For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் முடிவை உடனே கைவிடுங்கள் – சீமான்

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோரி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதுகுறித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் அறிக்கையில், "தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பத்தில் நடந்தன. அப்போதே அதனைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் தீவிரமாகப் போராடினார்கள்.

விவசாய மக்கள் தொடங்கி அறிவார்ந்த பெருமக்கள் வரையிலான பலரும் தீவிரமாக அந்தத் திட்டத்தை எதிர்த்துவந்த நிலையிலும், மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு.

Naam Tmailar party released a statement…

மண், மலை, காற்று, விவசாயம், வாழ்வாதாரம் என அனைத்துவிதமான பேரழிவுகளுக்கும் பாதை வகுக்கக்கூடிய இந்தக் கொடிய திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்திப் பார்க்கும் மத்திய அரசு, தமிழர்களின் உயிரையும் வாழ்வையும் கிள்ளுக் கீரையாகத்தான் நினைக்கிறது.

சுமார் 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தின் மூலமாக பூமி மற்றும் விண்வெளி ரகசியங்கள் குறித்து அறியலாம் என அரசுத் தரப்பு சொல்கிறது. அப்பாவி விவசாய மக்களின் அச்சத்தையும் வாழ்வாதாரம் சிதையப் போகிறதே என்கிற பதைப்பையும் அறிய முடியாத அரசு, விண்வெளி ரகசியங்களை அறிந்து என்ன செய்துவிடப் போகிறது? சொந்த நாட்டின் குடிமக்களைத் தத்தளிக்க வைத்து அறிவியல் ஆராய்ச்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?

முதலில் இந்த நியூட்ரினோ திட்டத்தை இமயமலையில் தொடங்கத் திட்டமிட்ட மத்திய அரசு, அங்கே சாத்தியமில்லை என்பதை உணர்ந்து பின்னர் அசாம் மற்றும் கேரளாவில் கொண்டுவர முயன்றது.

ஆனால், அந்த மாநிலங்களில் மக்களின் போராட்டங்கள் தீவிரமெடுத்ததால், இப்போது தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க ஒப்புதல் கொடுத்திருக்கிறது. கூடங்குளத்தில் அணு உலையைக் கொண்டு வந்தும், ஒருமித்த தஞ்சை மாவட்டங்களில் மீத்தேன் எரிகாற்று திட்டத்தைக் கொண்டுவந்தும், கெயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியும் தமிழர்களின் வாழ்வைச் சூறையாடும் மத்திய அரசு, அடுத்தகட்ட அபாயமாக கொடூர நியூட்ரினோ திட்டத்தையும் தமிழகத்தில் காலூன்ற வைக்க திட்டமிட்டு வருகிறது.

இந்திய தேசத்தின் குடிமக்களாக இருந்தாலும், தமிழர்களைப் பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்தவே மத்திய அரசு முயல்கிறது என்பதற்கு இதைவிட உதாரணங்கள் தேவையில்லை.

நியூட்ரினோ ஆய்வு மையத்தைத் தேனி மாவட்டத்தில் தொடங்கினால் அங்கிருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரங்களும் சுற்றுச்சூழலும் நாசமாகும் அபாயம் இருக்கிறது. நியூட்ரினோ ஆய்வு நடந்த பல நாடுகளில் அணுக்கதிர் வீச்சு அபாயங்கள் இதற்கு முன்னர் நிகழ்ந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்காக மலை உச்சியில் இருந்து 1.3 கிலோ மீட்டர் கீழே 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும் எனவும், இதற்காக பாறைகளை உடைக்க வெடிமருந்துகளும் கனரகத் தொழில்நுட்பங்களும் பயன்படுத்த வேண்டும் எனவும் விபரமறிந்தவர்களே சொல்கிறார்கள்.

இத்தகைய கொடூர நிகழ்வுகளை அந்த விவசாய மண் எப்படி தாங்கும்? நில அதிர்வுக்கும் அபாயங்களுக்கும் வித்திடக்கூடிய இந்த ஆய்வு மையச் செயல்பாட்டைப் பெருமளவில் மக்கள் வசிக்கும் விவசாயப் பரப்பில் நிறைவேற்றுவது எத்தகைய முட்டாள்தனம்? இந்த பேரபாய ஆய்வு மையத்தைச் செயல்படுத்துவதன் மூலமாக மக்களின் வாழ்க்கைக்கும் விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரந்தர முடிவை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதாகவே தோன்றுகிறது.

