ஸ்டாலின் முன்பே கோஷம் போட்ட முன்னாள் மா.செ ஆதரவாளர்கள்.. சட்டென திரும்பிய 'தலை’!
தென்காசி : நேற்று தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து திரும்பியபோது, முன்னாள் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செல்லதுரை மாற்றப்பட்டு, ராஜா நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் வரும்போது செல்லதுரையின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
"வேண்டும் வேண்டும் செல்லதுரை வேண்டும்" என்ற திமுகவினரின் முழக்கத்தை முதல்வர் ஸ்டாலினும் கவனித்துள்ளதால், அடுத்தகட்ட ஆக்ஷன் எடுக்கப்போகிறாரா என தென்காசி திமுகவிற்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தென்காசியில் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் நேற்று முன் தினம் இரவு சென்னையில் இருந்து கிளம்பி நேற்று காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது, அவருக்கு, தென்காசி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அரசு விழா
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 182.56 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து 22.20 கோடி மதிப்பிலான 57 திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், 34.14 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகள்
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொருவருடைய தேவையையும், ஒவ்வொருவரின் பிரச்சனையையும் அறிந்து நமது அரசு செயல்படுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் பதில் அளிக்க விரும்பவில்லை. எங்களை நம்பி வாக்களித்தவர்களுக்கு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் உள்ளோம். தமிழக மக்கள் இருண்ட காலத்தில் இருந்து உதயசூரியன் காலத்திற்கு வந்துவிட்டனர் எனப் பேசினார்.

ஸ்டாலின் முன்பு திடீர் கோஷம்
அரசு விழா முடிந்து கடையநல்லூர் வழியாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை திரும்பியபோது, முதல்வரின் வாகனத்திற்கு அருகே திரண்டு பொதுமக்கள் சிலர் மனு கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அங்கு திரண்டிருந்த தென்காசி திமுகவினர், "வேண்டும் வேண்டும் செல்லதுரை வேண்டும்" என தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதை முதல்வர் ஸ்டாலின் கவனித்தார்.

பின்னணி
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து மாவட்ட வாரியாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழுவும் நடந்தது. அப்போது திமுகவின் 72 கழக மாவட்டங்களில் 71 மாவட்டத்திற்கு மட்டுமே பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மட்டும் நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தான் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா நியமிக்கப்பட்டார்.

செல்லதுரை
தென்காசி வடக்கு மா.செவாக இருந்த செல்லதுரையை மாற்றுவதற்கு அவரது ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தின் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். பின்னர் செல்லதுரையை அழைத்துப் பேசியது திமுக மேலிடம். பின்னர் தான் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் தூக்கப்பட்டு, ராஜா எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டார். எனினும், செல்லதுரையின் ஆதரவாளர்கள் சமாதானம் அடையவில்லை.

கவனித்த ஸ்டாலின் - ஆக்ஷன்?
இந்நிலையில் தான் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டு 1 மாதம் கடந்துள்ள நிலையில், முதல்வர் வருகையின்போது செல்லதுரைக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டுள்ளனர். ஸ்டாலின் முன்பே திமுகவினர் கோஷமிட்டது தென்காசி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த முழக்கத்தை ஸ்டாலினும் கவனித்ததால், அடுத்து என்ன ஆக்ஷன் எடுக்கப்போகிறார் என திமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications