For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: மிளகாய்ப்பொடி தூவி 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்க முயற்சி: சினிமா பாணியில் துணிகரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கூரியர் மூலம் மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 10 கிலோ தங்க நகைகளை மிளகாய்ப்பொடி தூவி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் தப்பியோடிய ஒருவனை தேடி வருகின்றனர்.

சவுகார் பேட்டையைச் சேர்ந்த நகை வியாபாரிகள் ஜெய் மாதா கூரியர் சர்வீஸ் நிறுவனம் மூலம் மும்பைக்கு தங்கம் அனுப்பி வைப்பது வழக்கம். வழக்கம் போல் நேற்று இரவு 10 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சவுகார்பேட்டை கூரியர் அலுவலகத்தில் இருந்து மாருதி காரில் தங்கத்தை எடுத்துக்கொண்டு மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்றனர். சவுகார்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் வீரேந்திரர் காரை ஓட்டினார். அவருடன் பாதுகாப்புக்காக ரத்தன், சந்தீப் ஆகியோர் சென்றனர். இவர்கள் அனைவரும் கூரியர் நிறுவனத்தில் பணி புரிபவர்கள்.

சைதாப்பேட்டை அருகே கார் சென்றபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கார் மீது மோதி வழிமறித்து நிறுத்தினர். டிரைவரிடம் தகராறு செய்த அவர்கள். திடீர் என்று டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள்.

உடனே காரில் இருந்த மற்ற 2 பேர் இறங்கி வந்தனர். அவர்களையும் கும்பல் தாக்கியது. 6 பேரும் கொள்ளை கும்பல் என்பதை உணர்ந்த டிரைவர் வீரேந்தர்சிங் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட சைதாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்தர், போலீஸ்காரர் விக்ரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அதே சமயம் கொள்ளையர்கள் கையில் இருந்த மிளகாய் பொடியை தூவிவிட்டு காரில் இருந்த 10 கிலோ தங்கத்தை பெட்டியுடன் தூக்கிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் கொள்ளையர்களை விரட்டினர். போலீசைக் கண்ட கொள்ளைக் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் ஒருவனை போலீசார் பிடித்தனர். அவன் சூளைமேட்டைச் சேர்ந்த செந்தில் என்று தெரிய வந்தது.

போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் பாரிமுனையைச் சேர்ந்த கவுசிக் தலைமையில் செயல்படும் கும்பல்தான் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில் கொடுத்த தகவலின் பேரில் இரவோடு இரவாக செயல்பட்டு வடபழனி செல்வகுமார், சூளை அசோக்குமார், கோடம்பாக்கம் பிரசாத், மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கொள்ளைக்கும்பல் தலைவன் கவுசிக் என்பவனையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். தப்பி ஓடிய டக்ளஸ் என்பவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

இரவு ரோந்து போலீசார் தக்க சமயத்தில் துரிதமாக அங்கு வந்து விட்டதால் 10 கிலோ தங்கம் தப்பியது. அதன் மதிப்பு ரூ.5 கோடி என்று போலீசார் தெரிவித்தனர். காரில் தங்கத்துக்கு பாதுகாப்பாக வந்த சந்தீப் என்பவனும் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவனுக்கும் கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சந்தீப்தான் தங்கம் கொண்டு செல்லப்படும் தகவலை கொள்ளை கும்பலுக்கு ரகசியமாக தெரிவித்து இருக்கிறான். அதன்படி சினிமா பாணியில் 6 பேர் கும்பல் வந்து தாக்குதல் நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் கூரியர் ஊழியர் சந்தீப், கொள்ளையன் டக்ளஸ் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

English summary
A thief who attempted for a robbery by pouring mirchi escaped after the failure of his looting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X