For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக தேர்தலில் பாஜக... பதுங்கித் தாக்குமா... பயந்து ஓடுமா?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர் மணி

பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகை உப்புச் சப்பில்லாமல் முடிந்து போனது.

கோவையில் ஈஎஸ்ஐ மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரியை துவக்கி வைக்க செவ்வாய்கிழமை மதியம் வந்த மோடி, பின்னர் கொடிசியா அரங்கில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்திலும் பேசினார். இது தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டமாகவே பார்க்கப்பட்டது. தமிழகத்தில் மோடி பாஜகவின் தேர்தல் சங்கை ஊதி, அக் கட்சியின் பிரச்சாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாரென்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் நாடு பாஜக தலைவர்களும், தொண்டர்களும் நிச்சயம் மோடி கூட்டணி பற்றி ஏதாவது அறிகுறிகளை தன்னுடைய பேச்சில் விட்டுச் செல்லுவாரென்றே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அந்தோ பரிதாபம் காவிக் கட்சி சொந்தங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!

TN election 2016: BJP's alliance strategy

தன்னுடைய பேச்சில் வழக்கம் போலவே காங்கிரசையும், பொத்தாம் பொதுவாக எதிர்கட்சிகளையும் தாக்கிய மோடி, தன் மீதுள்ள கோபத்தால் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் செய்து வருவதாகவும், இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். பின்னர் தலித்துக்களின் நலன் காக்கும் அரசுதான் தன்னுடைய அரசென்று மார் தட்டிக் கொண்ட பிரதமர் பாஜக வை தலித் விரோத கட்சியாக காட்ட எதிர்கட்சிகள் சதி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் பற்றி மோடி மூச்சே விடவில்லை. எந்தக் கட்சியுடன் கூட்டணி சேரப் போகிறோம் என்பதை அறிவிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. அதற்கான ஓரிரு சமிக்ஞைகளையாவது விட்டுச் செல்லுவாரென்று பார்த்தால் அதுவும் இல்லை. தமிழ்நாட்டைப் பாதிக்கும் விஷயங்கள் எவையென்று தமக்குத் தெரியுமென்று ஒரு வரியுடன் நிறுத்திக் கொண்டார் மோடி. அதற்கு மேல் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை!

பிரதமரின் தகுதிக்கு, அவர் வகிக்கும் உயர் பதவிக்கு பிராந்திய கட்சிகளையோ மற்ற கட்சிகளையோ அவர் சகட்டு மேனிக்குத் திட்ட மாட்டார் என்கின்றனர் தமிழக பாஜகவினர். சரிதான்... ஆனால் இந்த கோவை கூட்டம் பாஜக வின் தேர்தல் பிரச்சாரத்தின் முதற் பொதுக் கூட்டமென்று பெரிதாகப் பேசி விட்டு, மோடி இந்தக் கூட்டத்தில் ஒரு வார்த்தைக் கூட தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றியோ அல்லது கூட்டணி பற்றியோ பேசாதது என்ன மாதிரியான அரசியல் வியூகம் என்பது தமிழக பாஜக வுக்குத் தான் வெளிச்சம்!

மேலும் தன்னுடைய உரையில் ஒரு இடத்தில் கூட தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுடனிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பற்றி ஒரு வார்த்தை கூட மோடி பேசவில்லை. எல்லோரையும் அரவணைத்துப் போகும் அரசியலை நடத்துவதில் பாஜக வுக்கும், குறிப்பாக மோடிக்கும் இருக்கும் அளப்பறிய 'அக்கறையை' இது காட்டுகிறது.

மாநில அரசியல் கட்சிகளை சாடும் லாவணிக் கச்சேரியில் மோடி ஈடுபட மாட்டாரென்கின்றர் தமிழக பாஜக தலைவர்கள். மற்ற மாநிலங்களில் உள்ள பிராந்தியக் கட்சித் தலைவர்களை மோடி வறுத்தெடுப்பதை நினைவில் கொண்டால் இது சிரிப்பையே வரவழைக்கிறது.

