For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7.5 ஏக்கர் கண்மாயைக் "கொன்று"...48 கிலோமீட்டர் நீளத்திற்கு கிரானைட் கோட்டை... அதிர்ந்த சகாயம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: இயற்கை வளங்களையும், நீர் நிலைகளையும் அழித்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்த கொள்ளைக் கும்பல்,மேலூரில் 48 கி.மீ., நீளத்தில் கிரானைட் கற்களை அடுக்கி 'கிரானைட் கோட்டை' யை அமைத்துள்ளனர்.

கிரனைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைப் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் செய்து வரும் களஆய்வில் இது அம்பலமானது.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான, இடையபட்டி, கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் சகாயம் களஆய்வு செய்து வருவதோடு,பாதிக்கப்பட்டவர்களிடம் நேரிடையாக விசாரணை செய்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி அவர் மேற்கொண்டுள்ள விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து கொண்டுகின்றனர்.

மீன்வளம் பாதிப்பு

மீன்வளம் பாதிப்பு

85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியசூரியனேந்தல் கண்மாயில் 2009 முதல் 2011 வரை மீன் பிடிக்க பி.கே.மூர்த்தி என்பவர் ரூ.30 ஆயிரத்துக்கு டெண்டர் எடுத்தார். ஒரு லட்சம் மதிப்புள்ள மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்ட நிலையில், கண்மாயையொட்டி கிரானைட் குவாரி தனியாரால் துவக்கப்பட்டது. கண்மாயில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கண்மாயை மூடிவிட்டனர்.

சங்கிலியால் ஆய்வு

சங்கிலியால் ஆய்வு

பூமியில் எந்த அளவிற்கு கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்வதற்காக சங்கிலியை இறக்கியபோது அந்த சங்கிலி பூமியை தொடவே இல்லை. இதனால் ஆய்வு செய்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. கிரானைட் கற்களை லாரியில் எடுத்து வருவதற்காக பள்ளத்தில் ஏழு இடங்களில் கொண்டை ஊசி வளைவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கிரானைட் சாம்ராஜ்யம்

கிரானைட் சாம்ராஜ்யம்

மேலூர் எருமாபட்டியில் துவங்கி செம்மினிப்பட்டி, புறாக்கூடு மலை, இ.மலம்பட்டி, கீழையூர், நாவினிப்பட்டி, பதினெட்டாம் குடி, கொட்டக்குடி, திருவாதவூர், இடையபட்டி, கருப்புக்கால், இளங்கிபட்டி, சிவலிங்கம், ராஜாக்கூர், கருப்பாயூரணி, கூடக்கோவில் வரை 48 கி.மீ., நீளத்தில் ஆங்காங்கே கிரானைட் கற்களை அடுக்கி கோட்டை எழுப்பி யாரும் உள்ளே புகுந்து விடாதபடி தடுத்து தனி சாம்ராஜ்ஜியம் நடத்தியிருக்கின்றனர். இதனால் 26 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாழாகியுள்ளது.

கிரானைட் கோட்டை

கிரானைட் கோட்டை

கிரானைட் கற்களை கோட்டை போல அடுக்கி வைத்திருந்ததைக் கண்டு அதிர்ந்து போன சகாயம், இது என்ன மன்னர் கோட்டையா? கண்மாயின் பவுண்டரி கற்கள் எங்கே? அரசு சொத்து ரூ.பல நூறு கோடி மதிப்புள்ள கற்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இந்தளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது. அதுகுறித்து யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை என்றார்.

தண்ணீர் இல்லையே

தண்ணீர் இல்லையே

இந்த இடத்தை பார்க்கும் போது கற்பனைக்கு எட்டாத ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போல் அல்லவா இருக்கிறது. இந்த கண்மாய் நீரை பருகிய கால்நடைகள் தண்ணீர் குடிக்க எங்கே போகும்? என அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்களின் பதில் மவுனமாகவே இருந்தது.

