For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணப் பட்டுவாடா: தொடங்கியது கவுண்ட்டவுன்... தடுப்பதற்கு 7,062 பறக்கும் படைகள்

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

தமிழ் நாட்டு வாக்காளர்கள் கரன்சி மழையில் நனையவிருக்கிறார்கள். வாக்காளர்களுக்கான பண பட்டுவாடாவை அதிமுக மற்றும் திமுக என்று இரண்டு பெரிய கட்சிகளும் துவங்கி விட்டன. முதல் ரவுண்ட் கடந்த மே 7 மற்றும் 8ம் தேதிகளில் முடிந்து விட்டது. 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரையில் - ஒரு ஓட்டுக்கு - என்று பல தொகுதிகளிலும் விநியோகம் நடந்திருக்கிறது.

சில தொகுதிகளில், இதில் ஸ்டார் தொகுதிகள்தான் அதிகம், யாரெல்லாம் ஸ்டார் தொகுதிகள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை - இந்த தொகை 500 லிருந்து 1,000 வரையில் நீண்டிருக்கிறது.

Money distribution started in Tamilnadu says columnist Mani

வழக்கம் போலவே இந்த முறையும் புதிது புதிதாய் வழிகளை கண்டு அரசியல் கட்சிகள் பண பட்டுவாடாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தென் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் நடந்த கதை இது.

மே 7 ம் தேதி மாலையில் டிப் டாப்பாக உடையணிந்த இரண்டு பேர் கையில் வாக்காளர் பட்டியலுடன் நான்கு முதல் ஐந்து தெருக்களில் ஒவ்வோர் வீடாக ஏறி இறங்கினர். தாங்கள் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்கள் என்றும் வாக்காளர் பெயர்களை சரி பார்க்க வந்திருப்பதாகவும் கூறினர். ஒரு வீட்டில் பெயர்களை சரி பார்க்கும் போது அங்கிருந்த ஒருவர் - அவரும் மீடியாவில் பணியாற்றுபவர்தான் - தன்னுடைய வாக்கு மதுரையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அவரது பெயர் வந்தவர்களின் கையில் இருந்த பட்டியலில் இல்லை. மறுநாள் அந்த மீடியா நண்பரின் வீட்டு வாசலில் அந்தக் குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு வாக்கு கோரும் பிட் நோட்டீஸ் மட்டும் இருந்தது.

ஆனால் அவரது பக்கத்து வீட்டில் விழுந்த நோட்டீசில் 1,000 ரூபாய் பணமும் இருந்தது. அந்த வீட்டில் நான்கு ஓட்டுகள் இருக்கின்றன. பின்னர் தான்தெரிந்தது முதல் நாள் வந்தது தேர்தல் அதிகாரிகள் அல்ல ... அந்தக் குறிப்பிட்ட வேட்பாளரின் ஆட்கள் என்பது.

இதுதான் விஷயமே ... குருட்டாம் போக்கில் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைப்பதில்லை ... மாறாக நன்கு திட்டமிட்டு, குறி வைத்து, ஓட்டளிக்கமுடியாவர்களை நீக்கி விட்டு பண பட்டுவாடாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஐந்து தெருக்களிலும் உள்ள வீடுகளில் விடியற்காலை 3 மணி முதல் 5 மணி க்குள் பணப் பட்டுவாடா முடிந்து விட்டது. தற்போது அடுத்த ரவுண்ட் எப்போது என்பதுதான் அங்குள்ள வாக்காளப் பெருமக்களில் பலரது கவலையாகவும் இருக்கிறது என்கிறார் மீடியா நண்பர்.

ஸ்டார் தொகுதிகளில் இரண்டு பெரிய கட்சிகளும் தங்களது சொந்தக் கட்சிக்காரர்களை நம்புவதில்லை. காரணம் பணம் போய் ஒழுங்காக சேராது என்பது மற்ற எல்லோரையும் விட இந்த ஸ்டார் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். பாம்பின் கால் பாம்பறியும் என்று சும்மாவா சொன்னார்கள் ...? ஆகவே இந்த தொகுதிகளில் இவர்கள் பணப் பட்டுவாடாவை அவுட் சோர்ஸ் செய்து விட்டார்கள் ... அதாவது குறிப்பிட்ட கட்சிக்கு நெருக்கமான உள்ளூர் தொழிலதிபர்கள், சிவில் காண்டிராக்டர்களிடம் இந்த பணி ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

