For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபாநாயகர் ஒரு ‘ஒன் சைடு அம்பயர்'.. சட்டமன்றத்தில் ஜனநாயகம் பட்டபாடு.. மு.க. ஸ்டாலின் கடிதம்

சட்டசபையில் சபாநாயகர் ஒன் சைடு அம்பயராக செயல்படுகிறார் என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் உறுப்பினர்கள் செயல்படும் விதத்தை கவனித்து ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் சபாநாயகர் ஒன் சைடு அம்பயர் போன்று நடந்து கொள்கிறார் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டசபையில் அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பேரவையில் செயல்பட்ட விதம், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையிலேயே அமைந்தது என்றும் இவற்றை எல்லாம் கவனித்து ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பிலே இருக்கக் கூடிய பேரவைத்தலைவர் 'ஒன் சைடு அம்பயர்' போல செயல்படுகிறார் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Speaker acts one side umpire says M K Stalin

மேலும், சட்டசபையின் முன்னவரான முதல்வர் ஓபிஎஸ் இவற்றையெல்லாம் கவனித்தும் கவனிக்காத வகையில் ஏதோ ஒரு நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிறார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது: உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்...

பொறுப்புள்ள எதிர்க்கட்சி

23-01-2017 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத் தொடரில் பொறுப்புள்ள ஜனநாயக ரீதியிலான எதிர்க்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் தனது செயல்பாடுகளை முன்வைத்தது. ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தமிழக அரசின் சட்டம், நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதா எனத் தமிழக நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள் எடுத்த முயற்சிகள் முழுமையானதா உளப்பூர்வமானதா என்பதைக் கடந்து, மாநிலத்தின் நலன் கருதி தி.மு.கழகம் அவற்றை முழுமனதாக ஆதரித்து, இந்த இயக்கம் எப்போதும் தமிழர்களின் பக்கம் இருந்து பாதுகாக்கும் என்பதை உணர்த்தியது.

துதிபாடும் பேச்சு

அதேநேரத்தில், ஆளுங்கட்சியின் குறைபாடுகளை, நிறைவேற்றாத வாக்குறுதிகளை, மக்கள் விரோத, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக்கூறவும் தயங்கவில்லை. ஆனால், அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் முழுமையான வாய்ப்புகளை வழங்காமல், ஆளுங்கட்சியினரின் துதிபாடும் பேச்சுகளுக்கே அதிக நேரத்தை ஒதுக்கித் தந்தார். அதிலும் ஆளுங்கட்சியினருக்கு வழங்கப்படும் உரிமைகள் எதிர்க்கட்சியினருக்கு மறுக்கப்பட்டன.

ஆளுக்கொரு விதி

முன்பு ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்த போது அவரும்-அவரது அமைச்சரவையினரும்-ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தமிழகத்தை அதிக காலம் ஆட்சி செய்த முதல்வரான நமது தலைவர் கலைஞர் அவர்களைப் பெயர் சொல்லி பல முறை பேசியிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் பலர் இருப்பதால் இப்படிப் பெயர் சொல்லிக் குறிப்பிடலாம் என சபாநாயகரும் அதற்கு அனுமதியளித்தார். இப்போது அதே வழியில், முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அம்மையாரின் பெயரை நமது கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது, அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னர் கடைப்பிடித்த நடைமுறைகளை நாம் சுட்டிக்காட்டிய போதும் பேரவைத் தலைவர் சமாதானமடையவில்லை. நாளுக்கொரு விதி ஆளுக்கொரு விதி.

கேள்விக்கு பதில்

முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா அம்மையார் கொடுத்த வாக்குறுதிகள், அறிவித்த திட்டங்கள், நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவை எந்தளவில் செயல்பாட்டில் உள்ளன என்பதையும் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதையும் தான் கழகத்தினர் கேள்விகளாக எழுப்பினர். இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாத ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க தமிழக சட்டமன்றத்தை துதிபாடும் மன்றமாக மாற்றி, இந்தக் கூட்டத் தொடரை நிறைவு செய்துள்ளனர்.

பதில் தெரியாத அமைச்சர்

வர்தா புயலால் சென்னை மாநகரம் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், அப்போது வீழ்ந்த மரங்களின் கழிவுகளை மாநகராட்சியின் பூங்காக்கள்-விளையாட்டு திடல்கள் ஆகியவற்றில் கொட்டி வைத்திருப்பதை எப்போது அகற்றி, மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அந்த இடங்கள் பயன்படும்படி செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு யார் பதிலளிப்பது, என்ன பதிலளிப்பது எனப் புரியாமல் கல்வி அமைச்சரும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் திண்டாடிய செய்தியை ஊடகங்கள் வாயிலாக உங்களில் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

துதிச் சலுகை அறிவிப்பு

மக்களுக்கானத் திட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்க வேண்டிய சட்டப்பேரவையை, அவையில் இல்லாதவர்களைப் பற்றிப் புகழ்பாடும் மன்றமாக மாற்றிய விதிமீறல்களே நடந்து முடிந்த கூட்டத் தொடரின் 'பெருமை'களாக இருந்தன. சின்னம்மா..சின்னம்மா என்கிற வார்த்தைகள் தான் ஆளுங்கட்சித் தரப்பில் அதிகளவில் உச்சரிக்கப்பட்டன. மக்களின் அங்கீகாரம் பெறாத-மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படாத - மக்களின் மன்றமான சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றிப் பேசலாமா என அவையின் மரபுகளையும் விதிகளையும் சுட்டிக்காட்டி பேரவைத் தலைவரிடம் கழகத்தினர் கேள்வி எழுப்பிய போது, "ஆளுங்கட்சியினர் தங்கள் கட்சியின் தலைமையைப் புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்களும் வேண்டுமானால் உங்கள் தலைமையைப் புகழ்ந்து கொள்ளுங்கள்" என்று புதிய 'துதிச் சலுகை' அறிவிப்பு செய்கிறார் பேரவைத் தலைவர்.

நெஞ்சில் போற்றுவோம்

நமது உயிருக்கு நிகரானத் தலைவரை எப்போதும் நம் நெஞ்சில் வைத்து போற்றுகிறோம். பாராட்டுகிறோம். அந்தப் பாராட்டுகள், மக்கள் நலன் பற்றிப் பேசக்கூடிய அவையின் நடவடிக்கைகளைத் திசை மாற்றுவதாக இருக்கக் கூடாது. அதனை, தோல்வியே காணாமல் 13 முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளரான நமது தலைவர் அவர்களும் விரும்ப மாட்டார்கள். அவருடைய வழிகாட்டுதலிலே உருவான நாம் ஒருபோதும் இத்தகைய செயல்களில் ஈடுபட ஆர்வம் காட்ட மாட்டோம். அவருடைய சாதனைகளைப் பாராட்டிப் பேசியிருப்போமே தவிர, மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டிய நேரத்தில் ஆலாபனை செய்து கொண்டிருக்க மாட்டோம். இதை நான் பேரவையிலே சுட்டிக்காட்டிய போதும் பயனில்லாமல் போய்விட்டது.

ஜனநாயக மரபு

இன்னும் சொல்லப் போனால் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் தலைவர் கலைஞர் அவர்களையோ, என்னையோ புகழ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி மீறி பேசிய ஒரு சில கழக சட்டமன்ற உறுப்பினர்களேயே "நேரடியாக கேள்வியை கேளுங்கள்" என்று நான் கடிந்து கொண்டதும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்தது. அதையும் நீங்கள் படித்திருப்பீர்கள். தி.மு.க. இப்படித்தான் இந்த கூட்டத்தொடரில் மட்டுமல்ல எந்த கூட்டத் தொடரிலும் சட்டமன்ற ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் வழிகாட்டுதலில் இனிமேலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆக்கப்பூர்வமாக ஜனநாயக மரபுகளைப் பின்பற்றிச் செயல்படும்.

'பட்டுப் போன' வார்த்தை

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சொன்ன வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறார்கள். நான் எடுத்துச் சொன்ன ஒரு வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மாண்புமிகு கைத்தறி துறையின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லி, அதோடு நிறுத்தாமல், 'விஷத்தை கக்கியிருக்கிறேன்' என்ற வார்த்தையையும் பயன்படுத்தினார். "தமிழகத்தை பொறுத்தவரை நல்ல பொறுப்புள்ள நிர்வாகம் அந்நியப்பட்டு போய் ஆண்டுகள் பல ஆகி விட்டன' என்பது. அதாவது 'பட்டுப்போய்' என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக்கூடாது, அது அவையில் பயன்படுத்தக் கூடாதது என்ற நிலையில், அதனை நீக்கினார்கள். இதற்கு நாங்கள் கடுமையான ஆட்சேபணை தெரிவித்தோம். உடனே சபாநாயகர் அவர்கள் 'பட்டுப்போய்' என்ற வார்த்தையை நீக்குகிறேன். அதேபோல அமைச்சர் அவர்கள் என்னை 'விஷத்தை கக்குகிறார்' என்று சொன்ன சொல்லையும் நீக்குகிறேன் என்று தீர்ப்பளித்தார்.

