For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

34 மீனவர்கள், 95 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை ராணுவத்தின் அத்துமீறிய கைதுகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, இலங்கை சிறைகளில் வாடும் 34 மீனவர்களையும், 95 படகுகளையும் உடனடியாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும் கைது செய்வதும் தொடர்ந்து நிகழும் கொடூரமாக உள்ளது.

stalin urged to fishermen released

இரண்டு நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நடுக்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களுடன் வாக்குவாதம் செய்து மிரட்டியதுடன் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்தவர்களை சுற்றி வளைத்து, அவர்களின் மீன்பிடி சாதனங்களை இலங்கைக் கடற்படையினர் பறித்து வீசி எறிந்துள்ளனர் .அத்துடன் கணேசன், மாரிமுத்து, தனம், சாரதி, வேலாயுதம் என 5 தமிழக மீனவர்களையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு துன்புறுத்தப்படும் நிலையில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை மட்டுமே கடமையாகக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இந்நிலையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா அண்மையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் தமிழக மீனவர்களை நேரில் சந்திக்க வைத்து, அவர்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூற வைத்த நிகழ்வு குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் மத்திய அமைச்சரிடம் மீனவர்கள் வலியுறுத்தியதுடன், இந்தக் கைது நடவடிக்கைகள் தொடராமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும்படியும் வலியுறுத்தியுள்ளனர்.

அந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்களின் விடுதலைக்கும், அவர்களின் படகுகளை மீட்கவும் இலங்கை தூதரிடம் உடனடியாகப் பேசுவதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இந்தப் பிரச்சினையில் தொடர்புடையவர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம், இருநாட்டு மீனவர்களிடையிலான பேச்சுவார்த்தை, இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை இந்தியா வரவழைத்துப் பேசுவது, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வழி வகை செய்வது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மத்திய அரசு அந்த உறுதிமொழிகளை விரைந்து நிறைவேற்றுவதுடன், கச்சத்தீவு விவகாரத்திலும் இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் உள்ள உரிமைகளை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற மாநில அரசு துணை நின்று வலியுறுத்த வேண்டியது அவசியமாகும்.

அதிமுக சார்பில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் 50 எம்.பிக்கள் இருந்தாலும், தமிழகத்தின் உரிமைக்காகவும் தமிழக மீனவர்களின் நலனுக்காகவும் உருப்படியான எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

முதல்வரோ கடிதம் எழுதியதுடன் தன் மீட்புப் பணி முடிந்து விட்டதாக அமைதியாகி விடுகிறார். ஒவ்வொரு முறை இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது ஒரு கடிதம் எழுதி விட்டு பிரச்சினைக்கே தீர்வு ஏற்பட்டு விட்டது போன்ற மன நிம்மதி அடைகிறார் முதல்வர் ஜெயலலிதா.

ஆனால் திமுகதான் தமிழக மீனவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து, ஆக்கபூர்வமாக செயல்பட்டு வருகிறது. ஆகவே இலங்கை ராணுவத்தின் அத்துமீறிய கைதுகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, இலங்கை சிறைகளில் வாடும் 34 மீனவர்களையும், 95 படகுகளையும் உடனடியாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
TN state and central government should take action to fishermen released
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X