''அவர்கள் ஒழுங்காக பணப் பட்டுவாடாவை முடித்து விடுவார்கள். பணப் பட்டுவாடா ஒழுங்காக நடக்காவிட்டால் வரும் எதிர்விளைவுகள் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். கட்சிக் காரர்களிடம் இல்லாத நேர்மை இவர்களிடம் இருக்கும் என்று நம்பும் தலைமையின் மனம் கோணாமல் இவர்கள் நடந்து கொள்ளுவார்கள். காரணம் ஸ்டார் வேட்பாளர் வென்று விட்டால் வரும் கொழுத்த லாபம் தற்போது பணப் பட்டுவாடாவில் கையை வைப்பதால் வரும் லாபத்தை விட்டு பல பல ஆயிரம் மடங்கு அதிகம் என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்'' என்று கண்களை சிமிட்டிக் கொண்டு கூறுகிறார் கடந்த ஆட்சியில் ஓய்வு பெற்ற மாநில உளவுத் துறை அதிகாரி ஒருவர்.

இன்று தமிழ் நாட்டில் பணப் பட்டுவாடாவை ஆளும் அதிமுக மற்றும் பிரதான எதிர்கட்சியான திமுக இரண்டும் கன கச்சிதமாக நடத்திக் கொண்டிருக்கின்றன.

இதில் ஆளும் கட்சி என்பதால் அதிமுக கொடுக்கும் தொகை சற்றே கூடுதல் என்று தகவல்கள் வந்தாலும், திமுகவும் அதற்கு இணையான தொகையை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. மற்ற கட்சிகளால் இந்த இருவருக்கும் சிறிதளவும் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

''பணம் இருந்தாலும் கூட அதிமுக மற்றும் திமுக இருவருக்கும் இணையாக மற்றவர்களால் பணத்தை கொடுக்க முடியாது. காரணம் குக்கிராமம் வரைக்கும் நன்கு ஆழமாக வேரூன்றி, பரந்து விரிந்த கிளைகளையும், கட்டமைப்பையும் கொண்டது இந்த இரண்டு கட்சிகள் மட்டும்தான்'' என்கிறார் தமிழகத்தின் பல ஊர்களுக்கும்சமீபத்தில் சென்று வந்த சர்வதேச ஆங்கில ஊடகத்தின் இந்திய பிரதிநிதி ஒருவர்.

இந்த பின்புலத்தில்தான் தேர்தல் ஆணையம் தமிழக்கதில் பணப் பட்டுவாடாவை தடுப்பதற்கான பறக்கும் படைகளின் எண்ணிக்கையை 1,418 லிருந்து 7,062 ஆக உயர்த்தியிருக்கிறது. மே 12 ம் தேதி முதல் இந்த 7,062 பறக்கும் படைகள் பணியில் இருப்பார்கள் என்று முதலில் கூறியிருந்த ஆணையம் தற்போது இன்று முதலே அதாவது மே 11ம் தேதி முதலே இவர்கள் களத்தில் இறங்கி விடுவார்கள் என்று கூறியிருக்கிறது.

இந்த பறக்கும் படையில் மாநில அரசு ஊழியர்களுடன் மத்திய பாதுகாப்பு படைகளின் வீரர்கள் குறைந்தது இருவராவது இருப்பார்கள். தற்போதைய மிக முக்கியமான கேள்வி எந்தளவுக்கு தேர்தல் ஆணையத்தால் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியும் என்பதுதான். வரும் 14ம் தேதி முதல் பிரச்சாரம் முடிகிறது. அதற்கு முந்தய 72 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்கிறார்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்.