இதற்கிடையில் அய்யா அப்துல்கலாம் உள்ளிட்ட சில விஞ்ஞானப் பெருமக்கள், நியூட்ரினோ திட்டத்தால் எத்தகைய பாதிப்பும் கிடையாது. இதில் கதிர்வீச்சுப் பொருட்களைப் பயன்படுத்த மாட்டார்கள். நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்துக்குப் பெருமைதானே தவிர, ஆபத்து இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். பல கிலோ மீட்டர் நீள அகலத்தில் சுரங்கம் தோண்டப்படும் போது அது சுற்றுச்சூழலையும் விவசாயத்தையும் நிச்சயம் பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த அடிப்படை உண்மை.

நியூட்ரினோ மையம் அமைக்க தேவைப்படும் பாறைகளைப் பிளக்கும் தொழில்நுட்பங்களாலும், வெடிமருந்துப் பொருட்களின் பயன்பாட்டாலும், கதிர்வீச்சுப் பொருட்களின் கலப்பாலும் மண் தொடங்கி காற்று வரை அத்தனையும் பாழ்பட்டுப் போகும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்காக ஐ.எம்.எஸ்.சி. நிறுவனம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாகப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த, கொச்சின் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் மக்கோளில், ''அணுமின் உற்பத்தி நிலையம்; அணு எரிபொருள் செயல்பாட்டு மையம்; அணுக்கழிவு மேலாண்மை மையம் என்ற மூன்று இனங்களின் அடிப்படையில்தான் நியூட்ரினோ மையத்துக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. பொட்டிபுரத்தில் அமைய இருப்பது நியூட்ரினோ ஆய்வு மையம் அல்ல, அணுக்கழிவுகளை கொட்டுவதற்கான பாதள சுரங்கம்தான்" என்று பகிரங்கமாக அறிவித்தார். கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் இதே கருத்தை தெரிவித்திருக்க, நியூட்ரினோ ஆய்வு மையச் செயல்பாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலரே ஆதரவுக் குரல் எழுப்புவது மக்களின் உயிரை விலைபேசும் அபாயத்துக்கு நிகரான கொடூரம்.

கனவிலும் நினைக்க முடியாத மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய அணுக்கழிவுகளைக் கொட்டவே நியூட்ரினோ மைய உருவாக்கம் தீவிரமாக்கப்படுவதாகவும், அதனாலேயே 'அணுக்கழிவு மேலாண்மை' என்கிற வார்த்தைகளை நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கான அனுமதிக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் சொல்லப்படுவதை அவ்வளவு சீக்கிரத்தில் புறக்கணித்துவிட முடியாது.

மக்களின் உயிரோடும் உணர்வோடும் விளையாடும் கொடூரத் திட்டத்தை கொஞ்சமும் மனசாட்சியின்றி மத்திய அரசு செயல்படுத்தத் துடிக்கிறது. விண்வெளி மற்றும் நியூட்ரினோ துகள் ஆய்வு என்கிற பெயரில் மக்களை அச்சுறுத்தும் இத்தகைய நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மக்களின் அச்சமறிந்து இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கான வேலைகள் தொடங்கிவிடாதபடி தடுக்க வேண்டும்.

அரசியல் பாகுபாடுகளை மறந்து ஒருமித்த தமிழகமும் இந்தப் பிரச்னையில் நேர்கொட்டில் நின்று நியூட்ரினோவுக்கு எதிரான முன்னெடுப்புகளை மேற்கொண்டு தேனி மாவட்ட மக்களுக்குக் காவலாக நிற்க வேண்டும். மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு நியூட்ரினோ ஆய்வு மையச் செயல்பாடுகள் தொடங்கப்படுமேயானால் நாம் தமிழர் கட்சி தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டங்களைக் கையிலெடுக்கும். நியூட்ரினோ திட்டத்தை விரட்டி அடிக்கும் வரை நாம் தமிழர் கட்சி ஓயாது" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar party Leader Seeman released a statement about neutrino research center in Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X