உச்சநீதிமன்றம் சொன்ன திட்டம் காவிரி மேலாண்மை வாரியம் தான்... தமிழக அரசு அறிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : காவிரி நீரைபங்கிட்டுக் கொள்வதை கண்காணிக்க ஒரு திட்டம் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட விஷயங்கள் என்னவென்று அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது : காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த இறுதி ஆணையினை எதிர்த்து கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. தமிழக அரசும் ஒரு சில பாதகமான அம்சங்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு சிவில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

உச்சநீதிமன்றத்தின் 16.2.2018ம் நாளிட்ட தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் 22.2.2018 அன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை 16.2.2018ல் இருந்து ஆறு வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசின் முயற்சிகள்

அரசின் முயற்சிகள்

மேலும் 24.2.2018 அன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளில் மானிய விலையில் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்ட துவக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமரிடமும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய காலத்திற்குள் அமைத்துத் தருமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக 25.2.2018 அன்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகம், நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும கங்கை புனரமைப்பு அமைச்சர் சென்னைக்கு வந்த போது அவரிடம் இதனையே வலியுறுத்தி நேரில் கடிதம் அளிக்கப்பட்டது. மேலும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் தலைமையில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டது.

மத்திய அரசு அழைப்பு

மத்திய அரசு அழைப்பு

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையினை செயல்படுத்துவது குறித்து மத்திய நீர்வள ஆதாரத்துறை செயலாளர் 9.3.2018 அன்று அழைப்பு விடுத்திருந்தார். டெல்லியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் நீர்வள ஆதாரத்துறை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் மாநிலங்களின் கருத்துகளை தெரிவிக்குமாறு 5.3.2018 நாளிட்ட கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் அறிவுறுத்தல்

முதல்வர் அறிவுறுத்தல்

மத்திய அரசு கூட்டியுள்ள கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட வேண்டிய தமிழ்நாட்டின் நிலை குறித்து விவாதிக்க முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் 7.3.2018 அன்று கலந்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு கூட்டியுள்ள கூட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படியும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ஆறு வார காலக் கெடுவுக்குள் மத்திய அரசுஅமைப்பதற்கு வலியுறுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

தீர்ப்பில் தெளிவாக உள்ளது

தீர்ப்பில் தெளிவாக உள்ளது

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் ஆணைகளை செயல்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள திட்டம் என்னவென்பதை 1956ல் பன்மாநில நதிநீர் தாவா சட்டம் பிரிவு 6(A) (2)ல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி திட்டம் என்பது நடுவர் மன்ற இறுதி ஆணையையும், அதிகார வரம்புகள் மற்றும்செயல்பாடுகள் ஆகியன வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் 16.2.2018 நாளிட்ட தீர்ப்பில் பத்தி 397ல் நீர்ப்பங்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதைத் தவிர காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள இதர இனங்களில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இது தவிர, பத்தி 399ல் காவிரி நடுவர் மன்றம், நீர் முறைப்படுத்தும் குழு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் உதவியோடு நீர் விடுவிப்பதை மாதாந்திர வாரியாக கண்காணிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் தான்

காவிரி மேலாண்மை வாரியம் தான்

மேற்கண்ட தீர்ப்பின் படி உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட திட்டம் என்பது காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தான் என்றும் அந்த ஆணையில் அதிகாரிகள் வரம்புகளுடன் இந்த அமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என்றும் தெளிவாக உள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தெளிவாக நேற்றைய கூட்டத்தில் எடுத்து வைக்கப்பட்டது.

எம்பிகளின் தொடர் போராட்டம்

எம்பிகளின் தொடர் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உரிமையை நிலைநாட்டுவோம்

உரிமையை நிலைநாட்டுவோம்

காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நீரை ஆதாரமாக கொண்ட தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN government says the SC mentioned Scheme is nothing but Cauvery management board, so urges centre to form CMB as per SC order within 6 weeks of time.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற