For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறுபத்து மூவருக்கு காட்சி தந்த மயிலை கபாலீஸ்வரர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 63 திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது இதையொட்டி சென்னை மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்களும் மயிலாப்பூர் மாடவீதிகளில் குவிந்தனர்.

மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்னும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது கபாலீஸ்வரர் ஆலயம். அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது இங்குதான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான்.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழா கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிராம தேவதை பூஜை நடைபெற்றது. அம்பிகையின் சிறப்பு வடிவமான கோலவிழி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்று இரவு வெள்ளியாலான மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார்.

தலமரம் புன்னை

தலமரம் புன்னை

மயிலை, ஆதி காலத்தில் புன்னைக்காடாக இருந்ததாகவும், ஒரு புன்னை மரத்தின் அடியில் சிவபெருமான் எழுந்தருளியதாகவும் வரலாறு சொல்கிறது. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் புன்னை மர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். கானகத்தில் சிவபெருமான எழுந்தருளியதை உணர்த்தும் விதமாகவே கடவுளர்களுக்கு மரங்களை வாகனங்களாக அமைத்திருக்கிறார்கள்.

கொடியேற்றம்

கொடியேற்றம்

கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 7ம் தேதி கொடியேற்றத்துடன் விழா களைகட்டியது. பத்துநாள் திருவிழாவில் தினசரி ஒரு வாகனத்தில் இறைவன் எழுந்தருளினார். இரண்டாம் நாள் திருவிழாவில் காலை சூரிய வாகனத்திலும் மாலை சந்திர வாகனத்திலும் சிவபெருமான் எழுந்தருளினார்.

அதிகார நந்தியில் இறைவன்

அதிகார நந்தியில் இறைவன்

மூன்றாம் நாள் காலை நடைபெறும் அதிகார நந்திக் காட்சி சிறப்பு வாய்ந்தது. மாட்டின் முகமும் சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறது. இந்த அதிகார நந்தியில் இறைவன் எழுந்தருளுவதை காண அதிகாலை முதலே பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால்

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால்

அன்றைய தினம் அம்பிகை, திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது.

மண்டபத்தில் ஞானசம்பந்தரின் திருமேனிக்குப் பால் ஊட்டும் வைபவம் நடைபெறும்போது, பக்தர்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டினர். அப்படிச் செய்வதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு பிரசாதமாக பால் வழங்கப்பட்டது.

வெள்ளி ரிஷப வாகனம்

வெள்ளி ரிஷப வாகனம்

நான்காம் நாள் நாக வாகனத்திலும், ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருமானும், தங்க ரிஷப வாகனத்தில் அம்பிகையும், மயில் வாகனத்தில் முருகனும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தளினார்கள். ஆறாம் நாள் யானை வாகனத்தில் இறைவன் எழுந்தருளினார். திருவுருவங்களுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு யானை மேல் வெள்ளையாடை அணிவிக்கப்பட்டது.

தேரோட்டம்

தேரோட்டம்

ஏழாம் நாள் திருவிழாவான நேற்று தேரில் இருக்கும் சிவபெருமானுக்கு வில், அம்புடன் அலங்காரம் நடைபெற்றது. திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரம். நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்து வந்த தேரினை கூடிநின்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பூம்பாவை உயிர்பித்தல்

பூம்பாவை உயிர்பித்தல்

இன்று நடைபெறும் எட்டாம் நாள் திருவிழா மிக முக்கியமானது. மயிலையின் தல வரலாற்றைச் சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஒரு காலத்தில் செட்டியார் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூம்பாவை என்று அழகான பெண் குழந்தை இருந்தாள். திருஞான சம்பந்தரின் புகழைக் கேள்விப்பட்ட செட்டியார், தன் மகளை அவருக்கு மணம் முடிக்க விரும்பினார். அதன்படியே மகளை வளர்த்தும் வந்தார். பூம்பாவைக்கு ஐந்து வயதானபோது அவள் பாம்பு தீண்டி இறந்துவிடுகிறாள்.

