• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Exclusive: வேட்டி சட்டை.. பாட்டா செருப்பு.. எங்க போனாலும் இப்படித்தான்.. ஜெயக்குமார் ஜிலீர் பேட்டி

|
  ஜப்பான் அனுபவம் பற்றி அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ

  சென்னை: "எப்பவுமே எனக்கு பாரம்ரிய உடைத்தான் பிடிக்கும். எந்த வெளிநாடு போனாலும் வேட்டி சட்டையும் பாட்டா செருப்பும்தான்! 2011-ம் ஆண்டு லண்டனில் மாநாட்டுக்கு போனேன். அங்கே 54 நாட்டிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தாங்க. அங்கேயும் கடுங்குளிர்தான். நான் மட்டும்தான் வேட்டி சட்டை, பாட்டா செருப்புதான். ஜப்பான் போனபோதும் அப்படித்தான்" என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  ஜெயக்குமார்!! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கியவர்! சபாநாயகர், மீன்வளம், பால்வளம், வனத்துறை, தகவல் தொழில்நுட்பம், சட்டம், மின்சாரத்துறை என இத்தனை துறைகளின் அமைச்சர் பொறுப்பினை திறம்பட வகித்தவர்.

  தினமும் செய்தியாளர்களை சந்திப்பதையும், செய்தியாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் பாங்கினையும் உடையவர் அமைச்சர் ஜெயக்குமார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சூடேறி கொண்டிருக்கும் அரசியல் களத்தில் எதிர்க்கட்சியினருக்கும் பதிலடிகளையும், காரசார கேள்விகளையும் எழுப்பி திணறடித்து வருபவர். சில நேரங்களில் மூத்த அமைச்சரான அமைச்சர் ஜெயக்குமாரின் ஆலோசனைகளும், கருத்துகளும் அதிமுக அரசுக்கு உரமூட்டி வருகின்றன.

  Minister Jayakumar says about Japans travel experience

  இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அவரை ஒன் இந்தியா சார்பாக தொடர்பு கொண்டு பயணம் குறித்து கேட்டோம். அட, எதிர்பார்க்காத பல சுவாரஸ்யத் தகவல்களை தலைவர் கொட்டித் தீர்த்து விட்டார். அவை இதோ:

  கேள்வி: உங்க ஜப்பான் பயணத்துடைய நோக்கம் என்ன? அது நிறைவேறியதா?

  தமிழக மீன்பிடி கலன்களை பொறுத்தவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி கலன்கள் உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கவனம் செலுத்தக் கூடியது ஆழ்கடல் மீன்பிடிப்புகளில்தான். இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பை பொறுத்தவரை நம்ம மீனவர்கள் மிகவும் கை தேர்ந்தவர்கள். ஆதிகாலத்திலேயே, நம்ம ஆட்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் உதவியை கொண்டே மீன்பிடித்து கரை சேர்ந்தவர்கள். தங்குதொழிலை மீனவர்கள் கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்பாகவே கடலில் தங்கியிருந்து கோலா மீன்களை பிடித்து வாழ்க்கை நடத்தியவர்கள்.

  Minister Jayakumar says about Japans travel experience

  தற்போது ஒரு ஆய்வு முடிவின்படி நம் பரப்பிலுள்ள ஆழ்கடலில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் மீன் பிடித்து கொள்ளலாம். அந்த அளவுக்கு மீன் வளம் நமக்கு உள்ளது. இதில் முக்கியமானது சூரை என சொல்லப்படும் மீன்தான். இந்த வகை மீன்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதால் நம் மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது. அதோடு, நமக்கும் அன்னிய செலவாணி கிடைக்கிறது. இந்த சூரை மீனை பிடிப்பதிலும் நம் மீனவர்கள் கெட்டிக்காரர்கள். ஆனாலும் ஆழ்கடல் மீன்பிடிப்பதில், மீனை பிடிப்பது, பின்பு அவைகளை சுகாதாரத்துடன் பதப்படுத்துவது, அதன்பிறகு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது... இந்த 3 வகை பயிற்சிகளையும் அளிப்பதற்காக அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றோம். அதுமட்டுமல்லாமல், சூரை மீனை எங்களுக்கு ஏற்றுமதி செய்யுங்கள் என அவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து அதற்கான துறைசார்ந்த நிறுவனங்களுடன் பேசி ஒப்பந்தம் நிறைவேற்றி வந்தோம்.

