• search

‘சார், போகாதீங்க சார், நீங்க எங்களுக்கு வேணும் சார்’..கதறிய மாணவர்கள்..பதறிய ஆசிரியர்-பாச போராட்டம்!

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   கதறி அழுது விடைகொடுத்த மாணவர்கள்.. உருக்கமான வீடியோ

   திருத்தணி: ஆரணி அருகே பொட்டு, பூ வைப்பியா என்று ஆசிரியர்கள் அடித்து 2 மாணவிகளை அழ வைத்தார்கள். கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்ல கண்டிக்கவே, கதறி அழுதார்கள் திருவள்ளூரில் மாணவிகள். ஒழுக்கத்தை தரக்குறைவாக பேசி திட்டியதால் கிணற்றில் விழுந்து 3 மாணவிகள் தற்கொலையே செய்துகொண்டார்கள் மதுரையில்.

   இப்போது திருத்தணியிலுள்ள ஒரு பள்ளியிலும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. மாணவர்களை தேம்பி தேம்பி அழ வைத்திருக்கிறார் ஒரு ஆசிரியர். அவரது காலைபிடித்தும் கெஞ்சவும் செய்யும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார் அதே ஆசிரியர். தகவலறிந்து போலீசாரே பள்ளிக்குள் வந்துவிட்டனர். ஆனால் அவர்களும் ஆசிரியரை எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நிற்கிறார்கள். பெரிய விவகாரம் ஏதோ வெடித்து வெளிவர போகிறது என எண்ண வேண்டாம். மேற்கூறிய மாவட்டங்களில் மாணவர்கள் அழுததற்கும், திருத்தணி மாணவர்கள் அழுததற்கும் ஒரே ஒரு வித்தியாசம். ஒட்டுமொத்த உருக்கத்தின் வெளிப்பாடாக இருந்திருக்கிறது அந்த மாணவர்களின் கண்ணீர். அதை விரிவாக பார்ப்போம்.

   திருத்தணி அருகே பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 260 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் பகவான். தற்போது தமிழகம் முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு ஆசிரியர்களை நியமித்தும், குறைத்தும் வருவதுடன், ஆசிரியர்களை பள்ளிகளின் தேவைக்கேற்ப இடமாற்றமும் செய்து வருகிறது. அதனடிப்படையில் ஆசிரியர் பகவானுக்கும் அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

   பூட்டு போட்டு போராட்டம்

   பூட்டு போட்டு போராட்டம்

   இந்த விஷயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் காதுக்கு போய்விட்டது. ஒட்டுமொத்தமாக திரண்டார்கள். பள்ளின்யின் முன்வாசலுக்கு பூட்டுப் போட்டுவிட்டு பள்ளி முன்பு பதாகைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். இந்த தகவல் கேள்விப்பட்டு பள்ளிப்பட்டு வட்டாட்சியர் லட்சுமி பள்ளிக்கே வந்து விட்டார். மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ம்ஹூம்... அதிகாரி ஒருவர் நம்முடன் இவ்வளவு தூரம் பேச வந்திருக்கிறார் என்ற எண்ணம் துளியும் அந்த போராட்ட முழக்கத்தில் காதில் விழவில்லை. என்ன செய்வதென்றே தெரியாத அதிகாரியோ, எப்படி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து பள்ளியை இயங்க செய்வது என யோசித்தார். பிறகு, "சரி, ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு தெரிவிக்கப்படும்" என்றார். ஆனால் பெற்றோர்களோ அதை விட உஷார். "சரி. நாங்களும் எங்கள் பிள்ளைகளை ஒரு வாரம் கழித்தே பள்ளிக்கு அனுப்புகிறோம்" என ஒரே பதிலை திருப்பி போட்டனர்.

   சார்..போகாதீங்க!

   சார்..போகாதீங்க!

   இந்நிலையில், ஆசிரியர் பகவான் பள்ளிக்கு வந்தார். தன்னுடைய பணியிட மாற்ற உத்தரவுக்கான நகலை வாங்கி கொண்டு செல்ல முயன்றார். வகுப்பறைகளில் இருந்த மாணவர்களுக்கு ஆசிரியர் பள்ளிக்கு வந்த விஷயம் தெரிந்து விட்டது. கனத்த இதயத்துடன், கண்ணீர் மல்க ஆசிரியரை நோக்கி ஓடி வந்தார்கள். எவ்வளவோ பேசி பார்த்தாச்சு... போராட்டமும் பண்ணியாச்சு.. என்ன செய்வதென்றே தெரியாத மாணவர்கள், திடீரென ஆசிரியர் பகவானின் காலை பிடித்து அழ தொடங்கிவிட்டார்கள். "நீங்கள் போகக்கூடாது சார்... நீங்கள் பாடம் நடத்தினால் நாங்கள் எல்லோருமே பாஸ் ஆகிவிடுவோம். போகாதீங்க சார்" என்று மனம் வெடித்து உருகி கெஞ்சினர்.

   கண்ணீருடன் விடைபெற்றார்

   கண்ணீருடன் விடைபெற்றார்

   ஆசிரியருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இது வெறும் பாடப்புத்தகம் சம்பந்தப்பட்டது என்றால் மாணவர்களுக்கு ஆசிரியர் பதிலளிப்பார். நடைபெற்று கொண்டிருப்பது உணர்வு போராட்டம், பாச-பந்தத்தின் வெளிப்பாடு. அதனால் மாணவர்களுக்கு வெறும் கண்ணீர் மட்டுமே ஆசிரியரால் பதிலாக தரப்பட்டது. மாணவர்கள் பாச போராட்டத்தை நடத்துகிறார்கள் என கேள்விப்பட்டு பள்ளியினுள் போலீசார் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்டனர். மாணவர்கள் வெம்பி அழுவதை கண்ட போலீசாரும் விழித்து கொண்டுதான் நிற்க முடிந்தது. கண்ணீர்புகை வீசாமலேயே அனைவரது கண்களிலும் கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருப்பதை கண்டு போலீசாரால் மிரண்டுதான் நிற்க முடிந்தது. மனம் தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் விடைபெற்று சென்றார்.

   பகிர்ந்த மாணவர்கள்

   பகிர்ந்த மாணவர்கள்

   ஆசிரியர்கள்-மாணவர்கள் இடையே உறவுமுறை சீர்குலைந்து வருகிறது என்பதை சுக்குநூறாக உடைத்தெறிந்து இருக்கிறார்கள் திருத்தணி பள்ளி மாணவர்கள். முன்பெல்லாம் ஒரு ஊரின் முக்கிய புள்ளியாக ஆசிரியர்கள் இருந்தார்கள். வாத்தியார் தெருவில் நடந்து சென்றாலே அனைவரது கண்களிலும் நன்றி கலந்த மரியாதை பார்வை வீசப்படும். காரணம் பெற்றோர்களிடம்கூடக் கூற முடியாததை ஆசிரியர்களிடம் மாணவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

   பலப்படுத்தப்பட்ட உறவு அது

   பலப்படுத்தப்பட்ட உறவு அது

   தட்சணை கொடுத்து கல்வி கற்ற காலம் அது. பள்ளிகளில் நீதிபோதனைக்கு ஒரு வகுப்பு உண்டு. அதற்குரிய பாடத்திட்டமும் உண்டு. இதில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த அனுபவத்தையும் கூடுதல் தகவல்களையும் சேர்த்து போதிப்பார்கள். அந்த காலத்து அன்னையர் தன் மழலையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிலாவையும் நட்சத்திரங்களையும் காட்டி சிறந்த கற்பனைக் கதைகளைக் கூறி உள்ளத்தையும் உணர்வுகளையும் பக்குவப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளில் ஆரோக்கியமான சிந்தனைகளை இளம் நெஞ்சில் பதிய வைப்பார்கள். இதனால் உறவு பலப்படுத்தப்பட்டது. கருத்துக்கள் பகிரப்பட்டன.

   அறுக்கப்பட்ட உறவுகள்

   அறுக்கப்பட்ட உறவுகள்

   இன்று ஆசிரியர் திட்டினாலே தற்கொலை செய்யும் மாணவ, மாணவிகள் மலிந்து கிடக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் திட்டும்போதோ, கண்டிக்கும்போதோ அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும், சகிப்புத்தன்மையும் இல்லாமலேயே பிள்ளைகள் வளர்க்கப்படுவதுதான். ஆசிரியர்களை பற்றி புறம் கூறுதல், ஆசிரியர்களின் உருவத்தை வைத்து கிண்டல் கேலி செய்தல், இதுபோல் மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இன்றைய நிலையில் அவர்களின் உறவு அறுக்கப்பட்டுவிட்டது. பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் என்ற முக்கோணம் எப்போதும் சமமாக இருந்தால் மட்டுமே தலைநிமிர்ந்த சமுதாயத்தை பெற முடியும்.

   சிறந்த ஆசிரியர்-பகவான்

   சிறந்த ஆசிரியர்-பகவான்

   "ஒரு மனிதன் உயிரோடு இருக்க பெற்றோர் காரணமாக இருக்கலாம். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார் அலெக்சாண்டர். அது திருத்தணி ஆசிரியர் விஷயத்தில் நிரூபணமாகி உள்ளது. ஆசிரியர் பகவான், பணம் மட்டும் ஈட்டும் ஒரு தொழிலாக தன் பணியினை கருதாமல், உயிரோட்டமான பணியாகவும், உளவியல் ரீதியான பணியாகவும், சேவை ரீதியான பணியாகவும் செயல்பட்டிருக்கிறார். இன்றைய பெரும்பாலான ஆசிரியர்கள்போல, வெறும் புத்தகப் புழுக்களையும், மனப்பாட எந்திரங்களையும், மதிப்பெண் அடிமைகளையும் அவர் உருவாக்கவில்லை என்பது தெளிவாக புலப்பட்டுள்ளது.

   காலத்துக்கும் முன்னெடுக்கும் உறவு

   காலத்துக்கும் முன்னெடுக்கும் உறவு

   இதே போல மற்ற பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்களும் பலப்படுத்தப்பட வேண்டியது இன்றைய சூழலில் கட்டாயமானதாகும். வெறும் பாட புத்தக அறிவை மட்டும் கற்பிக்காமல், பல்துறை பரந்த அறிவையும் மாணவர்களுக்கு ஊட்டினோமானால், முரண்பாடுகள் நிச்சயம் வீழ்ச்சியடையப்படும். பழைய கலாச்சாரம் மீண்டும் மீட்டெடுக்கப்படும். அது குருகுலமாகட்டும், திண்ணை கல்வி முறையாகட்டும், பாடசாலையாகட்டும், அதன் வடிவமுறை எதுவானாலும் என்ன... ஆசிரியர்-மாணவர் உறவானது, முக்கியமானதாகவும், மரியாதைக்குரியதாகவும் காலகாலத்துக்கும் முன்னெடுக்கப்பட்டு சென்று கொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   Students protest against teacher's transfers near Thiruthani.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more