For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம்.. மீண்டும் அறிவித்த மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி மத்திய அரசு மீண்டும் உத்தரவிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்திப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் உள்ளூர் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Ramadoss condemns Sanskrit Week order

இந்தியா முழுவதும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் நேற்று முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.

சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு எழக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பி, அதற்கு அடுத்த நாளே கொண்டாட்டத்தை தொடங்கும்படி சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரத்தை கடந்த ஆண்டே சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிமுகம் செய்தது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்ற சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து தமிழக அரசும், மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சமஸ்கிருத வாரத்திற்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தின் உணர்வுகளை மதித்து சமஸ்கிருத வாரத் திணிப்பை சி.பி.எஸ்.இ. கைவிட்டிருக்க வேண்டும்.

ஆனால், சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, இதற்கு எதிர்ப்பு எழுந்து விடக்கூடாது என்பதற்காக கமுக்கமாக சுற்றறிக்கை அனுப்பி அடுத்த நாளே கொண்டாட்டத்தை தொடங்குவது நல்லாட்சிக்கு அடையாளமோ, வெளிப்படையான செயலோ அல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

‘‘சமஸ்கிருதம் இந்தியாவின் தொன்மையான மொழிகளில் ஒன்று. இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சார வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் சமஸ்கிருதத்தை நன்றாக அறிந்திருப்பது மிகவும் முக்கியம்'' என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது முற்றிலும் தவறானது ஆகும். ‘‘ உலக மொழிகளுக்கெல்லாம் தமிழ் தாய்மொழி. சமஸ்கிருதத்துக்கு தமிழ் மூல மொழி'' என்பதை பாவாணர் ஆதாரங்களுடன் மெய்ப்பித்துள்ளார். சமஸ்கிருதம் வாய் மொழி... தமிழ் வாழ்மொழி என்பது மொழியறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை.

சமஸ்கிருதத்தை வெறும் 14,000 பேர் மட்டுமே பேசுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் தமிழ் உலகம் முழுவதும் 10 கோடி மக்களால் பேசப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளைப் பேசி, தனித்தனி கலாச்சாரத்தைக் கடைபிடிக்கும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மீது சமஸ்கிருத திணிக்கப்படுவதை ஏற்க முடியாது.

மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு பதவியேற்ற பின் சமஸ்கிருத வாரம், சமஸ்கிருதம் கட்டாயப் பாடம், ஆசிரியர் நாளை குரு உத்சவ் ஆக கொண்டாடுதல், பல்கலைக்கழகங்களில் இந்தி கட்டாயப் பாடம், தமிழ்நாட்டில் உள்ள பண்பலை வானொலிகளில் இந்தி நிகழ்ச்சிகள் என மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தட்பவெப்ப நிலை மாறி விதைக்கப்படும் பயிர்களை மண் கூட ஏற்றுக்கொள்ளாது எனும் போது, இனம் மாறி திணிக்கப்படும் மொழியையும், கலாச்சாரத்தையும் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எனவே, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை உடனடியாக நிறுத்தும்படி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு(சி.பி.எஸ்.இ) அரசு ஆணையிட வேண்டும்.

மேலும், பா.ம.க. ஏற்கனவே வலியுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் உள்ளூர் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Central Board of Secondary Education has once again asked all its affiliated schools inside and outside India to observe Sanskrit Week beginning Wednesday. PMK founder Ramadoss condemns this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X