For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாக்டருக்குப் படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? - பெருந்தலைவர் காமராசர்

By Shankar
Google Oneindia Tamil News

உலகின் மிகச் சிறந்த, மிக நேர்மையான, மக்கள் நலனைத் தவிர வேறொன்றையும் நினைக்காத, கடைசி நாள் வரை தனக்கென ஒரு குடும்பமே வைத்துக் கொள்ளாத தன்னிகரில்லா காமராஜரை தலைவராக, முதல்வராக வாய்க்கப் பெற்றது இந்த தமிழ்ச் சமூகம்தான்.

காமராஜர் எப்படிப்பட்டவர் என்பதையெல்லாம் நிறையப் படித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மூட நம்பிக்கை, சாதி ஒழிப்பு பற்றிய தந்தை பெரியாரின் கருத்துக்களை காமராஜரைப் போல வேறு யாராலும் சொல்லியிருக்க முடியுமா தெரியவில்லை.

இதோ பெருந்தலைவரின் வார்த்தைகளில்..

"நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை.

பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.

கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.

மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்?

கடவுள் இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா?

டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சினீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுபோச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இஞ்சினியரும் ஆகலாம்.டாக்டரும் ஆகலாம்னேன்!

Today Great Leader Kamaraj's death anniversary

கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், ஜாதி வித்தியாசம் தன்னாலே அகன்றுவிடும். தாழ்த்தப்பட்ட ஒருவர் கலெக்டராகிவிட்டால், 'நான் உயர்ந்த சாதி ஆகையால் நான் அவர் கீழ் வேலை செய்ய மாட்டேன்' என்று யாரும் கூற முடியாதுன்னேன்.

உயர்ந்த சாதின்னு கூறிக் கொள்பவன் தானாவே கலெக்டர் உத்தரவுக்கு வேலை செய்யறான். ஆகவே, கல்வியே இந்த ஜாதிய கொடுமைய போக்க வழிவகுக்கும்ன்னேன்!"

-பேச்சுதான் செயல்.. செயல்தான் பேச்சு என வாழ்ந்தவர் காமராஜர். அதனால்தான், கல்வியின் முக்கியத்துவத்தைச் சொன்னதோடு நில்லாமல், ராஜாஜி காலத்தில் குலக்கல்வி திட்டத்துக்காக மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். இருபத்தேழு ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்துவைத்தார்.

இன்று உயர்வகுப்பினர் மட்டுமே ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் ஐஐடி நிறுவனத்தை, அனைத்து வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்காகவும் தொடங்கிய புண்ணியவான் காமராஜர்.

நீங்கள் அடிக்கடி படித்த விஷயம்தான் என்றாலும், சூழலின் முக்கியத்துவம் கருதி இதனை மீண்டும் பதிவு செய்கிறோம். ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், இரு முறை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெருந்தலைவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம், சில புத்தகங்கள் மட்டுமே!

"கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் காமராஜர் வாழ்த்துப் பாட வேண்டும். சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"

- என இந்த பச்சைத் தமிழரை உச்சிமோந்தவர் தந்தை பெரியார்.

1903-ல் பிறந்த பெருந்தலைவர், 1975-ம் ஆண்டு, தான் தலைவராக ஏற்றுக் கொண்ட காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2-ல், தன் 72வயது வயதில் மரணமடைந்தார்.

இன்று அவரது 39வது நினைவு தினம்!

பெருமைக்குரிய நம் தமிழ்ப் பெருந்தலைவரை நினைவு கூறுவோம்!

English summary
Today is Great Leader Kamaraj's 39th birth anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X