For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவுமில்லையே: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Railway budget dissapoinments says Vaiko
சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒருசில புதிய வண்டிகளைத் தவிர, நீண்ட கால எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய ரயில்வே அமைச்சர் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில், நவீன மயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

அனைத்துத் தொடர்வண்டி நிலையங்களிலும் தானியங்கி பயணச்சீட்டு வழங்குதல், இணையம் மூலம் நடைமேடைச் சீட்டு வழங்குதல், அலைபேசி வழியாக ரயில் வருகை புறப்பாடு தகவல் அளித்தல், முக்கிய நிலையங்களில் வை-பை இணைய வசதி, முக்கிய ரயில்கள், புறநகர் இரயில்களில் தானியங்கிக் கதவுகள், முன்பதிவு செய்யாத இரயில் பெட்டிகளுக்கும் இணையம் மூலம் பயணச் சீட்டு பெறும் வசதி, அஞ்சல் நிலையங்கள் மற்றும் அலைபேசி மூலம் முன்பதிவு வசதி போன்ற அறிவிப்புகள், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்து இருக்கின்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு, உணவு, குடிநீர் வசதிகளுக்கு முன்னுரிமை போன்றவை, பயணிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும். ரயில்வே துறையின் மூலம் சூரிய ஒளி மின்சக்தி தயாரித்தல், ரயில்வே துறையை முற்றிலும் கணினி மயம் ஆக்குதல், சரக்கு வண்டிகளில் காய்கறி, பால், பழம் கொண்டு செல்ல ஏற்பாடு, ரயில்வே பல்கலைக்கழகம் ஏற்படுத்துதல், முதன்முதலாக அதிவேக (புல்லட்) விரைவு ரயில் அறிமுகம் போன்றவை ரயில்வே பட்ஜெட்டின் சிறப்புகள் ஆகும்.

ஆனால், கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய தடங்கள் அமைக்கவும், உள்நாட்டு முதலீடுகள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகள் வரவேற்கப்படும் என்ற அறிவிப்பு ரயில்வே துறை தனித்தன்மையை இழந்து தனியார்மயம் ஆக்கப்பட்டுவிடும் என்ற கவலையைத் தருகிறது.

தமிழ்நாட்டுக்கு ஒருசில புதிய வண்டிகளைத் தவிர, நீண்ட கால எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

சென்னை-கன்னியாகுமரி இரட்டைத்தடம் அமைக்கும் திட்டம், நிலுவையில் உள்ள பல்வேறு அகலப்பாதைத் திட்டங்கள், மின்மயமாக்கும் திட்டங்கள் மற்றும் புதிய தடங்கள் அமைத்திட அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

சென்னை ராயபுரத்தில் நான்காவது முனையம் அமைப்பது, சென்னை மையத் தொடர்வண்டி (சென்ட்ரல்) நிலையத்தை உலகத்தரத்திற்கு உயர்த்துவது போன்ற அறிவிப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் தருகிறது.

எரிபொருள் விலை ஏற்றத்துக்கு ஏற்பக் கட்டணங்களை உயர்த்துவது என முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்படுத்திய ரயில்வே கட்டண நிர்ணய ஆணையம் நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

அவ்வப்போது ரயில் கட்டண உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது பொதுமக்களின் சுமையை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும்.

ரயில்வே பட்ஜெட்டில் பொதுவாக வரவேற்கத்தக்க பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko told that railway budget disappoints the people of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X