For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாறு திரும்பியது... சபித்த வாய்களிலிருந்து வாழ்த்து மழை... மன்மோகன் சிங் 85!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை : நேற்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் 85 வது பிறந்த நாள். சமூக வலைத் தளங்களில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தது ஆச்சரியமாக இருந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை அவரை வசை பாடிய அதே சமூக வலைத்தள வாய்கள் மிகவும் கௌரவமான முறையில் வாழ்த்துக் கூறின.

சிலர் மகான் என்றனர்... சிலர் மாமேதை என்றனர்... சிலர் காலம் தந்த கொடை எனப் போற்றினர். நேற்று முழுக்க ட்விட்டரில் #DrManmohanSing #MMS என்பவைதான் ட்ரெண்டிங். அதிசயம்தானே!

Pouring wishes to Dr Manmohan Singh's 85th B'day

"History will be kinder to me than contemporary media and opposition parties in Parliament" என்ற டாக்டர் மன்மோகன் சிங்கின் பிரபலமான வாசகத்துடன் அவருடைய புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவலாகக் காணப்பட்டது. தன்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரையும், ஊடகங்களையும் விட வரலாறு தன்னிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ளும் என்பது தான் டாக்டர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட புகழ்பெற்ற வாசகமாகும்.

10 ஆண்டுகள் பிரதமராக இருந்த போதும், முன்னதாக ஐந்து ஆண்டுகள் நிதி அமைச்சராக இருந்த போதும் அதிர்ந்து பேசாதவர் மட்டுமல்ல, அதிகம் பேசாதவராகவும் இருந்தார். அவசியம் ஏற்பட்டால் ஒழிய அவர் வாய் திறந்து பொதுவெளியில் பேசியது இல்லை. தனக்கென ஒரு கூட்டம் சேர்த்துக் கொள்ளத் தெரியாதவராகவே பதவிக் காலத்தைக் கழித்தார்.

டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு ஒருவகையில் ஆசானாகவும், அனைத்து விதமான சுதந்திரத்தையும் வழங்கிய முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்மராவும் அதிகம் பேசியதில்லை. 17 மொழிகளில் பேசும் வல்லமை கொண்ட நரசிம்மராவ், பொதுவெளியிலோ, தொலைக்காட்சி ஊடகங்களிலோ வாய்ச் சவடால் பேசியதில்லை, நாடு மிகவும் இக்கட்டான பொருளாதார நிலையில் இருந்த போது, மைனாரிட்டி ஆட்சியை வைத்துக் கொண்டே, நவீன இந்தியாவை கட்டமைத்தார் நரசிம்மராவ். அன்று அவர் தொடங்கிய மாற்றத்தை, எப்படிப் பெற்றோம் இதை என்று உணராத சமூகவலைத்தள தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நரசிம்மராவின் திட்டங்களை முற்றிலுமாக நிறைவேற்றிய டாக்டர் மன்மோகன் சிங்கைத்தான் சகட்டு மேனிக்கு திட்டித்தீட்டியது இந்த சமூக வலைத்தள தலைமுறையும். மூன்றாண்டுகளுக்குள்ளாகவே 'வரலாறு தன்னிடம் கனிவாக இருக்கும்' என்ற மன்மோகன் சிங்கின் வாக்கு பலித்து விட்டது. நரசிம்மராவும் சரி, மன்மோகன் சிங்கும் சரி வாய்சவடால் செய்யாமல் சாதித்துக் காட்டிய தலைவர்கள்.

இவர்கள் இருவருக்கும் ஒரு முன்னோடி இருந்தார். அவர்தான் தமிழகம் தந்த பெருந்தலைவர் காமராஜர். அந்த காலக் கட்டத்திலேயே, தமிழகத்திற்கு தேவையானது நீர் ஆதாரங்களும், கல்வியும் தான் என்று தீர்க்கமான முடிவு செய்து, அணைகளும் பள்ளிக்கூடங்களும் கட்டியவர். மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். அவர் கட்டிய கிராமப்புற பள்ளிகளில் படித்தவர்கள் இன்று அமெரிக்காவில் பல உயர்பதவிகளில் இருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை. காமராஜரும் அதிர்ந்து பேசியது இல்லை. 'ஆகட்டும் விடுண்ணேன்' என்பது தான் காமராஜர் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை. தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே, லால் பகதூர் சாஸ்திரி மறைந்த இக்கட்டான நேரத்தில், தலைமையை தேர்ந்தெடுத்த பெருந்தலைவர் காமராஜர்.

ஆக, சாதித்தவர்கள் என்றுமே அதிர்ந்து பேசியதில்லை, அதிகம் பேசியதும் இல்லை. அமைதியாக நாட்டு நலனே என் கடன் என்று ஏற்ற பணியை செவ்வனே செய்து முடித்து வரலாற்றில் நிரந்தரமாக நிலையான இடம் பெற்றுள்ளார்கள். டாக்டர் மன்மோகன் சிங் இப்போது வரலாற்றுச் சாதனையாளராக மாறியிருக்கிறார். வரலாறு திரும்பிவிட்டது!

-ஸ்கார்ப்பியன்

English summary
Thousands and lakhs of birthday wishes poured on Dr Manmohan Singh for 85th B'day in social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X