For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்முன் நடக்கும் கொலைகள்.. கண்டுகொள்ளாத மக்கள்! காரணம் இதுதான் என்கிறார் மணியரசன்

Google Oneindia Tamil News

சென்னை: தனக்கென மட்டும் வாழாது பிறர்க்கெனவும் வாழ வேண்டும் என்ற சங்க காலத் தமிழரின் அறப் பண்புகளை தமிழ் மக்களிடம் விதைப்பதும், தமிழ்ச் சமூகத்திற்கேற்ற பொருளியல் கொள்கையை வடிவமைப்பதும் மிகமிகத் தேவை என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தெரிவித்துள்ளார். கொலைகளை தடுக்க மக்கள் முன்வராதது ஏன் என்பது பற்றியும் அவர் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொருள் நிறுவன ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டதையும், திருப்பூரில் ஜாதி வெறியர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டதையும் மணியரசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Murders in TN, Incompetence governance - Thamizh Thesiya Periyakkam

சுவாதி கொலை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 25.06.2016 அன்று காலை மென் பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண் நடைமேடையில் வைத்து, ஒரு கயவனால் படுகொலை செய்யப்பட்ட போது, அங்கு இருந்த மக்கள் தலையிட்டு அப்பெண்ணை பாதுகாக்க முன்வரவில்லை என்றும் கொலைகாரனை விரட்டிப் பிடிக்க முயலவில்லை என்றும் விமர்சனங்கள் பரவலாகப் பேசப்படுகின்றன.

சங்கர்-கௌசல்யா

இதற்கு முன், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கடை வீதியில் சங்கர், கௌசல்யா என்ற ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளம் தம்பதியினர் கொடியவர்களால் தாக்கப்பட்டு, சங்கர் அதே இடத்தில் இறந்தார். கவுசல்யா படுகாயமுற்று துடித்துக் கொண்டிருந்தார். அப்போதும்கூட, மக்கள் நிறைந்த அக்கடை வீதியில் கொலைகாரர்கள் தாக்கும் போது, குறுக்கே புகுந்து தடுக்க மக்கள் முன் வரவில்லை என்ற செய்தி வெளியானது.

25-ஆண்டுகளுக்கு முன்

மேற்கண்ட இரு கொலை நிகழ்வுகளும் 25-ஆண்டுகளுக்கு முன் அதே ரயில் நிலையத்திலும், கடை வீதியிலும் நடந்திருந்தால் பொது மக்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்பார்களா என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. உறுதியாக, கொலையைத் தடுக்க முடியாவிட்டாலும் கொலைகாரர்களை விரட்டிப் பிடிக்கவாவது முயன்றிருப்பார்கள்.

தனித் தனித் தீவுகளான மக்கள்

இப்போது ஏன் மக்கள் தலையீடு இல்லாமல் மக்கள் நிறைந்த இடங்களில் கொலைகள் செய்ய முடிகின்றது? எல்லை கடந்த பன்னாட்டு நிறுவன வேட்டைப் பொருளியல் (உலகமயப் பொருளியல்) செயலுக்கு வந்தபின், மக்கள் உதிரி நுகர்வோராகவும், ஒருவருக்கொருவர் போட்டியாளராகவும் மாற்றப்பட்டு விட்டார்கள்.

கோழைகள்

இந்த நுகர்வு வாதம் மக்கள் மனத்தில் மேலோங்கிய பின், ஒவ்வொருவரும் சமூகக் கூட்டுப் பண்பை - பொறுப்புணர்வை மெல்ல மெல்ல இழந்து, மனதளவில் தனித்தனித் தீவுகளாகிவிட்டனர். இன்றைய சமூகப் பொதுமனத்தில் வளர்க்கப்படும் தன்னல நுகர்வு வாதம், ஒரு தனி நபரின் துணிச்சல் பண்பையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, கோழைகளாக்கி விடுகிறது.

காரணங்கள் சரிதான்

தமிழ்நாட்டிலுள்ள ஆட்சியின் திறமைக்குறைவு, பொது அமைதியில் அதற்குள்ள அக்கறை குறைவு, காவல்துறையில் நிலவும் ஊழல் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டிப் பிழைக்கும் உளவியல், நீதித்துறையில் நிலவும் ஊழல்கள், சமூகப் பொறுப்பின்மை போன்றவற்றை இவ்வாறான நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணங்களாகச் சொல்வது, சரிதான்!

துணிச்சல் பண்பை வளர்க்க வேண்டும்

அதே வேளை, தனி மனிதர்களின் கூட்டுப் பண்பு, அநீதியைத் தடுக்க வேண்டுமென்ற நேர்மையுணர்ச்சி, துணிச்சல் ஆகியவை மேற்கத்தியத் திணிப்பான உலகமயப் பொருளியல் பண்பாட்டால் சிதைந்து விட்டன என்பதையும் தவறாமல் கணக்கில் கொள்ள வேண்டும். இதைச் சரி செய்வதற்கு அரசியல் அமைப்புகள், சமூக அமைப்புகள், கல்வித்துறை, ஊடகத்துறை போன்றவை மக்களிடையே சமூகக் கூட்டுணர்ச்சி, பிறர் மீது அக்கறை, நேர்மையின் பால் எழும் துணிச்சல் போன்ற பண்புகளை வளர்க்க முயல வேண்டும்.

அறப் பண்பு

தனக்கென மட்டும் வாழாது பிறர்க்கெனவும் வாழ வேண்டும் என்ற சங்க காலத் தமிழரின் அறப் பண்புகளை தமிழ் மக்களிடம் விதைப்பதும், தமிழ்ச் சமூகத்திற்கேற்ற பொருளியல் கொள்கையை வடிவமைப்பதும் மிகமிகத் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Thamizh Thesiya Periyakkam chief Maniyarasan said that reason behind the murders in TN depends upon the Incompetence Governance, corruption in police department, Judiciary and Social irresponsibility.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X