For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“சித்தம் போக்கு சிவன் போக்கு"என இருந்தால் பாலாற்றில் உரிமைகளை இழப்போம்- கருணாநிதி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் உடனடியாக பாலாறு தடுப்பணைகள் குறித்தும், கோயில் ஆக்கிரமிப்பு, அத்துமீறல் குறித்தும் பொதுப் பணித்துறை மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து இது பற்றி விரிவாக விசாரிப்பதோடு, சட்ட ரீதியாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ சுமூகமாகத் தீர்ப்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் பிரச்சினை குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே கடந்த ஜூலை 1-ந் தேதி தாம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக கருணாநிதி தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆந்திரா அத்துமீறல்

ஆந்திரா அத்துமீறல்

பாலாற்றின் கரையிலே உள்ள கனகநாச்சியம்மன் கோவில், தமிழகப் பக்தர்களால் கட்டப்பட்டு, தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. சீனிவாசன் என்பவர் அர்ச்சகராக இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநில அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடியாக கோவிலுக்குள் நுழைந்து, அர்ச்சகர் சீனிவாசனை வெளியேற்றியதோடு, தமிழக எல்லையிலிருந்து வழங்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டித்து விட்டு, ஆந்திர மாநில எல்லையிலிருந்து மின் இணைப்பு வழங்கியுள்ளார்கள்.

தண்ணீரைத் தேக்கி வைக்கத் திட்டம்

தண்ணீரைத் தேக்கி வைக்கத் திட்டம்

ஆந்திர எல்லையில் நடைபெறும் இந்தச் சம்பவங்கள் பற்றி "தி இந்து" (தமிழ்) செய்தியாளர்கள் குழுவினர் நேரில் சென்று வெளியிட்டுள்ள செய்தியில், பாலாறு என்ற கிராமத்தில் 5 அடியாக இருந்த தடுப்பணையின் உயரத்தைக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 25 அடியாக உயர்த்திக் கட்டியதுடன், தடுப்பணையின் நீளத்தையும் அதிகரித்துள்ளனர். இதன்மூலம், பாலாற்றில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க தூய்மைப் படுத்தி உள்ளனர்.

பாமலுஒங்காவில் தடுப்பணை

பாமலுஒங்காவில் தடுப்பணை

அதே போல கங்குந்தி மலைத் தொடரிலிருந்து உருவாகும் பாலாற்றின் துணை நதியான பாமலுஒங்காவில் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக வனப் பகுதியில் மண்ணால் ஆன தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இங்கு, கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளனர். அதே போல பெரும்பள்ளம் என்ற கிராமத்தில் உள்ள ஏரியின் கடைமடையை உயர்த்திக் கூடுதலாகத் தண்ணீரைத் தேக்க திட்டமிட்டுள்ளனர்.

உயரம், பரப்பளவு அதிகரிக்கக் கூடாது

உயரம், பரப்பளவு அதிகரிக்கக் கூடாது

1892இல் "மெட்ராஸ் அரசாங்கத்துக்கும்" "மைசூர் சமஸ்தானத்துக்கும்" இடையில் பட்டியல் "ஏ" இணைப்பின்படி துங்கபத்ரா, வடபெண்ணை, தென் பெண்ணை, பாலாறு, காவிரி உள்ளிட்ட 15 ஆறுகளின் மேல் பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நீர்த் தேக்கப் பகுதிகளின் உயரத்தையும், பரப்பளவையும் பராமரிப்பு என்ற பெயரில் அதிகரிக்கக் கூடாது; அதன் பாசன பரப்பளவையும் அதிகரிக்கக் கூடாது.

அணை கட்டத் தடை

அணை கட்டத் தடை

மேலும், கீழ்பகுதியில் பாசனம் பெறும் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் கட்டித் தண்ணீரை வேறு பகுதிக்கு திசை திருப்பக் கூடாது மற்றும் தேக்கி வைப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. ஆனால் தமிழக அரசின் எந்த முன் அனுமதியும் இல்லாமல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணை கட்டி, அதனைக் கண்டித்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அப்போது அணை கட்டத் தடை விதிக்கப்பட்டது.

ஆவணத்தைக் காட்டுங்கள்

ஆவணத்தைக் காட்டுங்கள்

கனகநாச்சியம்மன் கோவில் பற்றி தெலுங்கு தேசக் கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறும்போது: "அந்தக் கோவில் எங்களுடைய எல்லையில் தான் உள்ளது, தமிழர்கள் கோயில் கட்டிக் கொள்ள நாங்கள் பெருந்தன்மையாக அனுமதி அளித்தோம். ஆனால் எங்களை கனகநாச்சியம்மன் கோவில் பூசாரி புறக்கணித்தார். அந்தக் கோவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்றால் அதற்கான ஆவணத்தைக் காண்பிக்கச் சொல்லுங்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

உரிமையை இழக்க நேரிடும்

உரிமையை இழக்க நேரிடும்

வேலூர் மாவட்டப் பாலாறு பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் ஏ.சி. வெங்கடேசன் கூறும்போது: "தமிழக அரசு இந்தப் பிரச்சனையை சட்டப் பூர்வமாக எதிர்க்காவிட்டால், பாலாற்றில் நமக்கு உள்ள உரிமையை இழப்பதுடன் பாலாற்றையும் இழக்க வேண்டியது தான்" என்று சொல்லியிருக்கிறார்.

வழக்கம்போல கடிதம்

வழக்கம்போல கடிதம்

ஆனால் தமிழக அரசின் சார்பில் முதல்வர் எப்போதும் போல ஆந்திர முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு, அத்துடன் தனது கடமை முடிந்து விட்டதைப் போல இருக்கிறார். நாட்டின் மீது நாளிதழ்கள் காட்டும் அக்கறையின் அளவுக்கு இணையாக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லா விட்டாலும், அதைப் பின்பற்றியாவது செயல்பட வேண்டாமா என்ற வேதனை தான் நமக்கு ஏற்படுகிறது.

சுமூகமாக தீர்க்க வேண்டும்

சுமூகமாக தீர்க்க வேண்டும்

எனவே இதற்குப் பிறகாவது தமிழக முதல்வர் உடனடியாக பாலாறு தடுப்பணைகள் குறித்தும், கோயில் ஆக்கிரமிப்பு, அத்துமீறல் குறித்தும் பொதுப் பணித்துறை மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து இது பற்றி விரிவாக விசாரிப்பதோடு, சட்ட ரீதியாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ சுமூகமாகத் தீர்ப்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும். மத்திய அரசுக்கும் இதுபற்றி விரிவாக எழுதிட வேண்டும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

மாறாக, "சித்தம் போக்கு, சிவன் போக்கு" என்ற போக்கில், "மாதம் மும்மாரி மழை பொழிந்ததா மந்திரிப் பிரதானியர்களே!" என்ற மனப்பான்மையில் இருந்தால், தமிழ் நாட்டு மக்களுக்குத் தான் மிகப் பெரிய உரிமை இழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்!''

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
DMK Chief Karunanithi urged TN Government that to solve the Palar issue by legal action or discussion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X