For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதற்றத்திற்கு நடுவிலும் பசியோடு வருபவர்களுக்கு எல்லையில் உணவு கொடுக்கும் மக்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஓசூர்: கர்நாடகா - தமிழ்நாடு எல்லை பகுதியில் பதற்றம் உருவாகி உள்ள நிலையில் இரு மாநில மக்களிடையே இருக்கும் பகைமையை மறக்கடிக்கும் விதமாக கர்நாடகா - தமிழ் நாடு எல்லையான அத்திப்பள்ளியில், ஜூஜூவாடியில் உள்ள கருமாரியம்மன் கோயில் சார்பாக எல்லையை கடக்கும் மக்களுக்கு பசியாற உணவு வழங்கப்படுகிறது.

காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பெங்களூருவில் பெரும் வன்முறை வெடித்தது. இதனால் இரு மாநிலங்களிடையே உள்ள மக்கள் பகைமை உணர்வுடன் ஒருவருக்கொருவர் பார்த்து வருகின்றனர்.

TN - Karnataka borders sees the humanity

இந்த நிலையால் கர்நாடகா - தமிழ் நாடு எல்லைகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக உணவகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் எல்லையை கடந்து வரும் மக்கள் பசியோடு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பதற்றம் நிறைந்த எல்லை

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து கர்நாடகவில் கலவரம் தொடங்கியது. கடந்த 12 நாட்களுக்கும் மேலாக இரு மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் அதிக பதற்றம் உள்ள எல்லையாக தமிழக - கர்நாடக எல்லை மாறிவிட்டது.

கர்நாடகாவில் பதற்றம்

கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ச்சியாக தமிழக அரசு பேருந்துகள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஆனால், தமிழக பயணிகள் ஓசூருக்குப் போய் அங்கிருந்து கர்நாடக பேருந்துகளை பிடித்து பயணம் போனார்கள். இப்போது அதுவும் இல்லை. கடந்த 11ஆம் தேதி மட்டும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் அன்று இரவு முதல் மீண்டும் நிறுத்தப்பட்டன.

சொந்த ஊர் திரும்பும் மக்கள்

அங்கு பதற்றம் தணிந்த நிலையிலும் தமிழக அரசு பேருந்துகள் பெங்களூருவுக்கு இயக்கப்படவில்லை. அதே போல கடந்த 12ஆம் தேதி கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் 12ஆம் தேதி முதல் கர்நாடக அரசு பஸ்களும் ஓசூருக்கு இயக்கப்படவில்லை. கர்நாடக வன்முறைகளால் அங்கிருந்து வரும் ஏராளமான தமிழக மக்கள் இன்னும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

எல்லை கடக்கும் மக்கள்

தமிழக அரசு பேருந்துகள் மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி வரையிலும், கர்நாடக அரசு பேருந்துகள் அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் எல்லையான அத்திப்பள்ளி வரை வருகிறார்கள். அங்கிருந்து தமிழக எல்லையான ஜூஜூவாடி வரையில் நடந்து வந்து அங்கிருந்து பேருந்துகளில் ஏறி தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

உணவு, தண்ணீர் வசதி

கர்நாடகாவில் இருந்து வரும் தமிழர்களுக்கு தேவையான உணவுகள், தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள் மற்றும் ஓசூர் நகராட்சி சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இரு மாநில மக்களிடையே குறிப்பாக எல்லையில் பதற்றத்தை குறைக்கும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜூஜூவாடி கருமாரியம்மன் கோயில் சார்பாக பசியுடன் வரும் மக்களுக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 3 பெரிய தொட்டியில் தண்ணீர், பெரிய அண்டாவில் உணவு கொண்டு வரப்பட்டு அத்திப்பள்ளி அருகே கொடுக்கப்பட்டது.

பசியாறும் மக்கள்

இந்த உணவு பசியோடு வரும் மக்களுக்கு அமிர்தமாக கண்களுக்குத் தெரிகிறது. பசியோடு வரும் எங்களை அழைத்து சிலர் பசியோடு இருக்கிறீர்களா, இந்தாங்க இத சப்பிடுங்கன்னு ஒரு சிறிய தட்டில், உணவை கொடுத்தனர்.இவர்களின் சேவையை பார்த்து நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். இது இரு மாநில மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்கும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

காவல் காக்கும் காவல்துறையினர்

தமிழகத்தில் நேற்றைய முழு அடைப்பின் காரணமாக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெங்களூரு மத்திய மண்டல ஐ.ஜி. சீமந்தகுமார், பெங்களூரு எஸ்.பி. ஆமீத்சிங் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அந்தப்பக்கமும், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இந்தப்பக்கமும் காவல் காத்தனர். இன்னமும் பதற்றத்துடனேயே காணப்படுகிறது தமிழக - கர்நாடக எல்லைகள்.

English summary
A temple in Tamil Nadu and Karnakta is offerng food to the affected people in the violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X