10 ஆண்டுகளுக்கு

10 ஆண்டுகளுக்கு

கீழவளவில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்திற்கு 2011 முதல் 2021 வரை கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க அனுமதி பெறப்பட்டது. இதற்கு தற்போது 'சீல்' வைக்க பட்டுள்ளது. அங்குள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால் அளவெடுக்க இயலவில்லை. அங்கு அளவீடு செய்ய சகாயம் உத்தரவிட்டார்.

ரகசியமாக படமெடுத்த உளவாளி

ரகசியமாக படமெடுத்த உளவாளி

இடையபட்டியில் தன்னை ரகசியமாக மொபைல் போனில் படம் எடுத்தவரை சகாயம் கண்டுபிடித்தார். மர்மநபரிடம் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரிக்கையில் அவர் 'சீல்' வைக்கப்பட்ட பி.ஆர்.பி குவாரியின் வாட்ச்மேன் என தெரிந்தது.

குளம் ஆக்கிரமிப்பு

குளம் ஆக்கிரமிப்பு

கீழையூர் மேலப்பட்டி குவாரியில் ஆய்வு செய்தபோது பாசனத்திற்கு பயன்பட்ட குளத்தை கல், மண் போட்டு மூடி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அக்குளத்திற்கு 1986-87 ம் ஆண்டு ஆவணங்களில் சர்வே எண் இருந்தது. ஆனால் "1976ம் ஆண்டு முதல் நான் பணியில் உள்ளேன். அந்த குளம் சர்வே எண் இல்லை" என தலையாரி கூறினார்.

கிராமத்தில் வேலை செய்வேன்

கிராமத்தில் வேலை செய்வேன்

இப்பகுதியில் 2005ஆம் ஆண்டு பட்டா நிலத்தை விலைக்கு வாங்கிய பி.ஆர்.பி., தரப்பு சம்மந்தப்பட்ட குளத்தை ஆக்கிரமித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.ஆர்.டி.ஓ., செந்தில்குமாரியிடம் "அரசு அதிகாரிகள் இதுகுறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம நிர்வாகத்தை வலுப்படுத்துங்கள். எனக்கு கிராமத்தில் வேலை கொடுத்தால் மனமகிழ்வோடு செய்வேன்" என்றார் சகாயம்.

ஏழரை ஏக்கர் கண்மாய்

ஏழரை ஏக்கர் கண்மாய்

கீழையூர் பகுதியில் 7.5 ஏக்கரில் இருந்த சி.சி. கண்மாய் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது நேற்றைய ஆய்வில் தெரியவந்தது. அந்த கண்மாய்க்குள் 300 அடி ஆழம் வரை தோண்டி கற்கள் எடுத்து கபளீகரம் செய்திருந்தனர்.

ஆய்வு செய்தீர்களா?

ஆய்வு செய்தீர்களா?

இது குறித்து அங்கிருந்த வருவாய் மற்றும் புவியியல் சுரங்கத்துறை அதிகாரிகளிடம் "ஓராண்டிற்கு எத்தனை முறை ஆய்வு செய்வீர்கள். அவ்வாறு செய்திருந்தால் அதுதொடர்பான அனைத்து அறிக்கையும் எனக்கு அளியுங்கள். கலெக்டரிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதா" என்றார்.

இரு மடங்கு கிம்பளம்

இரு மடங்கு கிம்பளம்

பல்வேறு முறைகேடு குறித்து வருவாய், போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் எங்களை மதிப்பதில்லை. அனைத்து துறை அதிகாரிகளும் அவர்கள் வாங்கும் மாதச் சம்பளத்தை விட பி.ஆர்.பி.,யிடம் இரு மடங்கு சம்பளம் வாங்குகின்றனர். அவர்களுக்கு தான் விசுவாசமாக இருக்கின்றனர் என்று புகார் அளித்தனர் விவசாயிகள். 'டாமின்' மூலம் தான் கிரானைட் கொள்ளையே நடந்தன. நேர்மையான அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டனர்" என்றும்
பாதிக்கப்பட்ட பழனிச்சாமி தெரிவித்தார். இவரின் 29 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டர் பி.ஆர்.பி நிறுவனத்தினர்.