சாம்பலுக்கு பதிகம்

சாம்பலுக்கு பதிகம்

அவளுடைய உடலை எரித்துச் சாம்பலாக்கி, அந்த அஸ்தியை ஒரு குடத்தில் இட்ட செட்டியார், அதைக் கன்னி மாடத்தில் வைத்துவிடுகிறார். இருந்தாலும் தன் மகள் உயிருடன் இருப்பதாக நினைத்து அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

இது நடந்து சில வருடங்கள் கழித்து திருஞான சம்பந்தர் அந்த ஊருக்கு வருகிறார். அவரைப் பார்த்த ஊர் மக்கள் பூம்பாவையைப் பற்றிச் சொல்கிறார்கள். சம்பந்தர், ஆலயத்துக்குள் நுழையாமல் செட்டியாரைச் சந்திக்கிறார். அவருடைய மகளின் அஸ்தி இருக்கும் குடத்தை எடுத்துவரச் சொல்கிறார். அந்த அஸ்தியின் முன்னால் அமர்ந்து ஒவ்வொரு விழாவாகச் சொல்லி ஒவ்வொரு பதிகம் பாடுகிறார்.

உயிர்தெழுந்த பூம்பாவை

உயிர்தெழுந்த பூம்பாவை

"இந்த ஊரில் கார்த்திகை தீபம் நடக்கும், பெண்கள் எல்லாம் வீட்டில் விளக்கேற்றுவார்கள். அதைப் பார்க்காமல் மாண்டு போனாயே. இந்த ஊரில் தைப்பூசம் நடக்கும். பெண்கள் எல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள். அதை எல்லாம் பார்க்காமல் மாண்டு போனாயே" என்று பாடுகிறார்.

சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள். இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பூம்பாவை, உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

அறுபத்து மூவர் பெருவிழா

அறுபத்து மூவர் பெருவிழா

இன்று மாலை 4 மணிக்கு அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெறும். மாலை நான்கு மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நீளும் இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். கோலவிழி அம்மன், விநாயகர் இவர்களைத் தொடர்ந்து அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது.

அறுபத்து மூவர் கபாலீஸ்வரர் காட்சி

அறுபத்து மூவர் கபாலீஸ்வரர் காட்சி

இதைத் தொடர்ந்து வெள்ளித் தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரர் அறுபத்து மூவருக்கும் காட்சியளித்தார். நான்கு மாட வீதிகளையும் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டீகேஸ்வரர், மூலவர்கள் வலம் வந்தனர். இதை மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

அன்னதானம் சிறப்பு

அன்னதானம் சிறப்பு

இன்றைய தினம் ராயப்பேட்டையில் தொடங்கி மந்தைவெளி வரை அன்னதானம் நடைபெற்றது. இன்று நடைபெறும் அன்னதானம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெரிய அளவில் அடியவர்களுக்கு அன்னமிட இயலாதவர்களும் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டாவது தானம் கொடுப்பது சிறப்பு .

சிவனும், விஷ்ணுவும்

சிவனும், விஷ்ணுவும்

ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும் மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். அப்போது மோகினி வடிவில் இருக்கும் மகாவிஷ்ணு நடனமாடிக்கொண்டே வருவார்.

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார் அன்னை பார்வதி. இந்த நிகழ்வினைக் காணக் கண் கோடி வேண்டும். அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் மாங்கல்ய பாக்கியம் கைகூடும். நோய் நொடிகள் நீங்கி, ஆயுள் அதிகரிக்கும். அம்பாள் திருமணம் முடிந்த அன்று அன்னதானம் செய்வதால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்"என்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

English summary
The renowned Kapaleeswarar temple is celebrating the Arupathu Moovar festival (festival related to the 63 Saivite saints) which reaches a crescendo with Panguni Uthiram (Full Moon day) when the divine wedding of Shiva – Kapalaeeswarar with Parvathi - Karpagambal is celebrated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X