TN election 2016: BJP's alliance strategy

மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஒரு ட்வீட் செய்தி போட்டார். அதாவது, 'வரும் தேர்தலில் திமுக முதலமைச்சர் வேட்பாளராக கருணாநிதி இருக்க மாட்டார். ஸ்டாலின் தான இருப்பார். ஆகவே திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்' என்கிறது அந்த ட்வீட்.

இது குட்டையை குழப்பும் வேலைதான் என்றாலும் இந்த ட்வீட்டை தேர்தல் நேரம் என்பதால் நாம் முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. இதனை சில நாட்களுக்கு முன்பாக திருவாரூரில் திமுக தலைவர் மு.கருணாநிதி சொன்னதுடன் நினைத்துப் பார்த்தால் வேறு விஷயங்களும் புரியம். ‘தமிழ் நாட்டில் நிலவும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணியில் சேரலாம்' என்றார் அவர். வழக்கமான மதச்சார்பற்ற கட்சிகள் என்ற வார்த்தைகள் எல்லாம் கருணாநிதியின் பேச்சில் இல்லை. இதையும் மோடி திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் விமர்சிக்காமல் விட்டதையும், பார்த்தால் பாஜக வேறு கூட்டணிகளுக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.

சுப்பிரமணியன் சாமியின் ட்வீட் வேறோர் சாத்தியக் கூற்றையும் கொண்டு வந்திருக்கிறது. திமுக வுடன் கூட்டணி என்று சொல்லுவதன் மூலம் ஜெயலலிதாவை சாமி சீண்டிப் பார்க்கிறார். என்னதான் சிறுபான்மையினர் வாக்குகள் போய்விடும் என்றாலும் மத்தியில் ஆளும் ஒரு கட்சியுடன் திமுக சேர்வதை ஜெயலலிதா விரும்ப மாட்டாரென்றும், இது ஜெயலலிதா வை வழிக்கு கொணர பாஜக குறிப்பாக ஆர்எஸ்எஸ் வகுத்திருக்கும் ஒரு வியூகம் என்றும் பார்க்கப்படுகின்றது.

‘நிச்சயம் இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய ஏதாவது ஓர் பெரிய கட்சியுடன் இணைந்துதான் பாஜக போட்டியிடும். இல்லாவிட்டால் ஒரு இடம் கூட வெல்ல முடியாதென்பது பாஜக வின் மத்திய தலைமைக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இரண்டு திராவிட கட்சிகளுடனான கூட்டணிக்காகவும் தங்களது கதவுகளை தாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம் என்பதை சூட்சுமமாக உணர்த்துவதுதான் மோடியின் பேச்சு' என்கிறார் தற்போது பாஜக வில் ஓரங் கட்டப் பட்டிருக்கும் தலைவர் ஒருவர்.

அரசியிலில் யாருக்கும் வெட்கம் இல்லை, யாரும் யாருடனும் சேருவார்கள்தான். இதில் பாஜக மட்டும் விதிவிலக்கா என்ன? மதச்சார்பின்மை பற்றி வாய் கிழிய பேசும் திமுக தலைவர் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் பாஜக கூட்டணியில் மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்தவர்தான். 2002 ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்கள் பற்றி திரும்பத் திரும்ப கேள்வி கேட்கப் பட்டபோதெல்லாம் அது ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்சினையென்றே வியாக்கியானம் கொடுத்தவர்தான் கருணாநிதி.

ஜெயலலிதா வைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். அப்படிப் பார்த்தால் தன்னுடைய காய்களை பாஜக சரியாகவே நகர்த்திக் கொண்டிருக்கிறதென்றுதான் கூற வேண்டும். பாஜக பதுங்கிக் கொண்டிருக்கிறதென்றும் சொல்லலாம் .... பதுங்கும் பாஜக பாய்ந்து தாக்கப் போகிறதா அல்லது வெற்றுச் சவடால் வாய்ப் பேச்சால் மண்ணைக் கவ்வப் போகிறதா என்பது இன்னும் சில வாரங்களில் வெளிச்சத்துக்கு வந்திவிடும்!

English summary
Columnist Mani is analysing the alliance chances for BJP in forthcoming assembly elections in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X