For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீட்டில் அபராதம் விதித்தது தமிழக அரசுக்கு தலைகுனிவு: ராமதாஸ்

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக மிகப்பெரிய தலைகுனிவை தமிழக அரசு சந்தித்துள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தவறியதால், சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 கோடி அபராதம் விதித்திருப்பது, தமிழக அரசுக்கு தலைகுனிவு என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் 50 விழுக்காட்டை அரசு ஒதுக்கீட்டுக்கு பெற்றுத் தராததற்காக தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி தலா ரூ.1 கோடி அபராதமும் விதித்திருக்கிறது. தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக மிகப்பெரிய தலைகுனிவை அரசு சந்தித்துள்ளது.

Ramadoss statement about 50% reservation of medical higher education for medical officers case

தமிழகத்தைப் பொறுத்த வரை தி.மு.க. அரசாக இருந்தாலும், அ.தி.மு.க. அரசாக இருந்தாலும் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியில் இருப்பவர்களுக்கு பணம் காய்க்கும் மரங்களாக தனியார் கல்வி நிறுவனங்கள் விளங்குவது தான் இதற்குக் காரணமாகும். அதிலும் குறிப்பாக தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமிருந்து கிடைக்கும் பணத்திற்காக அவற்றின் அனைத்து அத்துமீறல்களையும், முறைகேடுகளையும் மூடி மறைத்து காக்கும் காவலர்களாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் முதுநிலை மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டை அரசு ஒதுக்கீட்டுக்கு பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவ்வாறு செய்ய விதிகளில் இடமில்லை என்று கூறி அக்கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுத்து வந்தது.

தனியார் கல்லூரிகளுக்கு சாதகமான அரசின் இந்நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் சரியாக கண்டுபிடித்து கண்டனம் தெரிவித்திருப்பதன் மூலம் முதுநிலை மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் புதிய புரட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. இத்தீர்ப்பின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் 50 சதவீதம் அரசுக்கு ஒதுக்கப்பட்டு, அவை தமிழக அரசின் மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்பட வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தாமல் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர இயலும். இது ஒரு வரப்பிரசாதமாகும். தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மீதமுள்ள 50 சதவீதம் இடங்களும் அரசு நடத்தும் ஒற்றைச்சாளர கலந்தாய்வின் மூலம் தான் நிரப்பபட வேண்டும். எனினும், இதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் அவற்றின் விருப்பப்படி கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளும் என்பது தான் விரும்பத்தகாத ஒன்றாகும். இதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் ஏலத்தில் விடாத குறையாக விற்பனை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் தமிழக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் குறித்து பல இடங்களில் சாட்டை வீசப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ''இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் பொது நலனுக்கு எதிரான வகையில் முறைகேடான காரணங்களுக்காக அவ்வாறு செய்யாமல் தவிர்த்தது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும்.

இந்த வி‌ஷயத்தில் தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசுகள் வேண்டுமென்றே தோல்வியடைந்திருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பொறுப்புடனும், பொதுநலனைக் கருத்தில் கொண்டும் செயல்பட வேண்டும் என்பது தான் பொதுவான எதிர்பார்ப்பு ஆகும். ஆனால், அந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அதன் கடமையை சரியாக செய்யவில்லை. அது மட்டுமின்றி, 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்குமாறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டாயப்படுத்த முடியாது என தமிழக அரசு வாதிட்டது ஆச்சரியமளிக்கிறது.

அதேபோல், இந்திய மருத்துவக்கழகமும் அதன் விதிகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யத் தவறி விட்டது'' என்று சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் விளாசித்தள்ளியிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. அரசுகளின் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு காரணமாக கடந்த 16 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய 5000-க்கும் அதிகமான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் பணக்காரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த பாவத்திற்காகவும், துரோகத்திற்காகவும் கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் கூட சில போதாமைகள் உள்ளன. தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 கோடி அபராதம் மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் செலுத்தப்பட வேண்டும். அரசுக்கு தான் தண்டம் விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர தமிழகத்தை சுரண்டிக் கொழுத்த திராவிட ஆட்சியாளர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
PMK Founder Ramadoss statement about 50% reservation of medical higher education for medical officers case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X