For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க பிளானா போடுறீங்க, பிளானு.. பாமக போராட்டம்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க நெடுஞ்சாலைகளை வகை மாற்றம் செய்யப்படுவறுவதைக் கண்டித்து வரும் 27ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக பாமக அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றம் செய்து, மதுக்கடைகளை திறக்க அரசு முயன்று வருவதற்கு பாமக கண்டனம் தெரிவித்து வரும் 27ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

மக்களை மீண்டும் மீண்டும் குடிகாரர்களாக்கும் நோக்கம் கொண்ட தமிழக அரசின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாலை விபத்துக்களிலும், தற்கொலைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு கிடைத்ததற்கு முக்கியக் காரணம் தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும், சாலைகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

சாலை விபத்து

சாலை விபத்து

சாலை விபத்துக்களைத் தடுக்க வேண்டுமானால் மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி சட்டப் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி அதில் வெற்றியும் பெற்றது. அதன்பயனாக தமிழகத்தில் மட்டும் நெடுஞ்சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன.

மீண்டும் திறக்க..

மீண்டும் திறக்க..

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு, சென்னையில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகியவற்றை நகர்ப்புற சாலைகளாக வகை மாற்றம் செய்து அவற்றில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க திட்டமிட்டிருந்தது.

நெடுஞ்சாலை வகை மாற்ற..

நெடுஞ்சாலை வகை மாற்ற..

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நோக்கத்தையே சிதைக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டால், அதை எதிர்த்து மக்கள் புரட்சி வெடிக்கும் என பா.ம.க. நிறுவனர் ராமதாசும் நானும் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். ஆனால், மக்கள் நலன் சார்ந்த அந்த அறிவுரையை கருத்தில் கொள்ளாத தமிழக அரசு, தமிழ்நாடு முழுவதும் நகரப்பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளை மாநகராட்சி/ நகராட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றி, அதை நாளை மறுநாள் 25ஆம் தேதிக்குள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்கும்படி மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர்களுக்கும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் கடந்த 21ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

ஏமாற்ற முடியாது

ஏமாற்ற முடியாது

பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மற்ற துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருப்பதாகவும், இதைத் தவிர்த்து விரைவாக நிவாரணப் பணிகளை செய்வதற்காகவும் தான் இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அக்கடிதத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கவே தமிழக அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்; மக்களை ஏமாற்ற முடியாது.

கைவிரிப்பு

கைவிரிப்பு

கடந்த காலங்களில் சில தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடப்பதாகவும், அதைத் தடுக்க சுங்கச் சாலைகள் அனைத்தையும் தமிழக அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்ட போது, அவ்வளவு நீளத்திற்கான சாலைகளை பராமரிக்கும் அளவுக்கு நிதி இல்லை என்று தமிழக அரசு கைவிரித்தது.

பராமரிப்பிற்கு பணம்?

பராமரிப்பிற்கு பணம்?

ஆனால், இப்போது 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளே எடுத்துக் கொண்டால் அவற்றின் நீளம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாலைகளில் நீளத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும். தமிழக உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கனவே மின்சாரக் கட்டணம் செலுத்த வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் போது இந்த சாலைகளை பாரமரிப்பதற்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?

கண்டிப்பு

கண்டிப்பு

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், தவிர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே தீர்மானம் நிறைவேற்ற முடியும். மாறாக மதுக்கடைகளை திறப்பதற்காக சாலைகளை வகைமாற்றம் செய்யும் தீர்மானத்தை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அவசர, அவசரமாக நிறைவேற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.

மக்கள் நல அரசல்ல

மக்கள் நல அரசல்ல

குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம், நீட் தேர்வு என தமிழகத்தில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது, அவற்றில் கவனம் செலுத்தாத தமிழக அரசு மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதற்கு மட்டும் அவசரம் காட்டுகிறது. இதிலிருந்தே பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்கள் நல அரசல்ல... மது வணிகர்களின் கைக்கூலி அரசு என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஏப். 27ல் போராட்டம்

ஏப். 27ல் போராட்டம்

தமிழக அரசுக்கு இறுதி எச்சரிக்கையாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். உச்சநீதிமன்றத் தீர்ப்பை சிதைக்கும் வகையில் சாலைகளை வகைமாற்றம் செய்து மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்முழக்க அறப்போராட்டம் நடத்தப்படும்.

உறுதி

உறுதி

இப்போராட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில் ஒன்று கூட சாலைகளில் மீண்டும் திறக்கப்படக்கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. அதற்காக சட்டப்போராட்டம், அரசியல் போராட்டம் என எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் பா.ம.க. செய்யும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

English summary
PMK has announced a protest against highways road will be changed into municipal road on April 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X