For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்வெட்டால் தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அ.தி.மு.க. அரசு: பாமக பொதுக்குழு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கும் முந்தைய திமுக மற்றும் தற்போதைய அதிமுக அரசுகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் பாமக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பாமகவின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை, மின்வெட்டு பிரச்சனை உள்ளிட்டவைகள் தொடர்பாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈழத் தமிழர் பிரச்சனை

இலங்கையில் போர் முடிவடைந்து நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்க வில்லை. இலங்கை வடக்கு மாநிலத்தில் உள்ள தமிழர்கள் இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் மிகவும் மோசமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வடக்கு மாநிலத்தில் தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்கப்பட்டவுடன் தமிழர்களின் துயரங்கள் அனைத்தும் பறந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டணி அரசு அதிகாரம் இல்லாமல் பெயரளவில் நடந்து கொண்டிருக்கிறது; தமிழர்களின் துயரங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட போதெல்லாம், இந்தியா குறுக்கிட்டு தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது.

இனப்படுகொலைக்காக இராசபக்சேவையும், அவரது கூட்டாளிகளையும் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதும், தமிழர்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்ய ஐ.நா. மூலம் தனித்தமிழீழம் அமைப்பதும் தான் ஈழத்தமிழர்களுக்கு நாம் வழங்கும் நீதியாக இருக்கும். இதை செய்யத்தவறிய மத்திய அரசுக்கும், அவ்வாறு செய்யும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி தரத் தவறிய முந்தைய தி.மு.க. அரசு மற்றும் இப்போதைய அ.தி.மு.க. அரசுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது

மின்வெட்டு

தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கடந்த 2011&ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு போக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின்னர் 10 முறை மூன்று மாதங்கள் கழிந்துவிட்ட போதிலும் மின்வெட்டு பிரச்சினை மட்டும் தீரவேயில்லை.

கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் மின்வெட்டு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் மின்வெட்டு போக்கப்பட்டு, 99% மின்மிகை மாநிலமாகி விட்டதாகவும், டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகம் 100% மின்மிகை மாநிலமாகிவிடும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. வழக்கமாக கோடைக் காலத்தில் தான் ஓரளவு மின்வெட்டு ஏற்படும். ஆனால், தற்போது மழைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது வரலாறு காணாத ஒன்றாகும். மின்தேவை குறைவாகவும், மின்னுற்பத்தி அதிகமாகவும் இருக்கக்கூடிய இந்த காலத்திலேயே மின்வெட்டைக் கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியவில்லை என்றால், வேறு எந்த காலத்திலும் மின்வெட்டை சரி செய்ய முடியாது.

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவதாக கூறிவரும் ஜெயலலிதா மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. இதனால் தமிழகத்தின் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து கடந்த ஆட்சியில் 2 முதல் 5 மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 10 முதல் 14 மணி நேரமாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சுமார் 11 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான மின்திட்டங்கள் அறிவிப்பு நிலையிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

மின்வெட்டை சரிசெய்யாமல் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியை கெடுத்ததுடன், பல்லாயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பை ஏற்றடுத்தியது தான் ஜெயலலிதா அரசின் சாதனையாகும். மின்வெட்டை சரிசெய்யாமல் தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அ.தி.மு.க. அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு மோசம்

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் பேட்டியளித்த ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் பயந்துபோன கொள்ளையர் அனைவரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

ஆனால், இந்தியா முழுவதும் உள்ள கொள்ளையர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வந்துவிட்டார்களோஎன்று அஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் கொள்ளைகள் அதிகரித்துவிட்டன.

மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் நிலவுகிறது; அதேபோல் மக்கள் வீடுகளை பூட்டி விட்டு நிம்மதியாக வெளியில் செல்ல முடியவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 5800 படுகொலைகளும், 55 ஆயிரத்திற்கும் அதிகமான கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களும் நடந்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகள் பட்டியலில் சோனியா காந்திக்கு அடுத்து பத்தாவது இடத்தில் இருக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி-யின் சென்னை இல்லத்தில் விலை மதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன; பாதுகாப்பு மிகுந்த சென்னை அருங்காட்சியகத்தில் மொகலாயர் கால நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் தமிழகத்தின் சட்டம்& ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

சட்டம் & ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதல்வர் ஜெயலலிதாவோ காவல்துறையை பயன்படுத்திஎதிர்க்கட்சியினரை பழிவாங்குதல், 144 தடை உத்தரவை பிறப்பித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதேநிலை நீடித்தால் தமிழகம் வாழத் தகுதியற்ற மாநிலமாகிவிடும். அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அச்சக் காடாக மாற்றிவரும் ஜெயலலிதா அரசுக்கு இப்பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