''இந்த 72 மணி நேரத்தில், குறிப்பாக நள்ளிரவு முதல் அதிகாலை நேரம் வரையில் - இரவு 12 முதல் 5 மணிக்குள் பணப் பட்டுவாடாவை முடித்து விட இரண்டு பெரிய கட்சிகளுமே திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பணப் பட்டுவாடாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இவ்வளவு தொகுதிகளில் ஒரே சமயத்தில் பணப் பட்டுவாடா அதுவும் இரவு நேரத்தில் நடைபெற்றால் வந்து குவியும் புகார்களில் தேர்தல் ஆணையமும், காவல் துறையும் விழி பிதுங்கித் தான் போகும். இந்த களேபரத்தில் அந்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் பணப் பட்டுவாடாவை முடித்து விட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இது இன்றிலிருந்து ஓரிரண்டு இரவுகளில் முடிக்கப்படலாம்'' என்று எச்சரிக்கிறார் தமிழகத்தில் பணியாற்றும் மத்திய உளவுத்துறையின் உயரதிகாரி ஒருவர். தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இதற்குள் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது பணப் பட்டுவாடாவை முடித்து விட வேண்டும் என்பதுதான் இரண்டு பெரிய கட்சிகளின் இலக்காக இருந்திருக்கிறது என்று மேலும் கூறுகிறார் மத்திய உளவுத்துறையின் அந்த அதிகாரி.

கடந்த 2011 மற்றும் குறிப்பாக 2014 மக்களவைத் தேர்தல்களில் நடந்தது போல இந்தளவுக்கு பெரியளவுக்கு பணப் பட்டுவாடா இருக்குமா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் தேர்தல் ஆணையத்தினால் என்ன பெரியதாக செய்து விட முடியும் என்றே தெரியவில்லை. பணப் பட்டுவாடா அனைத்து தொகுதிகளிலும் பெரிய அளவில் நடந்தால் தமிழகத்தின் ஒட்டு மொத்த தேர்தல்களையும் ரத்து செய்ய முடியுமா? ஆங்கிலத்தில் countermand செய்வது என்பார்கள் ... அது சாத்தியமா?

'இது மிகவும் கடினமானது. ஒரு தொகுதியில் மிகப் பெரியளவில் வன்முறை அல்லது முறைகேடு நடந்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் தேர்தலைரத்து செய்யலாம். ஒட்ட மொத்தமாக தமிழகம் முழுவதிலும் தேர்தல்களை ரத்து செய்வது சாத்தியமற்றது. அப்படியெல்லாம் செய்தால், உடனடியாக நீதி மன்றத்துக்கு போவார்கள். காரணம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நீதி மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டதுதான். இவையெல்லாம் மிகப் பெரிய நடவடிக்கைகள், அதாவது மாநிலம் முழுவதிலும் தேர்தல்களை ரத்து செய்வது என்பது ....அது சாத்தியமற்றது என்றே நினைக்கிறேன்'' என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி.

மேலும் பணப் பட்டுவாடாவை தடுப்பது மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல என்றும் அவர் கூறுகிறார். ''நான் முன்பே பல முறை கூறிவிட்டேன். அடிப்படையில் இது கருப்பு பணம் சம்மந்தப் பட்ட விஷயம். 4 ஆண்டுகள் பத்து மாதம் நீங்கள் கருப்பு பணத்தை உற்பத்தி செய்ய அனுமதித்து விட்டு பின்னர் திடீரென்று கடைசி இரண்டு மாதங்களில் தேர்தல் ஆணையம் பணப் புழக்கத்தை கட்டுப் படுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படி சாத்தியப் படக் கூடிய விஷயம்? என்கிறார் கோபாலசாமி.

இதே கருத்தை வலியுறுத்தும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி. தேவசஹாயம், ''பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதல்ல தேர்தல் ஆணையத்தின் வேலை. தேர்தல் ஆணையத்தின் வேலை அடிப்படையில் தேர்தல் நடைமுறையை ஒழுங்காக முடிப்பதுதான். இது கருப்பு பணம் சம்மந்தப் பட்ட விஷயம். ஆகவே இது அடிப்படையில் வருமான வரித்துறையின் தோல்வியாலும், இன்ன பிற இந்திய அரசு நிருவாக இயந்திரங்களின் கோளாறுகளினாலும் வந்த பிரச்சனை'' என்கிறார்.

பிரச்சனையின் மூல வேர் கருப்பு பணம். ஆகவே ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பிரச்சனையின் தீர்வை தேர்தல் ஆணையம் மற்றும் போலீசின் தலையில் சுமத்துவது என்பது பழுதடைந்த பார்வைதான் .........

English summary
DMK and AIADMK starts Money distribution work to voters in Tamilnadu, explains columnist Mani in this article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X