For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வார இறுதி நாட்களில் வட மாநில கொள்ளையர்கள் விமானம் மூலம் வந்து தமிழகத்தில் திருடுகிறார்கள்: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் வார இறுதி நாட்களில் விமானங்களில் தமிழகத்திற்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

என்றைக்கு ஓர் இளம்பெண் நகைகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் அச்சமின்றி தனியாக நடமாட முடிகிறதோ அன்று தான் நாம் முழுமையான விடுதலை அடைந்தவர்களாவோம் என தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறினார். ஆனால், பட்டப்பகலில் கூட நகைகளுடன் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அளவுக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை தான் தமிழகத்தில் இப்போது நிலவுகிறது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

நகை பறிப்பு

நகை பறிப்பு

பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறை உள்ளிட்ட குற்றங்கள் ஒருபுறமிருக்க நகை அணிந்து செல்லும் பெண்களை மிரட்டியும், தாக்கியும் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் பெருகிவிட்டன.

சென்னை

சென்னை

சென்னையில் சங்கிலிப் பறிப்பு குற்றங்கள் நிகழாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. பெரும்பாலும் காலை நேரங்களிலும், மாலை வேளைகளிலும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து சங்கிலிப் பறிப்பு சம்பவம் உள்ளிட்ட குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

புகார்கள்

புகார்கள்

சென்னையில் வார நாட்களில் 10 முதல் 15 சங்கிலிப் பறிப்புகளும், விடுமுறை நாட்களில் 20 முதல் 30 நிகழ்வுகளும் நடப்பதாக கூறப்படுகிறது. பல நேரங்களில் இது தொடர்பாக அளிக்கப்படும் புகார்களை காவல் துறையினர் ஏற்றுக் கொள்வதே இல்லை என்றும், பதிவு செய்யப்படும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கொள்ளையர்கள்

கொள்ளையர்கள்

மத்திய பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் வார இறுதி நாட்களில் விமானங்களில் வந்து இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அளவுக்கு தமிழ்நாட்டில் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் பெருந்தொழிலாக உருவெடுத்துள்ளன என்றால், அதை தடுக்க முடியாததற்காக தமிழக அரசு வெட்கப்பட வேண்டும்.

தாலி

தாலி

சென்னையில் அதிகரித்து வரும் சங்கிலிப் பறிப்புச் செயல்களால் பெண்கள் தங்களின் தாலிகளைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாது என்ற அவல நிலை தான் இப்போது காணப்படுகிறது. சங்கிலிப் பறிப்புக் கொள்ளையர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் கைப்பைகளில் சிறிய அளவிலான கத்தி அல்லது கூரிய ஆயுதங்களைக் கொண்டு செல்லத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அவமானம்

அவமானம்

தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக கருதப்பட்ட தமிழக காவல் துறையால் சங்கிலிப் பறிப்புக் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை என்பதும், காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் பெண்களே தங்களின் பாதுகாப்புக்கு கத்தி ஏந்தத் தொடங்கியிருக்கின்றனர் என்பதும் எந்த அளவுக்கு அரசுக்கு அவமானம் சேர்க்கும் அம்சங்கள் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் இருந்த கொள்ளையர்கள் பயந்து கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு ஓடி விட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், வட கிழக்கு மாநிலங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள கொள்ளையர்கள் தமிழகத்தை தங்களின் சொர்க்கபூமியாக மாற்றிக் கொண்டு குற்றங்களைச் செய்து வருகின்றனர் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றையெல்லாம் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பாராட்டுரைகளை நிகழ்த்தச் செய்து, அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்.

அக்கறை

அக்கறை

தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களையும் தடுத்து பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை முதல்வர் ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss told that robbers are coming to Tamil Nadu by flight during weekends just to snatch gold jewels from women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X