விவசாயிகள் பிரச்சனை

உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி. ஆனால், உழும் உழவனுக்கே சோறு கிடைக்காது என்று சொல்லும் அளவுக்குத் தான் உழவுத் தொழில் மோசமடைந்து கொண்டு செல்கிறது. ஒருபுறம் மாறிமாறி ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு என விவசாயிகளின் துயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்ட நிலையில், வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே உழவர்களின் துயரத்தைப் போக்க முடியும் என்றும், இதற்காக உழவர் வருவாளிணி குழுக்களை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தமிழக அரசோ இத்தகைய குழுக்களை அமைக்காததுடன், விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கவும் மறுத்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.2500 வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு டன் கரும்புக்கு ரூ.2100 மட்டுமே கொள்முதல் விலையாகக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றினார். இப்போது கூட ஒரு டன் கரும்புக்கு ரூ.3500 வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த மாநில அரசின் பரிந்துரை விலையை ரூ.100 குறைத்து டன்னுக்கு ரூ. 2650 மட்டும் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

அதேபோல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2000 வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு, வெறும் ரூ.1300 மட்டுமே வழங்குகிறது. இதனால், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வறுமையிலும், கடன் சுமையிலும் வாடுகின்றனர். நெல் மற்றும் கரும்புக்கு போதிய விலை கொடுக்காமல் விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிய தமிழக அரசுக்கு பா.ம.க. தலைமைப் பொதுக்குழு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது

மீனவர் படுகொலை

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வாழ்க்கை கண்ணீரில் தான் கரைகிறது. நாகப்பட்டினம் முதல் இராமேஸ்வரம் வரையுள்ள மாவட்டங்களின் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால், மீண்டும் கரை திரும்புவார்களா? என்பது நிச்சயமில்லை.

அந்த அளவுக்கு சிங்களப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சிங்களப்படையினரால் இதுவரை 800&க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும் 600&க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போதைய நிலையில் 267 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்; தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 86விசைப்படகுகள் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதனால், மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களை மீட்கவோ, அவர்களின் குடும்பங்களுக்கு உதவவோ மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக மீனவர்கள் பேராசைக்காரர்கள் என்று முத்திரை குத்தும் முயற்சிகளில் தான் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.

மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற அμகுமுறையை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கை சிறையில் வாடும் 267 மீனவர்களையும், பறிமுதல் செளிணியப்பட்ட 86 படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும்; வரும் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக, இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுக்களின் போது இப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறைக்குப் போன 134 நிர்வாகிகளுக்கு பாராட்டு

பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும், மாமல்லபுரம் மாநாட்டின் இமாலய வெற்றியையும் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு பா.ம.க. நிர்வாகிகள் மீதும், வன்னிய சமுதாயத்தின் மீதும் கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தில் அப்பாவித் தொண்டர்கள் இருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் போராட்டம் நடத்தச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ. குரு ஆகியோரையும். 8000&க்கும் மேற்பட்ட தொண்டர்களையும் அ.தி.மு.க. அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக, எந்தத் தவறும் செய்யாத ஜெ.குரு உள்ளிட்ட 134 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது.

ஜெ. குரு உள்ளிட்டோர் மீதான தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, அதை மத்திய உள்துறை அமைச்சகம் இரத்து செய்தது. ஆனால், அதை ஏற்காத தமிழக அரசு சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது.

குறிப்பாக வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு விடுதலையாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அரசு, அவர் மீது மொத்தம் 4 முறை குண்டர் சட்டத்தை பாய்ச்சியது. அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்காமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தது.

தமிழக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை துணிச்சலுடன் எதிர்கொண்டு நான்கரை மாதம் முதல் எட்டு மாதம் வரை கொடுஞ்சிறையை அனுபவித்து திரும்பிய ஜெ.குரு உள்ளிட்ட 134 பேரையும் இப்பொதுக்குழு பாராட்டுகிறது. இவர்களை நீதிமன்றத்தின் உதவியுடன் மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததுடன், அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிய மருத்துவர் ராமதாசு, மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோருக்கும், களப் பணியாற்றிய சட்டப் பாதுகாப்புக் குழு வழக்கறிஞர்களுக்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது

கோமாரி நோய்

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. நாகை மாவட்டத்தில் தொடங்கிய கோமாரி நோய் சென்னை தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியிருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டன. இதை அறிந்து கோமாரி நோயைத் தடுக்க முன்கூட்டியே கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் எதையும் அரசு நிர்வாகம் மேற்கொள்ளாததால் தமிழகம் முழுவதும் இந்த நோய் பரவி பத்தாயிரத்திற்கும் அதிகமான கால்நடைகளை பலி கொண்டிருக்கிறது. கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கு கர்நாடகத்தில் ரூ. 25 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படுவதால் தமிழகத்திலும் அதே அளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு நிராகரித்து விட்டது. கோமாரி நோயை கட்டுப்படுத்தத் தவறியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிராகரித்தது கண்டிக்கத்தக்கது.

பால் கொள்முதல் விலை

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட எருமைப்பாலின் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், பசும்பாலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், யானைப் பசிக்கு சோளப் பொரியைப் போல எருமைப் பால், பசும்பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு தமிழக அரசு வெறும் ரூ. 3 மட்டுமே உயர்த்தியது. தீவனம் உள்ளிட்ட கால்நடை உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்றவாறு பால் கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியாளர்களின் துயரை துடைக்கத் தவறிய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

English summary
PMK General Council slams Central and State governments on the Eelam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X