  Minister Jayakumar says about Japans travel experience

  கேள்வி: அப்படியென்ன ஜப்பான்காரர்களுக்கு இந்த சூரை மீன் மீது ஒரு ஆசை?

  ஆமாம். இந்த மீனுக்கு ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் ரொம்ப மவுசு. அவர்களுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் வரை மீன்தான் பிரதான உணவே. நிறைய மருத்துவ குணங்களை உடைய இந்த சூரை மீனை ஜப்பானியர்கள் நம்ம ஃபிங்கர் சிப்ஸ் செய்வதுபோன்று சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சாஸ் தொட்டுக் கொண்டு அப்படியே சாப்பிடுகிறார்கள். இதற்கு 'செஷ்மி' என ஜப்பானில் ஒரு பெயரும் வைத்திருக்கிறார்கள். நம்ம தமிழ்நாட்டிலும் இந்த மீனை சாப்பிடுகிறோம். ஆனால் குழம்பு வைத்து, வறுத்து இப்படித்தான் சாப்பிடுவோம். ஆனால் ஜப்பானியர்கள் சாப்பிடும் முறையே வேறு. அதனால்தான் இந்த மீனுக்கு அவ்வளவு கிராக்கி. அந்த தேவையை பூர்த்தி செய்வது நம்முடைய கடமை. இதனால் நம் மீனவர்களின் வாழ்வும் முன்னேறமடையும். எனவே மிக நல்ல திட்டம். வருகிற ஜனவரியிலிருந்து இந்த திட்டம் செயல்பட துவங்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

  Minister Jayakumar says about Japans travel experience

  கேள்வி: சூரை மீனை நம்ம ஊரில் சாப்பிட்டிருப்பீங்க? அவங்க ஸ்டைல் 'செஷ்மி'யை நீங்கள் அங்க சாப்பிட்டீர்களா?

  இல்லை... அந்த முறையில் சாப்பிட்டு நமக்குத்தான் பழக்கம் இல்லையே. அவங்க பச்சையாகவே அதை சாப்பிடறாங்க. இப்படி மீனை பச்சையா சாப்பிடறது அவங்களுக்கு கேக் சாப்பிடற மாதிரி இருக்கு. நமக்கு எல்லாமே வேக வெச்சி, மசாலா போட்டு, எண்ணெய் ஊத்தி, பொறிச்சி, குழம்புல போட்டு நாக்குக்கு ருசியா சாப்பிட்டுதான் பழக்கம். அதனால அந்த செஷ்மியை நான் சாப்பிடல. ஓருவேளை நான் ஜப்பானிலேயே இருக்க வேண்டிவந்தால் அப்படி சாப்பிட்டு பழகலாம். நாம திடீர்னு ஜப்பான்காரனா மாற முடியாது. நாம வாழ்நாள் முழுசும் இந்தியனாகவும், தமிழனாகவும்தான் இருக்க முடியும்.

  Minister Jayakumar says about Japans travel experience

  கேள்வி: சரி... அங்க போன காரியத்தை நல்லபடியா முடிச்சிட்டீங்க. அந்த ஊரை சுற்றி பாத்தீங்களா? ஜப்பான் எப்படி இருக்கு?

  ஜப்பான்-ன்னு இல்லை... எந்த நாட்டுக்கு போனாலும் நம்ம தமிழ்நாடு மாதிரி வராது. நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது, இங்கே பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது என்றுதான் பாட தோணுது. நம்ம நாட்டில இருக்கிறதே தனி சுகம்தான். ஆனால் ஜப்பானை சொல்ல வேண்டுமானால் மிகப்பெரிய வளர்ச்சி கண்ட நாடு. பூமியில் ஒரு சொர்க்கம் என்பார்களே...அதுமாதிரிதான் ஜப்பானும். அவ்வளவு பிரமாண்டம்!! அங்கே ஒரு பெரிய டவர் இருக்கு. 610 மீட்டர் அளவு பிரமாண்டம் அது. அதுமேல நின்று ராத்திரி நேரத்தில் டோக்கியோவை பார்க்கும் காட்சியே அற்புதம்!!

