடுகளை அகற்றம் செய்யும் பணி நடந்தது. உடனே நான் என்னுடைய கைகளை இடிபாடுகளுக்கு இடையே உயர்த்தி காப்பாற்றும்படி செய்கை காண்பித்தேன். உடனே என்னை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டார்கள்.

என்னுடைய தந்தை மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் உயிரோடு இல்லை என்ற செய்தி அப்போதுதான் எனக்கு தெரிந்தது. இது மிகுந்த வேதனையையும், மன வருத்தத்தையும் தருகிறது என்றார் அவர்.

தன்னைக் கொடுத்து மகனைக் காத்த அந்த தந்தையின் செயல் அனைவரையும் உருக வைத்துள்ளது.

English summary
A mason who was killed in compound wall collapse near Thiruvallur saved hi son's life before his death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X