For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமண காலம் நெருங்கி வருகிறது... தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: திருமணம் உள்ளிட்ட விழாக்காலங்கள் நெருங்கி வருவதால் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தங்கம் விலை உயர்வு...

தங்கம் விலை உயர்வு...

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை முந்தைய மன்மோகன்சிங் அரசு கடந்த ஆண்டு 10%ஆக உயர்த்தியதால் கடந்த ஓராண்டில் தங்கம் விலை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. உலக சந்தை நிலவரங்களால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஓரளவு குறைந்திருக்கும் போதிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எளிதாக வாங்கும் அளவுக்கு இன்னும் குறையவில்லை.

இறக்குமதி தான் காரணம்...

இறக்குமதி தான் காரணம்...

தங்கம் விலை அதிகரித்ததற்கு இறக்குமதி தான் காரணம் என்பதால், அந்த வரி குறைக்கப்பட்டாலோ அல்லது அடியோடு ரத்து செய்யப்பட்டாலோ பொன் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறையக்கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால், தங்க இறக்குமதி வரியை குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய நிதி மற்றும் வணிகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அமைச்சரின் கருத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை...

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை...

கடந்த 2012 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை தங்கம் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வில்லை. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்ததாலும், உலகின் பல நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலையால் இந்தியாவின் ஏற்றுமதி சரிந்ததாலும் நடப்புக்கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது. 2012&13 ஆம் ஆண்டில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4.7% ஆக, அதாவது ரூ. 5.29 லட்சம் கோடியாக அதிகரித்த நிலையில், அதைக்கட்டுப்படுத்தும் நோக்குடன் தங்கம் மீது 2% இறக்குமதி விதிக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2013 ஆகஸ்ட் மாதத்தில் 10% என்ற உச்சத்தை எட்டியது. இதன் பயனாக தங்கத்தின் இறக்குமதி குறைந்ததால், 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

பாஜகவின் தேர்தல் வாக்குறுதி...

பாஜகவின் தேர்தல் வாக்குறுதி...

இதனால் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இறக்குமதியை குறைப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படவில்லை. இறக்குமதி வரி காரணமாக உலக சந்தைக்கும் இந்திய சந்தைக்கும் இடையிலான தங்கத்தின் விலையில் 15 முதல் 20 விழுக்காடு வரை வித்தியாசம் நிலவியதால், அதைப் பயன்படுத்திக் கொண்டு அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது.

கடத்தல்காரர்கள்...

கடத்தல்காரர்கள்...

2013 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களை விட 2014 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் தங்கத்தின் இறக்குமதி 43% குறைந்துள்ளது. அதே நேரத்தில், இதே காலகட்டத்தில் தங்கத்தின் தேவை முந்தைய ஆண்டை விட 13% அதிகரித்துள்ளது. ஆனாலும் எந்த தடையுமின்றி, தங்கம் கிடைப்பதற்குக் காரணம் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவது தான் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளன. இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதல் இதுவரையிலான ஓர் ஆண்டில் 3 லட்சம் கிலோ தங்கம் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சுங்க அதிகாரிகள் எவ்வளவு தான் விழிப்பாக இருந்தாலும் கடந்த ஓராண்டில் 2500 கிலோ கடத்தல் தங்கத்தை மட்டுமே பறிமுதல் செய்ய முடிந்திருக்கிறது. அதாவது 99% கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிக்கவோ அல்லது தங்கக் கடத்தலைத் தடுக்கவோ முடியவில்லை. இதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார பயனை கடத்தல்காரர்கள் அனுபவிக்கிறார்கள்.

பற்றாக்குறை...

பற்றாக்குறை...

தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டதற்காக கூறப்பட்ட காரணங்கள் எதுவுமே இப்போது இல்லை. தங்க இறக்குமதி பெருமளவில் குறைந்து விட்டது. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அதற்கான செலவும் குறைந்து விட்டது. ஏற்றுமதியும் ஓரளவு அதிகரித்திருப்பதால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2013&14 ஆம் ஆண்டின் இலக்கான 3.7%&ஐ விட குறைவாக 1.7% என்ற அளவுக்கு சரிந்து விட்டது. இறக்குமதி வரி தளர்த்தப்படும் பட்சத்தில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தால் கூட நடப்பாண்டில் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை 2.2 விழுக்காட்டைத் தாண்டாது.

நடவடிக்கை தேவை...

நடவடிக்கை தேவை...

எனவே, விழாக்காலங்களும், திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களை நடத்துவதற்கான பருவமும் நெருங்கி வரும் வேளையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ மத்திய அரசு முன்வர வேண்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The PMK founder Ramadoss has requested the central government to reduce the gold import tax.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X