  கேள்வி: ஜப்பானில் உங்களை ரொம்ப பிரமிக்க வெச்சது எது?

  ஜப்பானில் ஒரு குப்பையை கூட ரோட்டில் பார்க்க முடியாது. ஒரு சாக்லட் சாப்பிட்டா கூட அந்த கவரை ரோட்டில் போடக்கூடாது. எந்த வேஸ்ட் பொருள் என்றாலும் நாம் எங்கு தங்கியிருக்கோமோ, வீடோ, ஹோட்டலோ.. அதுவரை கொண்டு வந்து பிறகுதான் குப்பை தொட்டியில் போட முடியும். அந்த ரோடு பார்த்தாலே அவ்வளவு அழகா இருக்கு! ஒரு பளிங்கு மாதிரி பளபளன்னு இருக்கு ரோடுகூட. அதுவும் நாங்க போனபோது நல்ல மழை பெய்தது. அரை மணி நேரத்தில் பார்த்தால், ரோட்டில் தண்ணியெல்லாம் நிக்கவே இல்லை. மழை பெய்த தடயம்கூட இல்லாமல் எல்லா நீரும் வடிந்து ஓடிவிட்டது. அந்த அளவுக்கு ஒரு கட்டமைப்பு நகரம்.

  Minister Jayakumar says about Japans travel experience

  கேள்வி: ஜப்பானியர்கள் குணநலன் எல்லாம் எப்படி இருக்கு?

  டோக்கியோவில் 3 கோடி மக்கள் தொகை உள்ளனர். ஆனாலும் சாலைகள் காலியாகவே உள்ளன. எங்கேயுமே ஜனநடமாட்டம் தெரியவே இல்லை. இதுபற்றி அங்கே நான் கேட்டதுக்கு, "அவங்கங்க வேலைக்கு போய் நேராக வீட்டுக்கு போய்டுவாங்க. ஒரு நிமிஷமும் வீணாக்காமல் வீட்டிலும் சும்மா இருக்காமல் எதையாவது உருப்படியா செய்துட்டே இருப்பாங்க. வெட்டி பேச்சு, வெட்டி கதை, எதுவும் கிடையாது. வார இறுதி நாட்களில் மட்டும்தான் கூட்டமே வெளியே வரும்" என்றார். அதேபோல அங்கே வண்டிகளில் ஹாரன் சத்தமே கேட்காது. ஜப்பானியர்கள் பொதுவாகவே மென்மையானவர்கள். சத்தமே பிடிக்காதாம். சத்தம் போட்டுகூட பேச மாட்டார்கள். நாம் ஒன்றை ஜப்பானியர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என்றால் அது அவர்களின் பணிவைதான். ஒரு வண்டியை பார்க் செய்ய போனால்கூட அதுக்கு பாஸ் போட்டுட்டு மீதி சில்லறை கொடுக்கும்போது, பணிந்து, குனிந்து கொடுப்பது என்னை வெகுவாக ஈர்த்தது. அதுமட்டும் இல்லை, நம்ம ஊர்ல 60 வயசு ஆயிட்டாலே அன்-ஃபிட், வேலை செய்ய லாயக்கில்லைன்னு ஒதுக்கிடுவோம். ஆனால் அவர்கள் சாகும்வரை தன் சொந்த காலிலேயே நின்று சம்பாதிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

  கேள்வி: சிங்கக்குட்டியை மடியில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்தீங்களே? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

  ஆமா.அங்கிருந்த சஃபாரி என்ற உயிரியில் பூங்காவிற்கு போனோம். உடனே அங்கிருந்தவர்கள் என்னை பார்த்ததும், இங்கே ஒரு சிங்க குட்டி இருக்கு. நீங்க அதை தூக்கி வெச்சிக்குங்கன்னு சொன்னாங்க. எனக்கு பெரிசா பயம் இல்லைன்னாலும், சிங்கக்குட்டியாச்சே... பற்கள் எல்லாம் பெரிசு பெரிசா இருந்துச்சு. தூக்க போகும்போது சீறிட்டா என்ன செய்றதுன்னு தயங்கினேன். உடனே அங்கே இருந்தவர்கள், தைரியம் சொல்லி சிங்ககுட்டியை எப்படி பிடித்து தூக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். அதன்பிறகு அந்த சிங்கக்குட்டியை தூக்கி என் மடியில உட்கார வச்சிக்கிட்டேன். அந்த குட்டியும் என்கிட்ட பாசமா ஒட்டிக்கிச்சு. அங்கிருந்து வந்ததுக்கு அப்புறமும் அந்த சிங்ககுட்டியின் பாசத்தை என்னால் மறக்கவே முடியல. அதனாலதான் குட்டியா ஒரு குறும்பு கவிதையும் கூடவே எழுதிட்டேன்.

