For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனிம கொள்ளை பற்றி விசாரிக்கும் சகாயம் குழுவுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை: ராமதாஸ் குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கனிம கொள்ளையர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, சகாயம் தலைமையிலான குழு விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக ஆளும்கட்சியின் குறைபாடுகளை பிற கட்சித் தலைவர்களைவிட ஆணித்தரமாக வெளிச்சம்போட்டு காண்பித்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதிலும் சமீபமாலமாக அவர் மிகுந்த உத்வேகத்துடன் காணப்படுகிறார். இந்நிலையில் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் திட்டமிட்டு கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை வளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு, அக்கடமையை செய்யத் தவறியதுடன், கனிமக் கொள்ளையருக்கு ஆதரவாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

Sagayam team resticted to operate by Tamilnadu government

மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விலை மதிப்பற்ற கிரானைட் கற்கள் கிடைக்கின்றன. அதேபோல் இயற்கை அளித்தக் கொடையால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அரிய வகை தாது மணல் கிடைக்கிறது. ஆறு ஓடும் அனைத்து மாவட்டங்களிலும் தரமான மணல் கிடைக்கிறது.

இத்தகைய இயற்கை வளங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் மாநில அரசின் கருவூலத்தை நிரப்புவதற்குப் பதிலாக ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற சில தனி மனிதர்களின் கருவூலத்தை நிரப்பிக் கொண்டிருப்பது தான் தமிழகத்தின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் கிரானைட், தாது மணல், ஆற்றுமணல் ஆகிய இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதால் அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உத்தேச மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் குறித்து விசாரணை நடத்த முயன்ற அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்களே, தவிர கனிமக் கொள்ளையர் தண்டிக்கப்படவில்லை.

கனிமக் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக தமிழக அரசை நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றமே தலையிட்டு, கனிமக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து கடந்த மாதம் 11ம் தேதி ஆணையிட்டது.

அதன்பின் இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில், சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணை தொடங்குவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. கனிமக் கொள்ளை குறித்து விசாரணை நடத்தும் பணியை சகாயத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்படைத்த பிறகும், அப்பணியை மேற்கொள்ள வசதியாக அவர் தற்போது வகித்து வரும் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து தமிழக அரசு இன்று வரை விடுவிக்காதது தான் கனிமக் கொள்ளை குறித்த விசாரணை தொடங்கப்படாததற்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.

கனிமக் கொள்ளை தொடர்பான விசாரணை அறிக்கையை வரும் 28 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சகாயம் குழுவுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கெடு முடிய இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சகாயம் குழு எப்போது விசாரணையை தொடங்கும்?, எப்போது அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்? என்ற வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை.

கிரானைட் மற்றும் தாது மணல் முறைகேடு தொடர்பான விசாரணையை தமிழக அரசு பல ஆண்டுகளாக தாமதப்படுத்தி வருகிறது. தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் முதல்கட்ட விசாரணை அறிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை; இறுதி அறிக்கையை அக்குழு தயாரித்து பல மாதங்கள் ஆகியும் அதை அரசு இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை.

அதன்பின் சகாயம் குழு அமைக்கப்பட்டதும் அதை எதிர்த்து தமிழக அரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகும் சகாயம் குழு விசாரணையை தொடங்க அனுமதி அளிக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.

இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சகாயம் தலைமையில் குழு அமைத்து உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது, இந்த விசாரணையை விரைந்து முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், இந்நேரத்தில் சகாயம் தலைமையில் புதிதாக ஒரு குழுவை அமைத்தால் விசாரணை தாமதமாகும் என்றும் தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கனிம கொள்ளை குறித்த விசாரணையை விரைந்து முடிக்க விரும்புவதாக உயர்நீதிமன்றத்தில் நாடகமாடிய தமிழக அரசு, இப்போது சகாயம் குழு அமைக்கப்பட்டு ஒரு மாதமாகியும் விசாரணைக்கு அனுமதி அளிக்காததிலிருந்தே இப்பிரச்சினையில் தமிழக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது.

கனிமக் கொள்ளையில் தொடர்புடையவர்களுடன் அமைச்சர்கள் பலருக்கு தொடர்புள்ளதாக ஏற்கனவே குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதை உறுதி செய்யும் வகையில் கிரானைட் கொள்ளையர் மீதும், தாதுமணல் கொள்ளையர் மீதும் தொடங்கப்பட்ட விசாரணைகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு அரசு முட்டுக்கட்டை போடுவதைப் பார்க்கும்போது கனிம ஊழலை மூடி மறைக்க முயல்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

ஊழல் செய்ததற்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிழலாக ஆட்சி செய்யும் புதிய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்னொரு ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்யக் கூடாது. சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றம் மட்டுமின்றி தமிழக மக்களும் ஆட்சியாளர்களுக்கு சரியான தண்டனை வழங்குவார்கள்.

English summary
Sagayam team resticted to operate by Tamilnadu government, charge PMK founder Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X