குவாரி ஆழம் 76 அடி :

குவாரி ஆழம் 76 அடி :

கீழையூர் செட்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு பல அடி ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. அதன் பள்ளத்தில் நீர் நிரம்பியிருந்ததால் அதன் ஆழத்தை அளக்க உத்தரவிட்டார். தலைமை அளவையர் மலைச்சாமி சங்கிலியால் ஆழத்தை அளந்ததில் 76 அடி ஆழம் தோண்டப்பட்டிருந்தது தெரிந்தது.

தியாகி நிலம்

தியாகி நிலம்

கீழையூர் தியாகி கருப்பையா கோனார் என்பவரின் மகன் ரவிச்சந்திரன், சகாயத்திடம் நேரடியாக புகார் தெரிவித்தார். "எனது அப்பாவிற்கு தியாகிகள் பிரிவில் 5 ஏக்கர் அரசு நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை விலைக்கு கேட்டு கிரானைட் குவாரி உரிமையாளர்கள் எங்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். தற்போது கழிவு கற்களை கொட்டியும், பாசன வாய்க்கால்களை அடைத்து விட்டதால் 15 ஆண்டுகளாக விவசாயம் செய்யவில்லை" என்று கண்ணீர் மல்க கூறினார்.

50 குடியிருப்புகள் காலி :

50 குடியிருப்புகள் காலி :

"ரங்கசாமிபுரத்தில் குவாரிகளின் வருகையால் ஆதிதிராவிடர் காலனியில் 50 வீடுகளில் வசித்த மக்கள் வெடி பயம் காரணமாக காலி செய்துவிட்டனர்" என அப்பகுதியை சேர்ந்த முத்தையா தெரிவித்தார். இதை கேட்டு "இப்பகுதியில் பெரும்பாலும் குடியிருப்பு, பட்டா நிலத்தை வாங்கி அதன் அருகே உள்ள புறம்போக்கு நிலங்களில் தான் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்துள்ளனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது கவலையாக உள்ளது" என சகாயம் தெரிவித்தார்.

ஊராட்சியில் தீர்மானம்

ஊராட்சியில் தீர்மானம்

கிரானைட் குவாரிகள் அமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஊராட்சி மன்றத்தில் இருந்தே தீர்மானம் போட்டு அரசு நிலத்தை தாரை வார்த்துள்ளனர் எனக்கூறி பல ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி சார்பில் போடப்பட்ட தீர்மானம் விபர நகலை சகாயத்திடம் ஒப்படைத்தார் கீழையூரை சேதுராஜா. இதை எப்படி தீர்மானம் போட்டு அதிகாரிகள் ஒப்படைந்தனர் என கேள்வி எழுப்பினார் சகாயம்.

மேப் இல்லையே

மேப் இல்லையே

கடந்த ஆய்வில் தொல்லியல் துறைக்கு உட்பட்ட கீழவளவு பஞ்ச பாண்டவர் மலை சேதப்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க புதுக்கோட்டை திருமயம் உபகோட்ட தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அதிகாரி மணி நேற்று வந்தார். ஆனால் அவர் அதறகான வரைபடத்தைக் கொண்டு வரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு "தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே ஒரு காப்பி அனுப்பி விட்டோம். தற்போது கொண்டுவர மறந்து விட்டேன்" என்றார்.

மேப்போட வரணும்

மேப்போட வரணும்

இம்மலை 40 சதவீதம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் 'மேப்'புடன் வந்து என்னிடம் விளக்கம் அளியுங்கள்" என சகாயம் உத்தரவிட்டார். இதனால் அந்த அதிகாரி திரும்பி சென்றார்.

பறந்து பறந்து ஆய்வு

பறந்து பறந்து ஆய்வு

சகாயம் இன்றும் இடையபட்டி உட்பட 9 இடங்களில் உள்ள கிரானைட் குவாரிகளில் பறக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்கிறார். இன்றைய ஆய்வில் இன்னும் என்னென்ன பூதங்கள் வெளிவரப்போகிறதோ?

English summary
Sagayam had demanded details from officials of the revenue department and the public works department (PWD) on the lands allotted to quarrying. According to sources, while the PWD had marked some of the areas as water bodies, the relevant documents with the revenue department could not be found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X