தொடங்கியது மருத்துவ கலந்தாய்வு..போலி இருப்பிட சான்றிதழ் தந்தால் சட்ட நடவடிக்கை என எச்சரிக்கை!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு சென்னையில் தொடங்கியுள்ளது.
சென்னை : இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. கலந்தாய்வின் போது போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீண்ட இழுபறிக்குப் பிறகு நீட் தேர்வு அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்க உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடந்து வருகிறது. நேற்று மாற்றத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் விடுமுறை தினமான இன்றும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வை தொடங்கி வைத்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது : இன்று 3430 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதில் 2445 இடங்கள் அரசுக் கல்லூரியிலும், சிதம்பரம் ராஜா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 120 இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஓதுக்கீடாக 860 இடங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 430 இடங்கள் உள்ளன.
பிடிஎஸ் பொறுத்தவரை 1198 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இன்றைய தினம் மாணவர் பெற்றோரிடம் அச்சம் உள்ளது. மாநில இடங்கள் பொறுத்தவரை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இடம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் போலியான இருப்பிட சான்றிதழ் தந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே சமயம் அகில இந்திய கோட்டா மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றிருந்ததை மறைத்து இங்கு கலந்தாய்வில் பங்கேற்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 9 பேர் இரண்டு மாநிலங்களில் போலியான இருப்பிட சான்றிதழ் பெற்றிருப்பதாக தகவல் கிடைத்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுகின்றனர், இதில் அரசு செய்வதற்கு ஒன்றுமே இல்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர் அதனை மீற முடியாத சூழலில் உள்ளதை மாணவர்கள், பெற்றோரிடம் கூறி வருகிறோம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications