For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தி.மு.க.வின் எதிர்காலம் மு.க.ஸ்டாலின்": கருணாநிதி பேச்சால் தொண்டர்கள் உற்சாகம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படாத போதும் அக்கட்சியின் தலைமை செயற்குழுவில் "தி.மு.க.வின் எதிர்காலம் மு.க.ஸ்டாலின்" என்று கருணாநிதி பேசியிருப்பது தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 6வது முறையாக முதல்வராக தமக்கு ஆசை இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் நேற்று நடைபெற்ற தி.மு.க. தலைமை செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் தி.மு.க. தலைமை செயற்குழுவில் அப்படியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வழக்கம்போல மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன.

இருப்பினும் இக்கூட்டத்தில் கருணாநிதி தமது பேச்சின் தொடக்கத்தில், மு.க. ஸ்டாலினை பற்றி குறிப்பிடும் போது "நம்முடைய கழகத்தின் எதிர்காலமே" என்று அழைத்தார்.

Stalin is future of DMK: Karunanidhi

கருணாநிதி இப்படி பேசியபோது அரங்கில் கைதட்டல் அடங்குவதற்கு சில நிமிடங்களாகின. இதன் பின்னர் கருணாநிதி தொடர்ந்து பேசியதாவது:

நான் ஏன் ஆரம்பக் காலத்தில் - அண்ணா "தம்பி" என்று அழைத்தார் - நான் "உடன்பிறப்பே" என்று அழைப்பதற்குக் காரணம் - "தம்பி" என்றால் ஆணை மாத்திரம் குறிக்கும், "உடன்பிறப்பே" என்றால் ஆண், பெண் இருவரையும் குறிக்கும்.

ஆகவே தான் "உடன்பிறப்பே" என்று அழைத்தேன். அந்த உடன்பிறப்புகளாக நாம் தொடர்ந்து நம்முடைய பணிகளை ஆற்ற வேண்டும். நடைபெற்ற தேர்தல் - அது திருவரங்கம் இடைத் தேர்தல் ஆனாலும் சரி - அல்லது நம்முடைய ஊர்களிலே நடைபெற்ற உட்கட்சித் தேர்தல்களானாலும் சரி - அந்தத் தேர்தல்களில் ஏற்பட்ட வெற்றித் தோல்விகளை யெல்லாம் மனதிலே வைத்துக் கொள்ளாதீர்கள். மறந்து விடுங்கள்.

எப்படி திருவரங்கம் தேர்தலை மறந்து விட்டு - இங்கே மீண்டும் வெற்றி பெறுவோம் என்று கருதுகிறோமோ, நம்புகிறோமோ, அதைப் போல - இதையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் என்று கேட்டுக் கொண்டு - உங்களை யெல்லாம் மீண்டும் மீண்டும் மன்றாடிக் கேட்டுக் கொள்வது, "உடன்பிறப்புக்களே" என்று நான் சொன்னது அழகுக்காக அல்ல, தமிழின் அணி அழகுக்காக அல்ல, நம்முடைய ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டுமென்று உளப் பூர்வமாக நான் கருதுகின்ற காரணத்தால் தான் சொல்லுகிறேன்.

எனக்கு நேராக சம்பிரதாய முறையிலே ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறி விட்டு, நாளைக்கு ஊருக்குப் போனதும், உள்கட்சித் தேர்தலை மனதிலே எண்ணி அதற்கு யாரையாவது பழி வாங்க வேண்டுமென்று யாரும் கருதாதீர்கள். பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று கருதினால், நம்மீது தான் அந்த வாள் பாயும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இன்றைக்கு நாம் ஒருவரைப் பழி வாங்கினால், நாளைக்கு அவர் நம்மைப் பழி வாங்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஆகவே இந்த பழி வாங்குகிற எண்ணம் கூடாது என்ற பரந்த மனப்பான்மை வேண்டும். அந்தப் பண்பு வேண்டும். அந்தச் சகோதரத்துவம் வேண்டும். அண்ணா சொன்னாரே மைலாப்பூர் கூட்டத்திலே - நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் - ஒரு தாயின் வயிறு இவ்வளவு பிள்ளைகளையும் தாங்க முடியாது என்ற காரணத்தால், தனித்தனி தாய்களின் வயிற்றில் பிறந்த தம்பிகளாக நாம் இருக்கிறோம் - என்று அண்ணா சொன்னாரே, அதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு - அதை செயற்குழுவிலே இந்தக் கருணாநிதி ஞாபகப்படுத்தினாரே என்பதையும் நினைவிலே வைத்துக் கொண்டு - எதிர் காலத்தில் நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தச் சமுதாயம் இருக்க வேண்டும், சமுதாயத்தின் புகழ் இருக்க வேண்டும், நம்முடைய இலக்கியங்கள் காப்பாற்றப்பட வேண்டும், நம்முடைய வரலாறு போற்றப்பட வேண்டும், நாம் தமிழர்கள் என்ற அந்த உணர்வு நிலைக்க வேண்டும். நிலைப்பதற்காக நாம் பாடுபட வேண்டும்.

ஒருவருக்கொருவர் எவ்வளவு தான் மன வேறுபாடு இருந்தாலும், அந்த மன வேறுபாடுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் - வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்றால் - உள்ளேயும் வைத்துக் கொள்ளாமல், அவைகளையெல்லாம் மறந்து விட்டு, எல்லோரும் ஒன்று போல் உழைப்போம். உழைத்தால் தான் - தேர்தலிலே வெற்றி பெற வேண்டும் என்ற அந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமானால் - அது பலிக்கும். தேர்தல் மாத்திரம் முக்கியமானதல்ல. இந்தச் சமுதாயத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தியாவிலே இருக்கின்ற சமுதாயங்களை மாத்திரமல்ல, உலகத்திலே இருக்கின்ற இனங்களிலே மிகப் பெரிய இனம், மானமுள்ள இனம், சுய மரியாதை உள்ள இனம் என்பதையெல்லாம் நிலைநாட்டவும், நாம் நம்முடைய இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற அந்த எதிர்ப்பார்ப்புகளோடு உங்கள் பணியைத் தொடர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் முக்கியமல்ல; நான் இப்படிச் சொல்வது வார்த்தைக்காகத் தான். நமது இலட்சியத்திலிருந்து நாம் பின் வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொண்டு, அந்த உறுதியைப் போற்ற - நிலைநாட்ட - வளர்க்க உங்கள் அனைவரையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டு - உங்கள் அண்ணன் என்ற முறையில் - உங்கள் தம்பி என்ற முறையில் - உங்கள் சகோதரன் என்ற முறையில் உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு - ஒற்றுமையாக இருங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - அதோடு மற்றொன்று "ஒற்றுமை" - கழக ஒற்றுமை - கழகத்திலே ஒற்றுமை என்ற நான்காவது சொல்லையும் சேர்த்து - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கழகத்திலே ஒற்றுமை - என்பதிலே அந்த ஒற்றுமையைப் பேணிக் காப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.

English summary
While the newly-elected office-bearers of the various wings of the DMK expected an announcement heralding a new role for party treasurer M.K. Stalin at the executive meeting on Thursday, party president M. Karunanidhi only referred to his son Stalin as “our future”. n fact, Mr. Karunanidhi began his speech by calling Mr Stalin the future of the party and paused for a few seconds to allow applause to fill the auditorium. At the end of his speech, the DMK patriarch, as can be expected of him, did not make any announcement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X