  Minister Jayakumar says about Japans travel experience

  கேள்வி: அவ்வளவு பெரிய ஜப்பான் நாட்டில் நம்ம ஊரில் இருப்பதுபோலவே வேட்டி சட்டையுடனே கூலாக நடமாடினீர்களே... உங்களை அங்கிருந்தவர்கள் எல்லாம் எப்படி பார்த்தார்கள்?

  பதில்: இந்த கேள்வி ரொம்ப நல்ல கேள்வி. பொதுவாகவே நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு. எந்த சூழ்நிலையிலும் அதை விடக்கூடாது. எதுக்காக பொய்யான தோற்றத்தை நாம தரணும்? கோட் சூட் போடுவதால் எந்தவித தனித்தன்மை இயல்பும் வந்துவிட போவது கிடையாது. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. வேட்டி சட்டை என் பாரம்பரிய உடை. எல்லோருமே ஜப்பானில் என்னை வித்தியாசமாத்தான் பார்த்தாங்க. சில பேர் என்கிட்ட வந்து கேட்டாங்க, "சார்... இந்த ட்ரெஸ் பேரு என்ன சார்? புதுசா இருக்கே? ரொம்ப நல்லா இருக்கே? இதை எப்படி கட்டிக்கணும் சார்? கொஞ்சம் சொல்லி கொடுங்களேன். எங்களுக்கும் இப்படி ஒன்னு அனுப்பி வைக்கறீங்களா?"-ன்னு கேட்டாங்க. எனக்கு அப்போ ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாகவும் கௌரவமாகவும் இருந்தது.

  கேள்வி: இப்படி வேட்டி சட்டையோட நடமாடிய நாடு ஜப்பான் மட்டும்தானா? இல்ல.. எல்லா நாடுகளிலும் இப்படித்தானா?

  பதில்: இல்லை. 2001-ம் ஆண்டு நான் ஆஸ்திரேலியா போயிருந்தேன். அங்கே பென்குயின் வாக் என்ற இடம் இருக்கு. அப்போ ரொம்ப குளிர் வேற. மைனஸ் 6 டிகிரி என்றால் பார்த்துக்கோங்களேன். அப்பவே, என்னை என்கூட இருந்தவங்க எல்லாரும் குளிருக்காக கோட்-சூட், க்ளவுஸ் எல்லாமே போட்டுக்க சொன்னாங்க. நான் உடனே சொன்னேன், "நான் மீன் நிறைய சாப்பிடுற ஆளு. எப்பவுமே என் ரத்தம் சூடாகதான் இருக்கு. என்னை இந்த குளிரெல்லாம் ஒன்னுமே செய்யாதுன்னு" சொன்னேன். அப்போ கடைசிவரைக்கும் நான் கோட்சூட் போடவே இல்லையே. வேட்டி - சட்டைதான். அப்பறம் பாட்டா செருப்பு. அவ்வளவுதான். எனக்கு அன்னைக்கும் பாட்டா செருப்புதான். இன்னைக்கும் பாட்டா செருப்புதான். அன்னைக்கு நான் பாட்டா செருப்பு போட்டப்ப விலை 40 ரூபா இருந்தது. இன்னைக்கு 190 ரூபாய் ஆயிடுச்சி. அதனால எப்பவுமே எனக்கு பாட்டா செருப்பும், வேட்டி சட்டையும்தான்! 2011-ம் ஆண்டு லண்டனில் ஒரு மாநாட்டுக்கு போனேன். அங்கே 54 நாட்டிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தாங்க. அங்கேயும் கடுங்குளிர்தான். நான் மட்டும்தான் வேட்டி சட்டை, பாட்டா செருப்பு!

  இவ்வாறு ஜெயக்குமார் தனது பயண அனுபவங்களை கலகலப்புடன் கூறி முடித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Minister Jayakumar says about Japan's travel experience
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more