ஆஹா பொருத்தம்! 'காரல் மார்க்ஸுக்கு சிலை வைக்கும் ஸ்டாலின்'.. இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் குஷி!
தமிழ்நாடு சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது: உலக மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களைப் பெருமைப்படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்கள். இழப்பதற்கென்று எதுவுமில்லை-பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர்! அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர்!

வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ் அவர்கள்.
உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல்வேறு மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான். அப்படிப்பட்ட 'எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சிந்தனையோடுதான், அவரது நினைவு நாளான கடந்த மார்ச் 14-ஆம் நாள், நம்முடைய நிதிலை அறிக்கையை இந்தப் பேரவையில் தாக்கல் செய்தோம்.
உலகம் உயர்வுபெற - பாட்டாளி வர்க்கம் மேன்மையுற - சமத்துவம் நிலைபெற பொதுவுடைமைக் கொள்கையைத் தந்திட்ட உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு, இந்தியப் பொதுவுடைமை இயக்கம் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் சென்னையில் சிலை நிறுவுவதில், கொள்கைத் தோழர்களாக - ‘எல்லார்க்கும் எல்லாம்’… https://t.co/J2kZQ8uMEW pic.twitter.com/DT0VEeNTj6
— M.K.Stalin (@mkstalin) April 3, 2025
இந்தியாவைப் பற்றி யாரும் எழுதாத காலத்தில், மிகச்சரியாக இந்தியாவைப் பற்றி எழுதியவர் அவர்தான். “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிற புவியியல் ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம். இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சிகரமான தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்" என்று எழுதியவர் காரல் மார்க்ஸ் அவர்கள்.
அதனால்தான் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து 1931-ஆம் ஆண்டே வெளியிட்டார் தந்தை பெரியார் அவர்கள். அத்தகைய மாமேதை மார்க்ஸ் அவர்களது உருவச் சிலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமையடைகிறேன்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் வரவேற்பு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: நமது 'திராவிட மாடல்’ ஆட்சி தத்துவத் தலைவர்களையும், தொண்டறச் செம்மல்களையும் வருகின்ற தலைமுறைகளுக்கு நினைவூட்டி, வரலாற்றில் பெருமைப்படுத்துவது மிகவும் சிறப்பான 'திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பம்சங்களாகும்! காரல் மார்க்ஸ் பற்றி வெகுமக்களிடையே தந்தை பெரியாரும், அவரது சுயமரியாதை இயக்கமும், அவர் நடத்திய 'குடிஅரசு’, 'விடுதலை’ ஏடுகளும் அவரது விஞ்ஞான சோஷலிசத்தை மக்களுக்கு விளக்கியதோடு, பல குழந்தைகளுக்குக் காரல் மார்க்ஸ் என்றே பெயரிட்டதுண்டு; அவர்களுக்கு இப்போது 90 வயதும் ஆகின்றது. எனவே, 'திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சியில், இது முக்கிய சாதனையாகும்!
திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன்: தமிழ்நாட்டில் காரல் மார்க்ஸ் சிலை திறக்கப்படும் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சோவியத் சோஷலிச ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு புரட்சிகளை உறுதியாக அடக்கியவர் ஸ்டாலின். பெரியார் இயக்கம் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவை உறுதியாக ஆதரித்தது; அதன் நினைவாகத்தான் கலைஞர் தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார். சோவியத் பயணம் மேற்கொண்ட பெரியார் ஸ்டாலின் பங்கேற்ற மே தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலகட்டத்தில்தான் ஸ்டாலின் அதிபர் பதவிக்கு வந்தார். எதிர்ப் புரட்சிகளை முறியடித்து சோவியத்தில் சோசியலிசத்தை உறுதிப்படுத்திய ஸ்டாலின் பெயரை த் தாங்கி நிற்கும் உலகின் ஒரே முதல்வர் திராவிட ஆட்சியின் முதல்வர் தான் : காரல் மார்க்சின் சிலையை திறந்து வைக்கும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது மிகச் சிறப்பு :மிகப் பொருத்தம்.
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்: உலகப் புகழ்பெற்ற பேரறிவாளர் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைக்கப்படும் என இன்று (03.04.2025) சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. பத்தொன்பாதம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் பிறந்தவர் காரல் மார்க்ஸ். கல்லூரியில் பயிலும் காலத்தில் தொலைநோக்கு பார்வையையும், கூர்த்த மதிநுட்பத்தையும் வெளிப்படுத்தி ஆய்வு உலகின் கவனத்தை ஈர்த்தவர். “இதுவரை இந்த உலகம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் பல்வேறு வகைகளில், கோணங்களில் இந்த உலகத்தைப் பற்றி வியாக்கானம் செய்துள்ளனர். ஆனால், நம் முன் உள்ள பிரச்சினை இந்த உலகை எப்படி மாற்றியமைப்பது என்பதுதான்” என்ற புரட்சிகர கருத்தை முன் வைத்து, அதற்கு செயல்வடிவம் காண வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
1848 பிப்ரவரி மாதம் அவரது இணையற்ற தோழர் பிரெடெரிக் ஏங்கல்ஸ்சுடன் இணைந்து கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளியிட்டு, சமூக வாழ்வில் “புதுமை படைக்கும் பொதுமை சமூகம் காண உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்” என்று அறைகூவி அழைத்தவர்.
சமூக பொருள் உற்பத்தி, விநியோகம் போன்றவைகளை ஆழ்ந்து ஆய்வு செய்து “மூலதனம்“ என்ற பெருநூலை சமூக புரட்சியாளர்களுக்கு ஆயுதமாக வழங்கியவர். காரல் மார்க்சின் நிகரற்ற தத்துவத்தை பழுதறக் கற்று, மாமேதை லெனின் தலைமையில் பொதுவுடைமை இயக்கம் யுகப்புரட்சி கண்டு புதிய சகாப்தத்தை தொடக்கி வைத்துள்ளது.
மாறி வரும் உலகில் மகத்தான புதுமை படைக்கும் உயிராற்றல் கொண்ட சமூக விஞ்ஞானத்தை படைத்து, வழங்கிய ஈடு இணையற்ற பேரறிவாளர் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை பெருநகரில் சிலை அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவும், முதலமைச்சர் அறிவிப்பும் வரலாற்றில் என்றென்றும் ஒளிர்ந்து நிற்கும் இந்த முடிவை அறிவித்த முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன்: மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை வருகை தரவுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மாமேதை மார்க்ஸ்க்கு சிலை அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். பெரு மகிழ்வும் நன்றியும்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: சென்னையில் கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது! பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் வாழும் பாட்டாளிகளின் தோழராக உருவெடுத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.












Click it and Unblock the Notifications