For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன செய்யப் போகிறார் செயல் தலைவர் முக ஸ்டாலின்?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

திமுக வின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். கட்சியின் பொதுக் குழுவில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அது ஒரு மனதாகவும் நிறைவேற்றப் பட்டு விட்டது.

சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியம் என்னவென்றால், திமுக சட்ட திட்ட விதிகளின்படி செயல் தலைவர் என்ற ஒரு பதவியே கிடையாது. 1949 ல் திமுக என்ற கட்சி திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தொடங்கப் பட்ட பொழுது தலைவர் பதவி என்பது காலியாகவே வைக்கப் பட்டது. காரணம் பெரியார்தான் தங்களுக்கு இன்னமும் தலைவர் என்றும், ஆகவே அதற்காக அந்தப் பதவி வெற்றிடமாகவே இருக்கும் என்று தான் அந்த ஏற்பாடு. பொதுச் செயலாளராக அண்ணா பொறுப்பேற்றார்.

The Challenges before DMK Active President MK Stalin

நாடு விடுதலை அடைந்த பின்னர் 1952 ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலைப் புறக்கணித்த திமுக 1957ல் போட்டியிட்டு 15 எம்எல்ஏ க்களையும், 1962 ல் 50 எம்எல்ஏ க்களையும் வென்றது. 1967 ல் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தக் காலகட்டத்தில் ஒரு முறை வி.ஆர். நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார்.

1969 ல் அண்ணா மறைவுக்குப் பின்னர் முதலமைச்சரான மு.கருணாநிதி ஒரு கட்டத்தில் திமுக வுக்கு தலைவராகவும் ஆனார். பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும், பின்னர் க.அன்பழகனும் வந்தனர். எல்லா அறிவிப்புகளும் தலைவரின் ஒப்புதலின்படி பொதுச் செயலாளரால் செய்யப்படும்.
கருணாநிதி உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில்தான் இந்தப் பொதுக் குழு கூடியிருக்கிறது. கருணாநிதி இல்லாமல் திமுக வின் பொதுக் குழு கூடியது கட்சியின் 48 ஆண்டு கால வரலாற்றில் இதுதான் முதன்முறையாகும். இன்றைய தீர்மானத்தில் தலைவருக்குரிய அத்துனை அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் வழங்கப்பட்டு விட்டன. இதற்கான திருத்தங்கள் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. திமுக தலைவர் என்ற பதவிதான் இல்லையே தவிர, நடைமுறையில் இனிமேல் ஸ்டாலின் தான் திமுக வுக்குத் தலைவர்.

ஏற்கனவே கட்சி ஸ்டாலின் கட்டுப் பாட்டுக்குள் இருந்தாலும் இன்றைய நிகழ்வால் அது முழுமை பெற்று விட்டது, அதற்கான கட்சியின் சட்ட மற்றும் தார்மீக அங்கீகாரமும் கிடைத்து விட்டது.

ஸ்டாலினுக்கு தற்பொது 63 வயது. கிட்டத் தட்ட 45 ஆண்டுகால பொது வாழ்வுக்கு சொந்தக்காரர். 1975 - 1977 அவசர நிலைக் காலத்தில், மிசா சட்டத்தில் சுமார் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். சிறையில் தடியடிக்கும், தொடர் தாக்குதலுக்கும் ஆளானவர். முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தலைவர்களுடன் போலீஸ் சித்திரவதையை அனுபவித்தவர். 1980 இளைஞர் அணியைக் கட்டமைக்கிறார். 1996 ல் சென்னை மேயராகவும், 2006 - 20111 திமுக ஆட்சிக் காலங்களில் துணை முதலமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் போய் கட்சிப் பணிக்காக சுற்றிய அனுபவம் உண்டு.
இன்றைய திமுக பொதுக் குழுவின் முக்கியமான மற்றோர் நிகழ்வு.

ஸ்டாலின் செயல் தலைவராக மட்டும் வரவில்லை. கட்சியின் பொருளாளராகவும் நீடித்துக் கொண்டிருக்கிறார். இது திமுக வின் 48 ஆண்டு கால வரலாறு காணாத நிகழ்வு. ஆம். கட்சியின் தலைவராக இருப்பவர்கள் பொருளாளராகவும் ஒரே நேரத்தில் இருந்தது கிடையாது. அப்படியென்றால் அதிகாரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. திமுக வின் பொருளாளரா கனிமொழி வரப் போகிறார் என்று நேற்று வெளிவந்த முன்னணி நாளேட்டில் செய்தி வந்தது. அதே போல தயாநிதி மாறனுக்கும் பதவி தரப் படப் போகிறது என்றெல்லாம் செய்திகள் வந்தன. இவை எதுவும் நடக்கவில்லை.