'விஷம் கக்குகிறார்'

அவை மாண்பு கருதி அப்போது அதனைப் பிரச்சினையாக்கவில்லை. மறுநாள், கேள்வி நேரம் முடிந்த பிறகு, நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி, 'பட்டுப்போய்' என்ற வார்த்தையை நீங்கள் நீக்கியது சரியல்ல, அமைச்சர் பயன்படுத்திய 'விஷத்தை கக்குகிறார்' என்ற வார்த்தையை நீக்குவதற்காக நாங்கள் சொன்ன வார்த்தையை நீக்குவதாக நீங்கள் சொல்வதால், தயவுசெய்து 'விஷத்தை கக்குகிறார்' என்ற வார்த்தையையும் கூட அவைக்குறிப்பில் இருந்து விட்டுப் போகட்டும், நான் கவலைப்படவில்லை. எனவே, 'பட்டுப்போய்' என்ற வார்த்தை சட்டசபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தையல்ல, எனவே அது இருப்பதில் தவறில்லை, எனவே அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும்" என்று வலியுறுத்தினேன்.

அவைக்குறிப்பில் இருக்கும் வார்த்தைகள்

அதுமட்டுமல்ல, இதே சட்டமன்றத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இதே அவையில், இதைவிட மோசமாக 'திமுக அரசு தமிழ்நாட்டை அதல பாதாளத்திற்கு அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது' என்று சொல்லி, அது அவைக்குறிப்பிலும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினேன் அதுமட்டுமல்ல, மறைந்த மாண்புமிகு முதலைமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், இதே அவையில், 'சட்டமன்றம் செத்து விட்டது', என்றார். அவர் சொன்னது இன்றும் அவைக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. ஆக, அதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'பட்டுப்போய்' என்று சொல்வது சாதாரண விஷயம் தான். பட்டுப்புடவை என்று சொல்கிறோம், பட்டுப்பாவாடை என்று சொல்கிறோம், பட்டு வேட்டி - பட்டுச்சட்டை என்று சொல்கிறோம், அதெல்லாம் அவைக்குறிப்பில் இருக்கக்கூடாதா? 'கேட்டுக் கொள்ளப்பட்டு, தெரிவிக்கப்பட்டு' என்பவற்றிலும் 'பட்டு' வருகிறது. ஆக இதெல்லாம் இடம்பெறக்கூடாதா என்பது தான் என்னுடைய கேள்வி.

வெளிநடப்பு

இத்தகைய கேள்விகளுக்கு சட்டமன்ற நிகழ்வுகளில் உரிய பதில் கிடைப்பதில்லை. உண்மைகளைப் பேசுவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பதால் தான் எதிர்ப்பின் அடையாளமாக நேற்று (01-02-2017) வெளிநடப்பு செய்து, ஊடகத்துறை நண்பர்களிடம் இந்த விவரங்களைத் தெரிவித்து விட்டு, உடனடியாக சபைக்குத் திரும்பினோம்.

'ஒன் சைடு அம்பயர்'

அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பேரவையில் செயல்பட்ட விதம், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையிலேயே அமைந்தது. இவற்றைக் கவனித்து ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பிலே இருக்கக் கூடிய பேரவைத்தலைவர் அவர்கள் 'ஒன் சைடு அம்பயர்' போல செயல்படுகிறார். பேரவையின் முன்னவரான மாண்புமிகு முதல்வர் அவர்களும் இவற்றையெல்லாம் கவனித்தும் கவனிக்காத வகையில் ஏதோ ஒரு நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிறார்.

'சின்னம்மா.. சின்னம்மா'

மக்கள் நலன் காக்கும் சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டிய மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டமன்றத்தில் ஜனநாயகம் படாதபாடு படுகிறது. "சின்னம்மா, சின்னம்மா" என்று அவையில் இல்லாத உறுப்பினரை புகழவும், தலைவர் கலைஞர் அவர்களை விமர்சிக்கவும், ஆக்கபூர்வமாக செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது புழுதி வாரி தூற்றவும் சட்டமன்றத்தை அதிமுக உறுப்பினர்கள் பயன்படுத்துகிறார்கள்.

சட்டமன்ற சர்வாதிகாரம்

அதை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டிய பேரவைத் தலைவரும் மனமுவந்து அனுமதிக்கிறார். பேரவைத் தலைவரின் சர்வாதிகார மனப்பான்மையும், ஆட்சி அதிகாரத்தை வெளியிலிருந்து ஆட்டுவிக்கும் நபருக்கு துதி பாடும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தின் ஜனநாயகப் பண்புகளை சீர்குலைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தவே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். ஆக்கபூர்வமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற சட்டமன்றம் இன்றைக்கு அதிமுகவின் துதிபாடும் மன்றமாக மாறி விட்டது. ஆகவே ஜனநாயகக் கேலிக்கூத்துகளுக்கு எதிரான நமது சீர்திருத்தப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. சட்டமன்றம் அதற்கு இடந்தராவிட்டால் மக்கள் மன்றத்தில் செயல்படுத்துவோம். ஜனநாயக விரோத ஆட்சியின் முகமூடியை மக்கள் மன்றத்தில் கிழித்தெறிவோம் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

English summary
Speaker Dhanapal acts as one side umpire in Tamil Nadu assembly said M K Stalin in a letter to DMK cadres today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X