For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு கொடு... தமிழகத்தின் கடன் சுமை ரூ. 2, 11, 483 கோடியாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 'ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு கொடு'... என்று சொல்லும் பதினாறு வயதினிலே சப்பாணி கமலைப் போல... மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின் படி என்று வரிக்கு வரி சொல்லி... வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதை மனதில் கொண்டே வரி இல்லாத பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Rs. 2,11,483 Crore Debt Burden on Tamil Nadu

ஆனால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.2,11,483 கோடியாக அதிகரித்துள்ளது என்பதுதான் வேதனைக்குரிய விசயம். இதன்காரணமாகவே தமிழகத்தின் நிதிநிலை மிகமோசமாகி வருகிறது என்றும், கடன் சுமையால் திவாலாகப் போகிறது என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

கடன்சுமை எவ்வளவு

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்

மொத்த வருவாய் : ரூ. 1, 42 681. 33

மூலதனச்செலவு: 27, 213 கோடி

வருவாய் பற்றாக்குறை : 4 ஆயிரத்து 616 கோடி

சொந்த வரி வருவாய் : 96, 083.74 கோடி

வரி விலக்கு மூலம் 650 கோடி இழப்பு

நிகரக்கடன் வரம்பு : 32, 990 கோடி நிதி

மொத்தக்கடன் சுமை : 2, 11, 483 கோடி. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் - நாலடியார்

திருகுறளுடன் தனது பட்ஜெட் உரையை துவக்கிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாலடியார் பாடலை பாடி பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். அதெல்லாம் சரிதான். ஆனால் கடன்சுமை இப்படியிருக்க புதியவரிகளை விதிக்காமல் விதிக்கப்பட்ட வரிகளையும் குறைத்து தேர்தல் கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர் பொருளாதார வல்லுனர்கள்.

புகழின் உச்சிக்கு போகுமா?

மக்களின் முதல்வர் அம்மா எங்களின் கொள்கைகளை வகுத்து தந்துள்ளார். அம்மாவின் ஆசியினால் ஏழை மக்களின் நலன் லட்சியமாக கொண்டு எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தமிழக மக்களுக்காக தனது வாழ்வையை அர்ப்பணித்து, தியாக வாழ்க்கை வாழும் போற்றுதலுக்குரிய மாண்புமிகு அம்மாவின் வழிகாட்டுதலின்படி அம்மாவின் சிந்தனையால் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. அயராது பாடுபடும் அம்மா மீண்டும் முதல்வராக பதவியேற்று மீண்டும் இந்த அவைக்கு வந்து ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், வழி நடத்தி மாநிலத்தின் புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியம் என்று கேட்கின்றனர் எதிர்கட்சியினர்.

முடங்கிய கனவு

‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023' என்ற ஆவண வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயலலிதா, "அமெரிக்கா குறித்து மார்ட்டின் லூதர் கிங்குக்கு பெரும் கனவு ஒன்று உண்டு. அதைப்போல சிறந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கும் உண்டு. வேலையில்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலை, முற்றிலுமாக வறுமை ஒழிப்பு, கல்வி, குடிநீர், துப்புரவு ஆகியவற்றுடன் பாதுகாப்பு, வளம், அமைதி ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது லட்சியமாகும். வரும் நூற்றாண்டில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். தலைவர்கள் தாங்கள் காணும் கனவுகளை நனவாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். எங்கு தொலைநோக்கு பார்வை இல்லையோ அங்கு நம்பிக்கைக்கு இடமில்லை" என்று தன்னம்பிக்கையோடு பேசினார். ஆனால், இன்றைய நிலை என்ன? ஜெயலலிதா மட்டுமல்ல, அவருடைய கனவும் இப்போது முடங்கிப் போய் கிடக்கிறது.

லட்சியம் என்னவாகும்?

தமிழகத்தில் அடுத்த 11 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிசையில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும். தனி நபர் வருமானம் 6 மடங்கு உயர்த்தப்படும். ஏற்றத் தாழ்வற்ற, வறுமையற்ற சமுதாயத்தை அமைப்போம்..உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான சாலைகள், உலகத்தரம் வாய்ந்த நகரங்கள், தங்குத்தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை கிடைக்கச் செய்வது எமது லட்சியம்' என்பதெல்லாம் ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023'-ல் சொல்லப்பட்ட லட்சியங்கள். அவை எல்லாம் புஸ்வானம்தான்போல... காரணம் தமிழக அரசின் கடன் சுமை.

பல மடங்கு உயர்வு

2011ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தமிழகத்தின் கடன்சுமை இருமடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும் நிலையில் இலவசங்களுக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கி வரியற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம்.

கடனை திருப்பி செலுத்துவது எப்போது?

சாதாரணமாக ஒரு குடும்பம் கடன் வாங்கி வாழ்க்கையை நகர்த்தும்போது ஓர் அரசாங்கம் கடன் வாங்குவதில் என்ன பிரச்னை என்ற கேள்வி எழலாம். சாமானிய மக்கள், கடனை அடைப்பதற்கு வருவாயைத் தேடுகிறார்கள். ஆனால் தமிழக அரசு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகளை தேடுவதில்லை என்பதுதான் பிரச்னை. கடனை திருப்பிச் செலுத்தும் ஆட்சித் திறன் இல்லை என்பது அரசின் மீது பொருளாதார நிபுணர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

English summary
The budget estimates presented in the Tamil Nadu Assembly for the year 2015-16 projected revenue receipts of Rs 1,42,681.33 crores, while placing the revenue deficit at Rs 4,616.02 crores and the overall outstanding debt at Rs 2,11,483 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X