திமுக வின் உள் விவகாரங்கள் அறிந்தவர்கள் கூறும் ஒரு விஷயம் சுவாரஸ்யமானது. "திமுக வுக்கு என்று இரண்டு முக்கியமான அறக்கட்டளைகள் இருக்கின்றன. இந்த அறக் கட்டளைகளுக்கு 7,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருக்கின்றன. இவை சட்டப்படி முறையாக நிjdவகிக்கப் படும் அறக்கட்டளைகளாகும். இந்த இரண்டு அறக்கட்டளைகளையும் யார் கட்டுப் படுத்துகிறார்களோ அவர்கள்தான் திமுகவைkd கட்டுப்படுத்த முடியும். இந்த அறக்கட்டளைகளில் ஸ்டாலினின் ஆதரவாளர்கள்தான் நிரம்பி வழிகிறார்கள். பணம் மட்டுமே அரசியல் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கப்படக் கூடிய இன்றைய காலகட்டத்தில் இதனது தாக்கம் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இது தவிர, அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி இவற்றின் முழுக் கட்டுப்பாடும் கூட ஸ்டாலின் வசம்தான் இருக்கிறது. ஆகவே திமுக முழுக்க, முழுக்க ஸ்டாலின் வசம்தான் இருக்கிறது,'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் கட்சியின் முன்னாள் எம் பி ஒருவர்.

அரசியல் ரீதியில் இன்றைக்கு தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக வை எதிர்த்து ஸ்டாலின் எப்படி செயல்படப் போகிறார் என்பதே கேள்வி. கருணாநிதி கடந்த 50 ஆண்டுகாலமாக, தமிழக அரசியலை தன்னை சுற்றியே சுழல வைத்திருந்தார். எதிர்கட்சியோ, ஆளும் கட்சியோ கருணாநிதிதான் தமிழக அரசியலின் அஜெண்டாவை தீர்மானிப்பார். அதில் தோற்று போவார், வெற்றி பெறுவார். அது வேறு. ஆனால் அரசியலுக்கான அஜெண்டாவை கட்டமைத்தார்.

ஆனால் ஸ்டாலின் அப்படித்தான் செயல்படப் போகிறாரா என்பதுதான் கேள்வி.

"இது முக்கியமான விஷயம்தான். எதிர் வினை ஆற்றுபவராகத்தான் ஸ்டாலின் இதுவரையில் இருந்து கொண்டிருக்கிறார் (he is only reacting) ஆனால் அவர் வினை ஆற்றுபவராக அதாவது Pro active ஆக ஸ்டாலின் வந்தால்தான் அவரால் கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும். கருணாநிதியை போல, தமிழக அரசியலுக்கான அஜெண்டாவை, செயற் திட்டத்தை ஸ்டாலின் உருவாக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரது அரசியல் பயணம் வெற்றிப் பயணமாக அமைவது கடினம்தான்,'' என்கிறார் தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் டெல்லிப் பத்திரிகையாளர் ஒருவர்.

எந்த சவாலும் அதனுடன் சேர்த்து ஒரு வாய்ப்பையும் கொண்டு வரும் என்பார்கள். தற்போது அஇஅதிமுக வில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள், சசிகலா வுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும், அந்த கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் நிலவும் மிக, மிக கடுமையான எதிர்ப்புகள் மற்றும் அதிருப்தி போன்றவை ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள்தான். இந்த எதிர்ப்பை ஸ்டாலின் எப்படி தனக்கும், திமுக வுக்கும் சாதகமானதாக ஆக்கிக் கொள்ளப் போகிறார், மக்கள் பிரச்சனைகளை எந்தளவுக்கு அஇஅதிமுக அரசுக்கு எதிராக கையாளப் போகிறார் என்பதுதான் அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான பிரச்சனையாகும்.

ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்த ஸ்டாலினுக்கு தற்போது சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கிறது. இது அவருக்கும், அவரது கட்சியினருக்கும் கோபம் என்பதை தாண்டி ஒரு விதமான அறுவருப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கோபப்பட்டோ, அசூயை அடைந்தோ பலனில்லை. இதுதான் யதாரத்தம். காலத்தின் கோலம்... இதனை எதிர்கொள்ளுவதை தவிர ஸ்டாலினுக்கும், திமுக வுக்கும் வேறு வழிகள் கிடையாது.

ஓராயிரம் குறைகள், விமர்சனங்கள் கருணாநிதி மீது இருந்தாலும் அவரது தனிச் சிறப்புகள் இரண்டு.. முதலாவது அனைவரையும் அரவணைப்பது, ஆங்கிலத்தில் இதனை inclusive என்பார்கள். இரண்டாவது மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளுவது. 1952 ல் பராசக்திக்கு கதை வசனம் எழுதிய கருணாநிதியின் கரங்கள் 21 ம் நூற்றாண்டு இளம் கதாநாயகர்களுக்கும் சினிமா வசனங்களை எழுதின.

இந்த இரண்டு தகுதிகளும் எந்தளவுக்கு ஸ்டாலினிடம் இருக்கப் போகிறது என்பதை பொறுத்தே அவரது அரசியல் வெற்றி அமையப் போகிறது. இந்த இரண்டு தகுதிகளும் ஸ்டாலினிடம் இருக்க வேண்டிய அளவுக்கு இல்லாமல் போனால் நஷ்டம் அவருக்கும், திமுக வுக்கும் மட்டுமல்ல, தமிழ் நாட்டிற்கும்தான். ஏனெனில் பிரதான எதிர்கட்சி பலவீனமடைவது எந்த ஜனநாயக நாட்டுக்கும் நல்லதல்ல!

English summary
Mani's analysis about MK Stalin's selection as the Active President of DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X