For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பப்பா.. என்னவென்று சொல்வது நாங்கள் படும் இன்னல்களை! #jaya

Google Oneindia Tamil News

சென்னை: "அம்மா என்றால் அன்பு" இந்த பாடலை கேட்கும் போது நம் கண் முன் தோன்றுவது "ஜெ. ஜெயலலிதாவாகிய நான்" என கூறும் உருவம். அம்மா என்றால் பெற்ற தாய் என்ற பொருள் மறந்து "அம்மா" என்ற சொல்லை தன்னுடையதாக்கிய, இன்னும் அதிமுக கட்சியின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் "இதயதெய்வம், புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா" அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

எங்கள் ஊரில் ஒரு கதை கூறுவார். ஒரு விஏஓ குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வந்தார். ஒருநாள் அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. இறந்த அன்றிலிருந்து ஒரு வாரம் வரை, அந்த ஊர்மக்கள் ஓயாமல் அழுது தீர்த்தனர். இதை பார்த்த விஏஓவுக்கு மனது வலித்தது. நம் நாய்க்குட்டிக்கே இப்படி என்றால். நமக்கு ? என்று மனதுக்குள் நினைத்தார். இதெல்லாம் முடிந்து சில வருடங்களில், அந்த விஏஓவும் இறந்தார். இப்பொழுது, விரலால் எண்ணி பார்க்கக்கூடிய அளவிலே மக்கள் இருந்தனர். இதை போலதான், இன்று அதிமுகவின் நிலையும்.

One year after Jayalalitha

இந்த கட்சியினரால் போற்றி புகழப்பட்ட "மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா" சிறைச்சாலைக்கு சென்ற பொழுது, தெருவெங்கும் போராட்டம். ஆங்காங்கே "காவிரி தண்ணீர் கூட வேண்டாம். எங்கள் தாய் வந்தால் போதும்" என்ற சுவரொட்டிகள். ஆனால், இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்திவரும் சிலரால் தான் நாம் அறியமுடிகிறது "இன்று கலைச்செல்வி ஜெயலலிதா நினைவு நாள் என்று". இதுதான் இயற்கை அளித்த பெரும் பாடம்.

மிக்க தைரியசாலியாக இருந்தவர், தான் தனியொருத்தியாக இருந்தாலும் தனக்கு பின் இவர்கள்தான் இந்த கட்சியை வழிநடத்துபவர் என்பதை கூறியிருக்கலாம் என்று பத்திரிக்கையாளர்கள், சமூக ஆலோசகர்கள் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் "கொஞ்சம் கூட சரியான, அறிவு தெளிவில்லாத கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு இவ்வளவுநாள் ஆட்சியில் இருந்ததே ஒரு பெரிய சாதனையாக தெரிகிறது.

ஒரு வருடத்திற்குள், கட்டிமுடித்த பாலம் கரையில் விழுவதை பார்த்தோம் கன்னியாக்குமரிக்கருகில். ஆளுக்கொரு பக்கமாய் சண்டை போட்டு, ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்ததை போல், அதிமுகவை பிளவுப் படுத்தி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது பாஜக எனும் தேசிய கட்சி. சென்னையில் பெருமழை, குமரியில் கடற்சீற்றம், மக்கள் மனதிலோ வெறும் ஏமாற்றம். உதய் மின் திட்டம் உதயமாகிவிட்டது. ஜிஎஸ்டி எங்களை கந்துவட்டி போல் கழுத்தை நெறுக்கியது. இப்பொழுது சற்று தளர்ந்து வருகிறது அதுவும் குஜராத் தேர்தலுக்காக. பாலம் ஏன் விழுந்தது எனக் கேட்டால்? கல்லணை மாதிரி நாங்கள் அதிகநாள் கட்டவில்லை. குறுகிய காலத்தில் காட்டியதால் இப்படி குறுகி விழுந்தது என்கின்றனர். இப்படி எண்ணற்ற காரணங்களை அடுக்கி எங்களை ஏமாற்றி வருகின்றனர்

இந்த ஓராண்டுக்குள் அப்பப்பா.. என்னவென்று சொல்வது நாங்கள் படும் இன்னல்களை. இதெல்லாம் போதாதென்று, அம்மாவின் மகள்/ மகன் என்று புற்றீசல்களாய் கிளம்பும் புரளிகள் வேறு. அம்மாவின் மரணத்திற்கு விசாரணை கேட்ட அம்மாவின் அன்பு மக்களே, இப்பொழுது நடக்கும் கூத்தைப்பார்த்து கூனிக்குறுகி நிற்கின்றனர். அன்று அம்மா இருக்கும் போது, ஒரு சிறு கேள்வி கேட்ட பெரிய நடிகருக்கு, பதிலாக பெரிய உரை வாசித்த அமைச்சர்கள். இப்பொழுது இந்த அவதூறுகளை பார்த்துக்கொண்டு அமைதியாக நிற்கின்றனர்.

இவர்கள் கூத்துக்கள் மறைந்து இவர்கள் சொல்வதை போல் "அம்மா"வின் ஆட்சி நடந்தால் சரி. காலம் கட்டாயம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில் நாம்.

- தனிஷ்ஸ்ரீ, சென்னை

English summary
It has been an year after the death of Jayalalitha. And there are more ruckus than achievements in the name of ADMK Govt, opines the writer .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X